[X] Close

பெண் எழுத்து: ஒரு தாயின் போராட்டம்


  • kamadenu
  • Posted: 05 May, 2019 16:00 pm
  • அ+ அ-

லக்ஷ்மி பாலகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தில் கூறியிருப்பதைப் போல், ‘அதன்பின் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்’ என்று எண்டு கார்டு போட முடியாத வாழ்வு சிலருக்கு வரமளிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைமுறையின் நிம்மதிப் பெருமூச்சே இந்தப் புத்தகம். ஆட்டிசம் என்னும் தன்முனைப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தன் மகனைப் பற்றி ஒரு தாய் கூறும் வாழ்க்கைப் பக்கங்கள்தாம் இப்புத்தகம்.

வேதனையை, வாழ்க்கைப் போராட் டத்தை, இவ்வுலகம் தங்கள் முன்வைத்த சவாலை எதிர்கொண்ட தன்னம்பிக்கை தாயின் நிஜமான சொற்களே இப்புத்தகம். ஆச்சரியம் என்னவென்றால் சுவாரசியமான நாவலின் விவரிப்பு இந்தப் புத்தகம் முழுவதும் விரிந்திருப்பதுதான்.

வலி தரும் வார்த்தைகள்

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெற்றோர் இருவரும் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கிய அலைக்கழிப்புகள், தன் மகனுக்கு இசை உணரும் சிறப்புத் தகுதிக்காகவும் அது சம்பந்தப்பட்ட அலைச்சல்களும் புரிந்துகொள்ள முடியாத மனிதர்களிடம் தன் மகனின் திறமையை நிரூபிக்கப் பாடுபட்ட வாழ்வும் வாசகர் கண்முன் படமாய் விரிகின்றன.

ஆனால், அத்தனையும் உண்மை என்னும்போது வலிக்கிறது. தாங்கள் சொல்லித்தரும் விஷயத்தைத் தன் மகனால் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது என்பதைப் பெற்றோர் உணரும் தருணத்தை வாசகரும் உணரும்படி எழுதியிருப்பது லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் எழுத்துத் திறனுக்குச் சான்று. புத்தகத்தின் பல இடங்களில் அன்னை, ஆசிரியர் என்பதையும் தாண்டி சிறப்புக் குழந்தைகளின் மருத்துவராகவும் லக்ஷ்மி மிளிர்கிறார்.

கனிவமுதன் என்ற குழந்தை பிறந்ததிலிருந்து தொடங்கிய போராட்டம்தான் புத்தகமாக விரிந்திருக்கிறது. புத்தகத்தில் ஆங்கங்கே கனியின் ஒளிப்படங்களை இடம்பெறச் செய்தது நம் மனத்தோடு மிக நெருக்கமாக இப்புத்தகம் ஒட்டுவதற்குக் காரணமாகிறது.

மேலோங்கும் குற்றவுணர்வு

குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் பிறந்து வளரும் வீட்டி லேயே ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆட்டிசம் உள்ள குழந்தை வளரும் வீட்டில் இல்லாத பிரச்சினைகளா? அது உச்சக்கட்டமாகி, குழந்தையின் பெற்றோர் மனத்தளர்வு அடைந்து அதற்காக அவர்கள் கவுன்சலிங் சென்றதையும் ஒளிவு மறைவின்றி பேசுகிறார் லக்ஷ்மி. சுற்றிலும் மனிதர்கள்தாம்.

அவர்களின் பார்வைக்குத் தன் மகன் எப்படித் தென்பட்டான் என்பதைப் புத்தக ஆசிரியர் விவரிக்கும்போது இந்தச் சமூகத்தின் மீது கோபம் வருகிறது. ஆனால், அச்சமூகத்தில் நாமும் ஓர் அங்கம் என்னும்போது குற்ற உணர்வுதான் மேலோங்குகிறது.  இப்படி ஒரு வலியைப் பகிர்ந்துகொள்ளும் வேளையிலும் அங்கங்கே ‘மிஸ்ஸியம்மா’ படத்து நம்பியார் உதாரணமெல்லாம் லக்ஷ்மி கூறியிருப்பது அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகிறது. அது சரி... வலி உணர்ந்தவன்தானே சிரிக்கவும் முடியும்.

அனைவருக்குமான புத்தகம்

காலையில் எழும்போது எதற்காக இன்று எழ வேண்டும் என்ற பொதுவான கேள்வி பல சிக்கல்களுக்குள் தம்மைப் பொதிந்துவைத்திருக்கும் சாதாரண மனிதர்களுக்கு விளையாட்டாகத் தோன்றலாம். ஆனால், தன்முனைப்புக் குறைபாடு கொண்ட மனிதர்களுக்கு அதுவே முக்கியமான ஒன்று. அக்கேள்வியைக் கேட்பதன் மூலம் வாழ்வின் பெரும்பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறார் லக்ஷ்மி.

குறையென்று எண்ணி நம்மைப் புறந்தள்ளும் இச்சமூகத்தின் முன்னால் ஒதுங்கி ஒதுங்கி நாம் தீவாகிவிடக் கூடாது. நமக்கான மனிதர்களை இனம் கண்டு நாம் கைகுலுக்கிப் பழகலாம் என ஆசிரியர் கூறினாலும் தன்முனைப்புக் குறைபாடு குழந்தைகளுக்கானதல்ல; தன்முனைப்பில் தீவிரமாய் இருந்து சக மனிதர்களை நேசிக்காதவர்களுக்கானது இந்தப் புத்தகம் என்பதை அழுத்தம் திருத்தமாய்ச் சொல்கிறார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.

- கணேசகுமாரன்

எழுதாப் பயணம்

ஓர் அன்னையின் பார்வையில்

ஆட்டிச உலகம்

ஆசிரியர்:

லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

வெளியீடு:

கனி புக்ஸ், மனை எண்: 84/1, ஐஸ்வர்யா தெரு, ஷீலா நகர், மடிப்பாக்கம், சென்னை-600091.

தொடர்புக்கு: 9940203132.

விலை: ரூ.100/-

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close