[X] Close

மே 5 – அயோத்திதாசர் நினைவு நாள்: பெண்களின் நிலையைக் காட்டும் காலக்கண்ணாடி


5

  • kamadenu
  • Posted: 05 May, 2019 09:54 am
  • அ+ அ-

தாழ்வுற்றுப் பாழ்பட்டுக் கிடக்கும் சமூகத்தைக் கைதூக்கிவிட அவ்வப்போது புரட்சியாளர்கள் உதிக்கத் தவறுவதில்லை. வீழ்ந்துகிடந்த தமிழகத்தைத் தன்னிரகரில்லாத மறுமலர்ச்சிப் பணிகளால் எழுச்சியுறச் செய்ய முயன்றவர்களில் க. அயோத்திதாசப் பண்டிதர் முதன்மையானவர். பகுத்தறிவு, சமூக சீர்திருத்தம், சாதியொழிப்பு போன்றவற்றில் முனைப்புடன் செயல்பட்டதால்தான் தந்தை பெரியாரும் அயோத்திதாசரைத் தன் முன்னோடி எனச் சொல்லியிருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்ல; பெண்ணுரிமைக்கும் பெண் விடுதலைக்கும் குரல் கொடுத்தவர் அயோத்திதாசர். அவர் நடத்திவந்த ‘தமிழன்’ இதழில் அவர் எழுதிய கட்டுரைகளே அதை உணர்த்தும். அவற்றில் சிலவற்றைப் படிப்பது, நூறாண்டு கடந்த பிறகும் நாம் அதே இடத்தில்தான் நிற்கிறோமா, பாலினச் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கிறோமா என்பது குறித்துப் பரிசீலித்துக்கொள்ள உதவியாக இருக்கும்:

கைம்பெண்களை வீட்டில் வைத்துக் கண் குளிரப் பார்க்கும் கனவான்களே சற்று கவனிப்பீர்களாக. கள்ளப் புருஷர்கள் தோணுதற்கும் கைம்பெண் பிள்ளைகளை ஈணுதற்கும் செத்துக் கிடக்கும் அநாதியுற்றப் பிள்ளைகளைக் காணுதற்குங் காரணஸ்தார்கள் யாவரெனில், விதவைகளை மறு விவாகஞ் செய்யலாகாதெனத் தடுத்து, அதற்காய சில திருட்டு சாத்திரங்களையும், குருட்டு சாத்திரங்களையும் வரைந்து வைத்துக்கொண்டு கைம்பெண்களால் வருஷாந்திரம், திதி, தட்சிணையும், அரிசி பருப்பும் பெற்று சீவிப்பதற்கு தோன்றியுள்ள  பொய்க் குருக்களே ஆவர். அவர்களால் ஏற்படுத்திக்கொண்ட சாத்திரங்களானது அவர்களைப் பின்பற்றியுள்ள பேதை மக்களை வாதிப்பதுமின்றி தங்களையும் தங்கட் குடும்பத்தோரையும் நகைக்கத்தக்கச் செயலால் நசித்து வருகின்றது.

இந்திய புருஷர்களின் இஷ்டமும் பெண்களின் கஷ்டமும்

பெண்கள் பிறந்து மங்கை பருவமடையும் வரையிற் பெற்றோர்களிடம் சுகமடைவார்களென்பது திண்ணம். அதன் பின்னர் கலியாணம் முடிந்து கட்டையில் அடங்கும் வரையில் கவலையேயாம். எங்ஙனமென்னில் மாமியார் கொண்டாட்டங்களையும் மருமக்கள் திண்டாட்டங்களையும் வீடுகள் தோறும் அறியலாம். புருஷன் இறந்து விடுவானாயின் அவன் பெண்சாதியும் இறந்தே தீரல் வேண்டும். அல்லது இருந்தாலோ அவளது ஆடை ஆபரணங்கள் யாவையும் பறித்துக்கொண்டு மொட்டை அடித்து, வெள்ளை வஸ்திரங் கொடுத்தாலுங் கொடுத்து விடலாம். புருடனோ பெண்சாதியிருக்குங் காலத்திலும் 100 பெண்களை விவாகம் செய்துகொள்ளலாம்.

பெண்களோ புருடன் இறந்தபின் வேறு புருடனை விவாகஞ் செய்யலாகாது. இதனை விளங்கக் கூறும் சாஸ்திரங்களுக்கு தன்ம சாஸ்திரங்கள் என்று பெயர் வைத்துவிட்டு, முண்டச்சி என்னும் அடையாளத்தை இவர்களே ஏற்படுத்தி விட்டு சுபகாரியங்கள் யாதுக்கேனும் அவள் எதிரில் வந்துவிடுவாளாயின், ‘முண்டச்சி எதிரில் வந்தாள், எடுத்த காரியங் கெட்டுப் போச்சுதென்று’ அவளை இழிவடையச் செய்வார்கள். சுபகாரியங்களுக்கு எதிரில் ஒரு யூரேஷியப் பெண்ணேனும், மகமதியப் பெண்ணேனும் வந்து விடுவாளாயின் அவளை அமங்கலி சுமங்கலி என்றறியாது சகுண சாஸ்திரம் பாராது போய் விடுவார்கள்.

அமங்கலியானவளை நல்ல தலையணை யிட்டுப் படுக்க விடாது மணைக்கட்டை போட்டுப் படுக்க வைப்பார்கள். அவள் தலை மயிரை மொட்டையடிக்க மாட்டேன் என்றாலும், அவளைப் பலவந்தமாகப் பிடித்து மொட்டையடித்து விடுவார்கள்.

கைம்பெண்களை எதிரில் கண்டவுடன் இழிவு கூறுவதுடன் எச்சுபகாரியங்களிலும் அவர்களைச் சேரவிடாது மேலும் மேலுந் துக்கத்தை உண்டு செய்வார்கள். புருடர்கள் காலமெல்லாம் தங்கள் இஷ்டம் போல் சுகத்தை அனுபவிக்கலாம் என்றும் பெண்கள் காலமெல்லாம் கஷ்டத்தையே அனுபவிக்க வேண்டுமென்றும் வகுத்துக் கொண்டிருப்பதும் தற்கால இந்தியர்களின் கொள்கைகளாகக் காணப்படுகின்றது.

முற்கால இந்தியர்களோ புத்த தன்மத்தைச் சார்ந்து சீவகாருண்யமுற்று சாதி பேதமற்று ஒற்றுமெய் பெற்று வாழ்ந்தவர்களாதலின் அரசப் பெண்கள் செண்டாடலும், முல்லை பெண்கள் மலராடலும், மருதப் பெண்கள குரவையாடலுமாகிய ஆனந்தத்தில் இருந்ததுடன் அரசருக்குள் விதவா சுயம்வர விவாகங்கள் இருந்தினால் அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியாக விதவா விவாகங்களை அனுசரித்துப் பெண்கள் ஆனந்த சுகத்திலிருந்தார்கள்.

மற்றும் பெண்கள் கல்வியிலுங் கைத்தொழிலிலும் வியாபாரத்திலும் பகிரங்கமாக வெளிவந்து கற்பு நிலைநின்று சதா சுகத்திலிருந்து அன்றி கியான மணிகளாகவும் விளங்கினார்கள் என்பதை பௌத்த காவியங்களாலும் சரித்திரங்களாலும் அறியலாம். அக்காலத்தியப் பெண்களின் சுதந்திரங்கள் யாவும் தற்காலப் பெண்களுக்கு இல்லாக் குறைவால் இல்லற வாழ்க்கைச் சுகமற்றுப் போனதுடன் துறவறக் கியானமுங் கெட்டு கற்பின் நிலையும் விட்டு சீரழிந்து போகின்றார்கள். ஆதலின் நம் தேயப் புருடர்கள் பூர்வ சரித்திரங்களை ஆய்ந்து பெண்களின் கஷ்டங்களை நீக்குவார்கள் என நம்புகிறோம்.

(தமிழன், சூலை 24, 1912)

ஆதாரம்

நூல்: க. அயோத்திதாச பண்டிதர்

ஆசிரியர்: கௌதம சன்னா

வெளியீடு: சாகித்திய அகாதெமி, சென்னை.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close