[X] Close

அன்றொரு நாள் இதே நிலவில் 04: எண்ணெய்க் கலயத்தைக் காலிசெய்த மாப்பிள்ளை


04

  • kamadenu
  • Posted: 05 May, 2019 16:01 pm
  • அ+ அ-

-பாரததேவி

கணேசனுக்கும் பாக்கியத்துக்கும் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்களாகிவிட்டன. கணேசன் கணவனாக வந்ததில் பாக்கியத்துக்கு இஷ்டமே இல்லை. பாக்கியம் இடுப்பும் எடுப்புமாக அழகாக இருப்பாள். ஆனால், கணேசனோ கறுப்பிலும் அட்டக் கறுப்பு.

மூக்கும் கொஞ்சம் சப்பை. இதனால்தான் அவனை இவளுக்காகப் பேசும்போதே வேண்டாமென்று தன் அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடினாள். ஆனால், கணேசன் இவளுக்கு அம்மான் (மாமன்) என்பதால் சொந்தம் விட்டுப்போகக் கூடாதென்று அவள் அய்யாவும் மற்ற சொந்த பந்தமும் கூடி கல்யாணத்தைப் பேசி முடித்துவிட்டனர்.

பாக்கியம் அழகில் மட்டுமில்லை; வேலையிலும் சமத்தி. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வந்துவிடுவாள். இதனால் ஊரிலிருக்கும் இளவட்டங்கள் எல்லாம் அவள் மீது ஒரு கண் வைத்திருந்தார்கள். இதனாலேயே அவள் வேலைக்குப் போகுமிடங்களுக்கு எல்லாம் இவர்களும் போவார்கள். இவள் தண்ணீர்ப் பாய்ச்ச வந்துவிட்டால் போதும். காளையின் மீது கைபோட்டு சுறுசுறுப்பாக இறைப்பார்கள்.

வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். இவள் விதைபோட வந்துவிட்டால் போதும். பூமியின் ஆழத்தையே தோண்டுவதுபோல் உழுது, அவள் பார்வையைத் தங்கள் பக்கம் கவர முயல்வார்கள். இப்படி அழகழகான இளைஞர்கள் பாக்கியத்தை எப்படியாவது தங்கள் பக்கம் கவர வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கையில் கணேசனுக்கு அவள் பொண்டாட்டியாகிப் போனதில் ஊர் எளவட்டங்களுக்கு ரொம்ப வருத்தம்.

கோபத்தால் விழுந்த ‘முடிச்சு’

அவரவர் மனத்தில் வருத்தமிருந்தாலும் கணேசனைப் பார்க்கும்போதெல்லாம், “ஏலே கணேசா. நம்ம ஊரு எளவட்டங்க எல்லாம் அவளைக் கட்டணுமின்னு நினைச்சிக்கிட்டு இருக்க அவ உனக்குல்ல பொண்டாட்டியா வந்துட்டா. நீ கொடுத்துவச்சவண்டா” என்று சொல்லச் சொல்ல கணேசனும் தன் பொண்டாட்டியை எப்படியாவது ஒரு தடவை பார்த்துப் பேசிவிட வேண்டுமின்று நினைத்தான்.

அப்போதெல்லாம் இரவில்தான் கல்யாணம் முடிப்பார்கள். வானத்தில் வரும் நிலவு வெளிச்சம் கொஞ்சம் வெளிறித் தெரியும் என்பதால் மணவறையில் இரண்டு தீவட்டிகளைத் துணிவெளுப்பவர்கள் பிடித்துக்கொள்ள அந்த வெளிச்சத்தில் கல்யாணம் நடக்கும். தீவட்டி வெளிச்சத்தில் எப்படியாவது பாக்கியத்தின் முகத்தைப் பார்க்கக் கணேசன் தீவிரமாக முயன்றான். ஆனால், அவள் திரும்பவே இல்லை. தண்டட்டி, பாம்படம் அணிந்த அவளது காதுதான் அவனுக்குத் தெரிந்தது. கணேசனுக்கு செமையான கோபம். அதனால், பாக்கியம் கழுத்தில் மூன்று முடிச்சு போடுவதற்குப் பதில் ஏழெட்டு என்று ‘படி’ முடிசை இறுக்கமாகப் போட்டுவிட்டான்.

மாமியார் சொன்ன யோசனை

எப்படியோ கல்யாணம் முடிந்துவிட்டது. இனி மூன்று மாதங்கள் மாப்பிள்ளைச் சோறு சாப்பிட வேண்டும். விடியற்காலையில் ஒரு சொம்பு பால் கொண்டுவந்து கொடுக்கும் மாமியார் கோமதி, “ஏம்யா மருமவனே, நீரு எம்மவ கழுத்துல தாலி கட்டுனாலும்கூட அவ சொணக்கம் இன்னும் தீரல. உம்ம மூக்கு வேற சத்த சொறுவுன மூக்கா இருக்கா. அதேன் அவ உங்க மொகத்தைப் பாக்கச் சங்கடப்படுதா.

 நீரு பல்லு விளக்கிக் குளிக்கப் போகையில அந்த மூக்கச் செத்த உருவிவிடும். மூணு மாத்தைக்கு வெய்யிலில கிடந்து வேலை செய்யாம, கமலை இறைக்க மட்டும் போரும். எதுக்குச் சொல்லுதேன்னா பூவரசு மரத்து நெனலுயே வெயிலு படாம இறைக்கலாம். அப்படி இருந்தா கருத்த ஆளு செத்த புது நிறமா ஆயிருவீரு. இறைச்சிட்டு வந்து படுக்கும்போது மேலு, கை, காலு மொத்தம் தேங்காய் எண்ணெய்யைத் தேய்ச்சிட்டுப் படும்.

தேங்காய் எண்ணெய் தோலிக்கு நெறம் கொடுக்குமில்ல. இப்படியே மூணு மாத்தைக்கு மாப்பிள்ளைச் சோறு திங்கதண்டியும் செஞ்சீருன்னா பெரிய மறுவீடு வரங்குள்ளயும் நீரு செவப்பு உருட்டையா சீனிக்கட்டியா ஆயிருவீரு” என்று சொல்லவும் கணேசனுக்கு சந்தோசம் பொறுக்கவில்லை.

பெரிய மறுவீடு வருவதற்குள் எப்படியும் சிவப்பாகிவிட வேண்டும் என்று தினமும் குளிக்கும்போது மூக்கை உருவி உருவி அவன் மூக்கே வீங்கிவிட்டது. கலயத்தில் ஒரு வருசத்துக்கு ஆட்டி வைத்திருந்த தேங்காய் எண்ணெய்யை மூன்று மாதத்திலேயே காலி பண்ணிவிட்டான். இன்னும் மறுவீட்டுக்கு இரண்டு நாட்களே இருந்தன.

மாப்பிள்ளையின் தவிப்பு

தலைக்கு எண்ணெய் தேய்க்கப்போன கோமதி வெறும் கலயத்தைப் பார்த்து அதிர்ந்தாள். ‘நித்தமும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யைத் தேயுங்கய்யான்னு சொன்னதுக்கு ஒரு கலயத்து எண்ணெய் மொத்தமும் தேய்ச்சி எண்ணெய்யவேல்ல அருவாக்கிப் போட்டான். இப்ப மறுவீடு வேற வருது. நானும் தேங்காய் எண்ணெய்க்கு எங்க போவட்டும்.

ரெண்டு நாளைக்குள்ள மறுவீட்ட வச்சிக்கிட்டு எண்ணெய்ய ஆட்டவும் முடியாது (அப்போதெல்லாம் எல்லா எண்ணெய் வகைகளையும் செக்கில்தான் ஆட்டியெடுப்பார்கள்). என்ன செய்யலாம்? நம்ம பெரியாத்தா மவ சங்கினிகிட்ட ஒரு கலய எண்ணெய கடனா கேப்போம். பெறவு ஆட்டக் கொடுத்திருவோம்’ என்று முடிவு செய்தாள்.

மறுவீடு எப்போது வரும் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருந்தான் கணேசன். இதில் அவன் சேத்திக்காரர்கள் வேறு, “ஏலேய். இன்னைக்கு உன் பொண்டாட்டி களைவெட்ட வந்திருந்தா. பார்த்தா பசுங்கிளி கணக்காவில்ல இருக்கா. நானா இருந்தா மூணு மாத்தைக்கி வைக்கித மறுவீட்ட ரெண்டு மாத்தையிலேயே வைங்கன்னு மல்லுக்கட்டிருவேன்” என்று சொல்ல இன்னொருவன், “இன்னுமாடா உன் பொண்டாட்டிய பார்க்காம இருக்கே.

 நேத்து அவ நம்ம சஞ்சீவியண்ணன் பிஞ்சையில ஒத்தயில இல்ல மருதாணி பிடுங்கிட்டு இருந்தா. இப்படித் தெரிஞ்சாலும் உன்கிட்ட வந்து கையைக் காட்டி, அவ இருக்க திக்கமா போவவில்ல சொல்லியிருப்பேன்” என்று ஆளாளுக்கு உசுப்பேத்திவிட, கணேசனுக்குத் தாங்க முடியவில்லை. எப்படியாவது பாக்கியத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று அவள் வேலைக்குப் போகும் திக்கத்தை அடுத்தவர்களிடம் கேட்டுக் கேட்டு அங்கெல்லாம் போய்ப் பார்த்தான்.

ஆனால், இவன் போய்ப் பார்க்கும் இரண்டொரு இடத்தில் அவளைக் காணவில்லை. அப்படியே அவளைச் சில இடங்களில் பார்த்தாலும் பத்துப் பேரோடு களைவெட்டிக்கொண்டோ கருதறுத்துக்கொண்டோ இருப்பாள். இவளின் சேத்திக்காரிகள், “இந்தா பாக்கியம். உம் புருசன் பதுங்கி வந்திருக்கான்.

நீயும் அப்படியே தண்ணிக் குடிக்காப்புல போயி பாத்து ரெண்டு வார்த்தைப் பேசிட்டு வந்துரு. பாவம் கணேச அண்ணன். உனக்குத் தாலி கட்டுன நாளையில் இருந்து எப்படியும் உங்கிட்ட பேசணுமின்னு மய்யம் பறக்கான், மருவி தவிக்கான்” என்று சொல்லவும் பாக்கியத்தின் கண்களில் தீப்பொறி பறந்தது.

“இந்தா இப்ப வாய மூடப்போறீகளா இல்ல இந்நேரம் வரைக்கும் வேலை செஞ்சதுக்குக் கொத்தும் வேண்டாம் கூலியும் வேண்டாமின்னு நான் போயிருவேன். என்ன சொல்லுதீக” என்று ஒரு அதட்டல் போடவும் சேத்திக்காரிகள் வாயை மூடிக்கொண்டார்கள். கணேசனுக்குப் பொண்டாட்டி மீது கோபமென்றால் இந்த மட்டுமில்லை. இன்னும் ரெண்டு நாளு தான. மறுவீடு வெச்ச பெறவு என்கூடப் பேசித்தான ஆவணும். அப்ப வச்சிக்கிடுதேன் என்று நெஞ்சுக்குள் வன்மம் வைத்துக்கொண்டு அலைந்தான்.

(நிலா உதிக்கும்)

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close