[X] Close

இனி எல்லாம் நலமே 04: மாத்திரை சாப்பிட்டால் மாதவிடாய் பாதிப்படையுமா?


04

  • kamadenu
  • Posted: 05 May, 2019 09:54 am
  • அ+ அ-

-அமுதா ஹரி

மாதவிலக்குச் சுழற்சி பற்றி அவ்வள வாகக் கண்டுகொள்ளாத பெற்றோரும் உண்டு; அதிக மாகக் கவலைப்படும் பெற்றோரும் உண்டு.

“டாக்டர் என் மகளுக்கு முதல் பீரியட்ஸ் ஜனவரி மாசம் வந்தது. இப்ப ஏப்ரல் ஆயிடுச்சு. இன்னும் வரவே இல்லையே”

- இப்படி ஒரு அம்மா.

“என் மகளுக்கு முதல் பீரியட்ஸ் வந்து 15 நாள் ஆச்சு. அப்பப்ப உதிரப்போக்கு இருந்துகிட்டே இருக்கு. சரி, முதல்ல இப்படித்தான் வரும்னு நினைச்சேன். ஆனா, இப்ப அவ ரொம்ப வீக்கான மாதிரி இருக்கா. என்ன பண்றது டாக்டர்?”

- அந்தப் பெண்ணைப் பரிசோதித்ததில் அவளுக்கு தைராய்டு பிரச்சினை இருப்பது தெரியவந்தது.

மாதவிடாய் என்பது பற்றிய அடிப்படைத் தகவல்களே இன்றைக்குப் பல பெற்றோருக்கும் தெரியாத சூழல்தான் இருக்கிறது. ஒன்று முழுவதும் தெரியவில்லை; அல்லது தெரிந்த ஊகங்கள் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.

மாதவிடாய் மாயைகள்

1. மாதவிடாய்ச் சுழற்சி மாதத்துக்கு ஒரு முறை வருமா?

அவசியமில்லை. 60-லிருந்து 80 சதவீதத்தின ருக்கு 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரையான காலச் சுழற்சி இருக்கலாம். சிலருக்குத் தொடர்ச்சியின்றி வரக்கூடும். மாதவிலக்குச் சுழற்சி ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கேயான பாணியில் வரும். இந்த பாணியில் ஏதாவது அசாதாரணமாக நிகழ்ந்தால் மருத்துவரை அணுகலாம். ஏனெனில், மாதவிலக்குச் சுழற்சி தொடங்கி அது உறுதியாக ஒரு பாணியில் வருவதற்கு சில காலம் ஆகலாம்.

2. முறையான மாதவிலக்குச் சுழற்சி இல்லாத வர்களின் திருமண வாழ்வு, குழந்தைப்பேறு போன்றவை பாதிக்கப்படுமா?

இதுவும் மாயைதான். மாதவிலக்குச் சுழற்சி வர ஆரம்பித்ததில் இருந்து, அம்மாக்கள் அதைத் தொடர்ந்து கவனியுங்கள். முன்பே சொன்னதுபோல் சீரற்ற அதே நேரம் முறையான மாதவிடாயாக இருந்தால் கவலை வேண்டாம்.

அவர்களுடைய இந்தச் சுழற்சி சீராகத் தொடர்ந்தால் பிரச்சினை இல்லை. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம். வழக்கமாக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மாதவிலக்குச் சுழற்சி வருபவருக்கு நான்கு மாதங்கள் தள்ளிப்போனால் மருத்துவரை நாடலாம்.

3. எவ்வளவு நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கலாம்?

சாதாரணமாக மூன்றிலிருந்து ஏழு நாட்கள்வரை இருக்கலாம். சிலருக்கு இரண்டு நாட்கள் அதிக உதிரப்போக்கு இருந்து பிறகு படிப்படியாகக் குறையலாம். கட்டி கட்டியாக வந்தால் மட்டுமே கவனம் வேண்டும்.

4. உதிரப்போக்கு அதிகமாக வருகிறதே?

மாதவிலக்குச் சுழற்சியின்போது நம் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய திரவத்தின் அளவு 50 மி.லி.தான். வேறு வகையாகச் சொல்லப்போனால், ஒரு நாளில் மூன்று நாப்கின்கள் நன்றாக நனையும் வரைதான் வரும். இப்படி ஏழு நாட்கள் வரை இருக்கலாம். அதைவிட அதிகமான நாட்கள் வந்தாலோ கட்டி கட்டியாக வந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும்.

5. மாதவிலக்கின்போது சிலருக்கு வயிற்று வலி வருவதில்லை. சிலர் உருண்டு புரண்டு துடிக்கிறார் கள். வலி, தாக்குப்பிடிக்கும் சக்தியைப் பொறுத்தா?

வலியை மூன்றுவிதமாகப் பார்க்கலாம். சிலருக்கு வலியே இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவில் வலி வரலாம். சிலருக்குக் கடுமையான வலி வரலாம். சிறிய அளவில் வலி உள்ளவர்கள் வலி நிவாரண மாத்திரைகள் எடுக்காமல் இருக்கப் பார்க்கலாம். ஆனால், பொறுத்துக்கொள்ள முடியாத கடுமையான வலி உள்ளவர்கள் அப்படியே விடக் கூடாது.

அது அவர்களுடைய அன்றாட நடை முறையையே முடக்கிப் போடலாம். உடல்ரீதியான வலி, மனத்தையும் பாதிக்கலாம். ஆகவே, மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரணிகளை எடுக்கலாம். இப்படிச் செய்வதால் அதுவே பழக்கமாகிவிடும் எனச் சொல்வார்கள். ஆனால், கடுமையான வயிற்றுவலி ஆளையே நிலைகுலையச் செய்துவிடும் என்பதால் தேவைப்படும் நேரத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கலாம்.

அதற்காக வலி குறையவில்லை என்று அடிக்கடி மாத்திரை போடக் கூடாது. அது பலனைத் தராது. அதேபோல் வலி நிவாரணியை எடுக்கும்முன் ஏதாவது ஊட்டச்சத்தாகச் சாப்பிட வேண்டும். சும்மா, ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டெல்லாம் வலி நிவாரணியைச் சாப்பிடக் கூடாது.

இப்படி அடிக்கடி வலி நிவாரணியைச் சாப்பிடுவதற்கும் உதிரப்போக்குக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும், வயிற்றில் எரிச்சல் வரக்கூடும். வலியைக் குறைக்க வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான அல்லது உடலை வருத்தும்படியான வேலைகளைத் தவிர்க்கலாம். ஒரேயடியாக சோம்பிப் படுக்கவும் வேண்டாம். சராசரியாக, செயல் ஊக்கத்துடன் இருக்கலாம்.

6. மாதவிடாய் நாட்களில் உடலையும் மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன செய்யலாம்?

மாதாந்திர உதிரப்போக்கு ஆரம்பிப்பதற்கு முன்னும் மாதாந்திர உதிரப்போக்கின் போதும் உடல் சோர்வு, வலி போன்றவை ஏற்படக்கூடும்.

கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றலாம்:

# மாதவிடாய் நாட்களில் உடல் அதிக அளவு நீரைத் தக்கவைத்துக்கொள்கிறது. உப்புக்கு நீரை உறிஞ்சும் தன்மை உள்ளது. எனவே, பயன்படுத்தும் உப்பின் அளவைக் குறைப்பது நல்லது. இதனால் உடலில் அதிக அளவு நீர் சேராது.

# சிறிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உடல் இறுக்கத்தை அகற்றவும் தலைவலியைக் குறைக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது.

# அதிகமாகத் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு வழி செய்கிறது.

# இந்த நாள்களில் தேவையான அளவு தூங்கி எழுவது நல்லது.

 

அடிவயிற்றில் ஏற்படும் வேதனையைக் குறைக்க கீழ்க்கண்ட சில பயிற்சிகள் உதவலாம்.

# வெந்நீரில் குளித்தல்.

# சூடான நீராகாரம் பருகுதல்.

# வெந்நீரில் கால்களை நனைத்து வைத்திருத்தல்.

# வெந்நீர் நிரப்பிய பையை அல்லது பாட்டிலை அடிவயிற்றில் வைத்திருத்தல்.

# நடப்பது.

# முழங்கால் மடிய குனிந்து கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு இளைப்பாறுதல்.

# படுத்துக்கொண்டு கால் மூட்டுகளை உயர்த்தி, சிறு வட்டமாக மூட்டு களை அசைத்தல்.

# வழக்கமாகச் செய்கிற வேலைகளைத் தடையின்றிச் செய்தல்.

 

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close