[X] Close

சுற்றுலா போகலாம்: அரிச்சமுனையின் புதிய அவதாரம்!


  • kamadenu
  • Posted: 05 May, 2019 15:59 pm
  • அ+ அ-

-டி.கார்த்திக்

சூறாவளியில் சிக்கித் தடம் தெரியாமல் 55 ஆண்டுகளுக்கு முன்பு உருக் குலைந்த தீவுக்குள் இன்றைக்கு நம்பிக்கைக் கீற்றாய் வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது. கூட்டம் கூட்டமாக அங்கே மக்கள் வந்து செல்கிறார்கள். தமிழகத்தின் புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுத்திருக்கும் அந்த ஊர், தென் கோடியில் ஒரு காலத்தில் செழித்திருந்து, சட்டென்று காணாமல்போய், இன்று உயிர்த்தெழக் காத்திருக்கும் தனுஷ்கோடி.

ராமேசுவரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு ஆரவாரமற்ற தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போதே, தனுஷ்கோடியைப் பற்றியுள்ள சோகம் மனத்துக்குள் ஊடுருவி அமைதியாக்கிவிடுகிறது. மணல் குன்றுகளும் புதர்களும் ஒருசேரக் காட்சியளிக்கும் சாலையைக் கடந்துபோகும்போது, செவிப் பறைகளைக் கிழிக்கும் அளவுக்குக் காற்று பாய்ந்துவருகிறது.

முகுந்தராயர்சத்திரத்தை நோக்கிச் செல்லும்போதே சற்றுத் தொலைவில் கடல் தெரிகிறது. குவிந்துகிடக்கும் மணல் திட்டுகளை அதன் எதிரொளி பொன்னிறமாக்கி ஜொலிக்கவைக்கிறது. அந்த ரம்மியமான காட்சிகளுக்கு மத்தியில் வடுக்களாக மாறிப்போன தனுஷ்கோடியின் பாழடைந்த கட்டிடங்கள் பாதி மண்ணுக்குள் புதைந்தபடி எட்டிப் பார்க்கின்றன.

கண் நிறைக்கும் கடல்

தனுஷ்கோடியை நெருங்க நெருங்க இருபுறங்களிலும் சாலையை நெருங்கிவரும் கடல், இறுதியில் ஒரு முனையை அடைகிறது. அந்த முனையை அடையும்போது நம் கண்முன்னே பெரும் நீர்ப் பரப்பாய் விரிகிறது நீலக்கடல். அந்த முனைக்கு ‘அரிச்சல்முனை’ என்பது இப்பகுதியில் வழங்கப்படும் வழக்குப் பெயர். கடல் நீரால் அரிக்கப்பட்ட முனை என்பதால் அதை அரித்தமுனை, அரிச்சமுனை, அரிச்சல்முனை எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். நம் நாட்டின் எல்லை இந்த முனை என்பதால், இங்கே இந்திய தேசியச் சின்னம் ஏந்திய தூணை நிறுவியிருக்கிறார்கள்.

இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வெறும் 15 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. அரிச்சமுனையைப் பார்க்கும்போது குழந்தைகளுக்கே உரிய மகிழ்ச்சியோடு நமது மனமும் துள்ளிக் குதிக்கிறது. அரிச்சமுனையின் இடப்புறம் வங்கக் கடலின் பாக் ஜலசந்தி அமைதியாக ஓர் ஏரியைப் போல் காட்சியளிக்கிறது; வலப் புறம் ஆர்ப்பரிக்கும் இந்தியப் பெருங்கடலின் மன்னார் வளைகுடா இருக்கிறது. இருபுறங்களிலும் விதவிதமான பறவைகள் கரையோரத்தில் அமர்ந்தபடி இரை தேடுகின்றன.

sutrula 2.jpg 

படையெடுக்கும் கூட்டம்

அரிச்சமுனைவரை போடப்பட்டிருக்கும் சாலைதான் தனுஷ்கோடிக்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முன்பு தனுஷ்கோடி வரவே அச்சப்படுவார்கள். அப்போது தனுஷ்கோடி செல்ல முகுந்தராயர்சத்திரத்தைத் தாண்டி சாலை வசதி இல்லை. வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததால், ஆழமான கடல் மணல் நிறைந்த பரப்பில் ஜீப், வேன் போன்றவற்றில் மட்டுமே தனுஷ்கோடிக்கு வர முடியும்.

இந்த வாகனங்கள் சிக்கிக்கொள்ளும் இடத்தில் சக்கரங்களுக்குக் கீழே பலகைகளை இட்டு நகரச் செய்வதற்காகச் சிறுவர்களும் அழைத்துவரப்படுவார்கள். மேற்கண்ட வாகனங்கள் இல்லையென்றால் நீண்ட தொலைவை நடந்தேதான் கடக்க வேண்டும். சாதாரண வாகனங்கள் சென்றால் மணலில் சிக்கிக்கொள்ளும். அந்த அளவுக்குப் பணத்தையும் உடல் வலுவையும் நம்பி அரிச்சமுனைக்கு அன்றைக்கு வந்தவர்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தனர். இன்றோ நிலைமை தலைகீழ்.

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சமுனைவரை சாலை அமைக்கப்பட்டிருப்பதால், அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலா வேன்களில் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசப் பயணம் மேற்கொள்வதற்கு வருகிறார்கள். இதனால், விடுமுறை நாட்களில் தனுஷ்கோடியும் அரிச்சமுனையும் சுற்றுலாப் பயணிகளாலும் வாகனங்களாலும் நிறைந்துகிடக்கின்றன.

அரிச்சமுனையின் இறுதியில் இந்திய அரசின் தூண்  நிறுவப்பட்டிருப்பதுபோல், சாலையைச் சுற்றி உட்காரவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. புதிதாகப் போடப்பட்டுள்ள சாலையைக் கடல் அலை அரித்துவிடக் கூடாது என்பதற்காகச் சாலையின் இருபுறங்களிலும் பாறைகளைக் கயிற்றில் கட்டி அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல் சாலையின் இருபுறங்களிலும் பல இடங்களில் பவளத்திட்டுத் துண்டுகள் உள்ளன. கல் போன்ற இந்தத் திட்டுகள் தண்ணீரில் மிதக்கும் தன்மைகொண்டவை. சில இடங்களில் தொட்டியில் தண்ணீரை நிரப்பி, அதில் இந்தக் கற்களை மிதக்க விட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கக் கூட்டம் அலைமோதுகிறது.

ராமேசுவரத்தில் மட்டுமல்லாமல் தனுஷ்கோடி, அரிச்சமுனையிலும் இறந்த முன்னோர்களுக்காகத் திதி கொடுப்பது, சடங்கு செய்வது போன்றவற்றில் பலரும் ஈடுபடுகிறார்கள். ஆனால், இங்கே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாகக் கழிப்பறை, உணவகம் ஆகியவை கிடையாது. சிறுசிறு கடைகள் அதிகமாக முளைத்திருக்கின்றன.

sutrula 3.jpg 

ஊர் மீது நம்பிக்கை

ஆண்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட, உள்ளூர்ப் பெண்கள்தாம் பெரும்பாலும் இந்தக் கடைகளை நடத்துகிறார்கள். பழக் கடை, ஜூஸ் கடை, தண்ணீர் விற்பனை எனப் பல கடைகள் உள்ளன. அரிச்சமுனையில் பழக்கடை வைத்திருக்கும் நாகம்மா என்ற மூதாட்டி, அரிச்சமுனைக்கும் தனுஷ்கோடிக்கும் பயணிகள் வருவதால் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி நிறையப் பேசினார்.

“என்னோட ஊர் ராமநாதபுரம். தனுஷ்கோடிலதான் என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. புயலுக்குப் பிறகு ஊரைவிட்டுப் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, கொஞ்ச வருஷத்துல திரும்பவும் இங்கேயே வந்துட்டோம். வீட்டுல ஆம்பளைங்க மீன்பிடிக்கக் கடலுக்குப் போயிடுவாங்க. கடலுக்குப் போனவங்க உசுரோட திரும்ப வருவாங்களான்னு உத்தரவாதம் கெடையாது. இலங்கைக் கடற்படை எப்ப ஏது செய்யுமோன்னு பயப்பட வேண்டிக் கிடக்கு.

இப்போ அரிச்சமுனைவரை ரோடு போட்ட பிறகு, விடுமுறை நாட்கள்ல கூட்டம் அதிகமா வருது. இவங்கள நம்பிதான் ஒரு வருஷமா கடை போட்டுக்கிட்டு இருக்கேன். விடுமுறை நாட்கள்ல முதலுக்குப் போக 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஒரு மாசத்துல 1,500 ரூபாய்வரை சம்பாதிக்கிறேன்.

எங்களுக்கு இது ஒரு மாற்றுத் தொழிலாக இருக்கு. ஏதோ குடும்பத்தை ஓட்ட இது உதவியா இருக்கு. ரோடு போட்ட பிறகு தனுஷ்கோடிக்கும் அரிச்சமுனைக்கும் கூட்டம் வர்றதைப் பார்த்து இப்போ எங்களுக்கு இந்த ஊர் மீது நம்பிக்கை வந்துடுச்சு” என்கிறார் நாகம்மா.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close