நடிகர்களே! இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் கவிஞர் அறிவுமதி கவிதையில் விளாசல்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த நூறு நாட்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின் நூறாவது நாள் நேற்று. 144 தடை உத்தரவு, மக்களை ஒடுக்கும் வன்முறை, போலீசார் துப்பாக்கிச் சூடு, அப்பாவி மக்கள் பலி என கொந்தளித்துக் கிடக்கிறது தூத்துக்குடி.
தமிழகம் முழுவதும் மக்கள் மனங்களில் மிகப்பெரிய அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமும் பலியான பரிதாபமும் குறித்து கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர்களையும் அவர்களின் அரசியல் ஆதாயங்களையும் சாடியிருக்கிறார்.
நடிகர்களே! இப்போது
புறப்பட்டுவிடாதீர்கள்
உங்களுக்கு மூச்சுத்திணறல் ஆகிவிடும்
எல்லாம் அடங்கட்டும்
இன்னும்தான்
தேர்தலுக்கு நாளிருக்கிறதே!
நடிகர்களே! உங்கள்
அண்ணன்கள்
நன்றாக பேட்டி
கொடுத்துக்கொண்டு
பாதுகாப்பாக இருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் அண்ணன்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!
நடிகர்களே! உங்கள் மகள்கள்
பாதுகாப்பாக படம் எடுத்துக்
கொண்டிருக்கிறார்களா?
பாதுகாப்பாக நடித்துக்
கொண்டிருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் மகள்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!
நடிகர்களே!
இவர்கள் அரசியல்வேறு
உங்கள் அரசியல் வேறா?
இவர்களுக்கு சுடுகாடு!
உங்களுக்கு சட்டமன்றமா?
ஓ...நாடாளுமன்றமுமா?
நல்லது நடிகர்களே!
கிளிசரினோடு
தேர்தல் பிரச்சாரத்திற்குப்
புறப்படுமுன்
உங்கள் எசமானர்களிடம்
கேட்டுச் சொல்லுங்கள்...
எங்கள் உறவுகளின் சாவுக்காக
நாங்கள்
கொஞ்சம்
அழுதுகொள்ள
அனுமதிகிடைக்குமா!!