[X] Close

அன்றொரு நாள் இதே நிலவில் 02: மூன்று மாத மாப்பிள்ளை விருந்து


02

  • kamadenu
  • Posted: 04 May, 2019 18:49 pm
  • அ+ அ-

-பாரததேவி

கல்யாணம் முடிந்து ஏழு நாட்கள் ஆனதும் தாயாதிக்காரர்கள் எல்லாரும் போய்விடுவார்கள். ஆனால், மாப்பிள்ளைக்கு மட்டும் மாமியார் வீட்டில் மூன்று மாதம்வரை ‘மாப்பிள்ளை விருந்து’ போட வேண்டும்.

தினமும் அரிசிச் சோறுதான் ஆக்க வேண்டும். தவறாமல் பருப்புக் கடைவதோடு நெய்யும் ஊற்ற வேண்டும். நெய் இல்லாதவர்கள் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கலாம். நடு நடுவே கோழிக்கறியோடு காடுகளிலிருந்து காடை, கௌதாரி, முயல் என்று பிடித்துக்கொண்டு வந்து மருமகனுக்கு ஆசை ஆசையாகக் குழம்பு வைத்துக் கொடுப்பார்கள்.

அதோடு போகாமல் எள்ளுருண்டை, புட்டு மாவு, காட்டில் விளையும் நிலக்கடலை, சீனிக்கிழங்கு என்று விதவிதமாகத் தின்பண்டம் வேறு. இந்த விருந்து காலையில் நுரை ததும்பும் ஒரு செம்பு பாலோடு ஆரம்பிக்கும். ஒல்லிக்குச்சியாக வந்து மணவறையில் உட்காரும் மாப்பிள்ளைகள் இந்த மூன்று மாத விருந்தில் தண்ணியாய்த் தெளிந்து உருண்டு திரண்டுவிடுவார்கள்.

இதில் ஒரு கஷ்டம் என்னவென்றால் கல்யாணமாகி மூன்று மாதம் கழித்துத்தான் ‘பெரிய மறுவீடு’ என்று ஒன்றை வைப்பார்கள். அதுவரை கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் பார்க்கக் கூடாது; பேசக் கூடாது.

முகம் காட்டாத மனைவி

மாப்பிள்ளைக்கான பணிவிடைகளை யெல்லாம் மாமியாரோ அவருக்கு வேண்டிய பெரிய ஆட்களோதான் செய்வார்கள். மனைவி அவன் முன்னால் வரவே மாட்டாள். அவள் எப்போதும்போல் காட்டு வேலை செய்துகொண்டு சேத்திக்காரிகளோடு போய் அவர்களுடனே தூங்கிவிடுவாள்.

விருந்து சாப்பாடு சாப்பிடும் மாப்பிள்ளை, எப்படியாவது பொண்டாட்டியிடம் பேச வேண்டும் என்று தவியாகத் தவிப்பார். ஆனால், எப்படி முயன்றாலும் அது முடியாது. ஏனென்றால் புதுப்பெண் எப்போதும் ஆட்கள்சூழ இருப்பாள். வீட்டினுள் இருக்கும்போது பார்க்கலாம் என்றால் நாலைந்து பெரியவர்கள் வீட்டுக்குள் சுத்திக்கொண்டே இருப்பார்கள்.

விருந்து சாப்பாடு சாப்பிடும் மாப்பிள்ளையும் காட்டு வேலைக்குத்தான் போவார். விவசாயிகள் யாரும் வீட்டிலிருந்து சாப்பிட மாட்டார்கள். அப்படிச் சோம்பேறியாக இருந்தால் அவர்களுக்கு ஊருக்குள் எந்த மதிப்பும் இருக்காது. அவனிடம் யாரும் ஒரு நிமிஷம் நின்றுகூடப் பேச மாட்டார்கள்.

மாப்பிள்ளையின் ஆசை

அமுதா மாப்பிள்ளை துரைச்சாமி எப்படியும் ஒரு நாளைக்கு அமுதாவிடம் பேசிவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். ஒருநாள் இரவு தெருவில் வரிசையாகப் பெண்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அரை நிலா வெளிச்சம் என்பதால் ஒளி குறைவாக இருந்தது. எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருக்க இவனுக்குத் தூக்கமே வரவில்லை. அமுதாவும் நம்மோடு எப்போது பேசுவோம் என்று ஆசையோடுதான் இருப்பாள்;

அதனால் அவளை எழுப்பி அங்கேயிருக்கும் படப்பு மறைவில் சற்றுநேரம் பேசிக்கொண்டிருப் போமென்று நினைத்தவன், தூங்கிக் கொண்டிருந்தவர்களின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தான். கடைசியில் இவளாகத்தான் இருக்குமென்று நினைத்து உறங்கியவளின் காலை லேசாகச் சொரண்டி அமுதா, அமுதா எனக் கிசுகிசுப்பாகக் கூப்பிட்டான். “என்ன தாயீ… இந்நேரத்துக்கு எழுப்பிக்கிட்டு இருக்கே” என்று உண்ணாமலைப் பாட்டி திடீரென்று எழுந்துவிட்டாள்.

துரைச்சாமிக்குத் தூக்கிவாரிப்போட்டது. விக்கினேனுமில்லை விறைச்சேனுமில்லை என்பதுபோல் ஆனது. உண்ணாமலைக்கு 60 வயதிருக்கும். அப்போதிருந்த வயதானவர்கள் எல்லாருமே கை வைத்தியத்தில் சிறந்து இருந்தார்கள்.

தன்னை எழுப்பியவனைச் சற்று ஒதுக்கமாகக் கூட்டிவந்த உண்ணாமலை, “எதுக்குத் தாயீ என்ன இந்நேரத்துக்கு ரகசியமா எழுப்புனே?” என்று கேட்டார். துரைச்சாமிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதாவது சொல்லியாக வேண்டுமே என்பதற்காக, “இல்ல பாட்டி. வவுறு வலிச்சிச்சி. பொறுக்க முடியல. அதேன் எழுப்புனேன்” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிவைத்தான். “ஆமா தாயீ. மாப்பிள்ளைச் சோறு சாப்பிடுதீல்ல. உன் மாமியா வேணுங்கிற பண்டத்தையும் பலாரத்தையும் கொடுத்திருப்பா.

இப்ப நீ ‘ராச போசன்’ விருந்தில்ல சாப்பிடுதே. அதேன் உனக்கு வவுறு வலிக்கு” என்றவள் அந்நேரத்துக்கே சுக்கு மிளகோடு ஏதோ மூலிகையையும் வைத்து அம்மியில் அரைத்துக் குடிக்கச் சொன்னாள். முடியாது என்று சொன்னால் தான் எழுப்பியதைப் பற்றி நாளைக் காலையில் ஊரெல்லாம் சொல்லிவிடுவாளே என்று துரைச்சாமியும் கண்ணை மூடிக் குடித்துவிட்டான். இவனுக்கு மருந்து கொடுத்த உண்ணாமலை மறுபடியும் தான் இருந்த இடத்தில்போய்ப் படுத்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்க, துரைச்சாமிக்கு உறக்கம் போயே போய்விட்டது.

நிஜமாகவே வயிற்று வலி வந்ததோடு பேதியும் ஆனது. ஆள் அலைகுலைந்து போனான்.

மாமியாரின் அதிர்ச்சி

விடியற்காலையில் மருமகனுக்காக நுரையோடு பசும்பாலைக் கொண்டுவந்த மாமியார், மருமகனைப் பார்த்ததுப் பதறிப்போனாள். “என்னய்யா… என்ன ஆச்சு? இப்படி அரச்சீவனாக் கெடக்கீகளே. கண்ணு முழியெல்லாம் உள்ளபோயி கிடக்கீகளே. சோறு, பாலு, தயிரு, வெண்ணெய்யின்னு உங்களுக்குப் பார்த்துப் பார்த்துல்ல பக்குவமா விருந்து வைக்கேன்” என்று ஊரெல்லாம் கேட்கும்படி ஒப்பாரி வைத்தாள்.

அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் துரைச்சாமிக்கு இன்னொரு வயிற்று வலி வந்துவிட்டது. பிரிந்திருக்கும் இந்த மூன்று மாதத்துக்குள் தன் பொண்டாட்டியைப் பார்த்துவிட வேண்டும், பேசிவிட வேண்டும் என்று புது மாப்பிள்ளைகள் பட்டபாடு ஊருக்குள் கதைகதையாக உண்டு.

இப்படி, அப்படி என்று மூன்று மாதம் முடிந்ததும் பெரிய மறுவீடு நடக்கும். இதற்கும் ஊரே சுறுசுறுப்பாகிவிடும். அன்றைய தினம் நாலைந்து மறுவீடு என்பதால் பெண்களுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும். ஊருக்கெல்லாம் விருந்து படைக்க வேண்டும் என்பதால் முதல் கோழி கூவும்போதே உலைகட்டிவிடுவார்கள்.

காலைச் சாப்பாடு, மத்தியானச் சாப்பாடு என்று நடக்கவிருக்கும் மறுவீட்டு விசேஷத்தில் பகிர்ந்து சாப்பிடுவார்கள். பிறகு தங்கள் மகளுக்காகப் பொட்டி பொட்டியாக அதிரசம், எள்ளுருண்டை, கருப்பட்டியோடு பிடித்துவைத்த நிலக்கடலை உருண்டை என நிறையப் பலகாரங்களோடு சீர்வரிசையையும் கொடுப்பார்கள். சீர்வரிசையும் பலகாரங்களும் முன்னால் போக பெண்ணை அலங்கரிக்க ஆரம்பிப்பார்கள்.

ஒளிரும் மணப்பெண்

கை நிறைய ராதா, ருக்மணி வளையல்கள், கைவிரல்களிலும் கால்விரல்களிலும் சிவந்த மருதாணி, அதோடு கால் விரலில் மெட்டி, மைலடி, தண்டை, கொலுசு, கழுத்தில் இரவல் வாங்கியாவது கார்ச்சவடி, அட்டியல், காதில் தண்டட்டி, முடிச்சி, பாம்படம், மேபூடி, பொன்னப்பத்தட்டு என இத்தனை நகைகளோடு கைவிரல்களில் ஈய மோதிரங்கள் அணிந்திருப்பார்கள். கரம்பை தேய்த்து முழுகிய தலைமுடியைச் சாம்பிராணி போட்டு உலர்த்தி, மரச்சீப்பால் வாரிக் கொண்டை போடுவார்கள்.

இந்தக் கொண்டை எத்தனை நாட்களானாலும் அவிழாது. கொண்டையில் பிச்சிப்பூவும் மரிக்கொழுந்தும் சொருகியதில் புதுப்பெண்ணைச் சுற்றிலும் வாசம் வீசும். மஞ்சள் பூசிய முகத்தில் சிவந்த குங்குமப் பொட்டு, அதன் கீழே பெரியவர் பூசிய திருநீறு, உடம்பில் மறுவீட்டுக்காகவே எடுத்த பஞ்சவர்ணக் கிளி சேலை, செம்பொட்டு வைத்த ரவிக்கை, கன்னத்தில் கருத்த திருஷ்டிப் பொட்டு எனப் பெண்ணின் முகம் பொலிவு கண்டு துலங்கும்.

(நிலா உதிக்கும்)     

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close