[X] Close

இனிய பாலா... தேடிக் கண்டுகொண்ட தெய்வம் நீ!


bala-eo-govindraj

  • kamadenu
  • Posted: 23 May, 2018 09:57 am
  • அ+ அ-

டி. கோவிந்தராஜூ

செயல் அலுவலர் (ஓய்வு)

தஞ்சாவூர்

தீவிர இலக்கிய வாசகனாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது.  மௌனியும், சுந்தர ராமசாமியும், கரிச்சான் குஞ்சுவும், தி.ஜானகிராமனும், ஜி.நாகராஜனுமே இலக்கிய கடவுள்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம்.  பாலகுமாரனா, ‘சற்றே விலகி              இரும் பிள்ளையாய்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டிருந்த காலம்.  வணிக எழுத்து என்று வசை பாடிய காலம் ஒன்று இருந்தது. அதன் விளைவுதான் இது!

ஆனால்... என் இனிய பாலகுமாரனே!

அப்போது சாவியில் வந்த உன் மெர்க்குரி பூக்கள் முதல் வாசிப்பில் சாதாரண நாவலாய் கடந்து சென்றது.   அடுத்த வாசிப்பில் மனதில் இடம் பிடித்து, இதுதான் இலக்கியம்            என்றது.  இரும்புகுதிரைகள் என்னை அப்படியே புரட்டிப்போடப்பட்டது.  அன்றைய உன் அயராத, அர்ப்பணிப்புடனான உழைப்பு இப்போது உடையார் வரை தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இன்னும் காசும் பிறப்பும் என்று என்று என் படிப்புலகம் விரிய உன் படைப்புலகம் தெரிந்தது.

உன் ஆன்மிக முதிர்ச்சி என்னை அதிரச் செய்தது.  ஒருமுறை திங்களூர் கோயிலுக்கு வந்தபோது ஒருமணி நேரம் மரத்தடியில் அமர்ந்து குதூகலமாய் குழந்தையைப்போல் பேசினாய்.   திட்டை, வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்தபோது இவ்வளவு முதிர்ச்சியடைந்த பிறகும் ஆலய வழிபாடு அவசியமா என நான் கேட்டபோது, தங்கள் நெஞ்சைத் தொட்டு இங்கிருப்பதும், அங்கிருப்பதும் ஒன்றுதான் என உணர்த்தினாய்.   இருப்பினும் வரவேண்டிய அவசியத்தை வார்த்தைகளில்லாமல் விளக்கினாய்.  இன்னொருமுறை கும்பகோணம் ரிசார்ட்டில் உன்னைத் தரிசித்த போது, ஆசையுடன் பூரி கிழங்கை ரசித்து ருசித்துச் சாப்பிட்டாய். வயதான பின்னும் நாக்கு ருசி கேட்கிறதா?  என்று மனதுள் சிரித்துக்கொண்டேன்.  வாய்விட்டுப் பேச சற்றே அச்சம் இருந்தது. இந்தக் கேள்வி கூட, நீ எங்களுக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்பதன் பொருட்டான அக்கறைக் கேள்விதான்! உடன் கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயில் வந்தேன்.  தரிசனம் முடிந்ததும் ஒரு பெரிய வாழைப்பழச் சீப்புடன் அந்தக் கோயில் யானையை அணுகினாய். நான் சற்றே பதறியடித்து அருகில் பாதுகாப்புக்குச் சென்றபோது அது என் குழந்தை என்று ஆரத்தழுவினாய். யானையின் அருகில் சிங்கம் நிற்பதுபோல் இருந்தது எனக்கு!

இப்படி எத்தனையோ அனுபவங்கள்.

சென்னை வந்தபோது நண்பர் ராம்ஜியிடம், அய்யாவைப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தேன்.  உங்கள் அனுமதி பெற்று என்னை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்.   

ஒரு வாசகனாக தங்கள் இல்லத்திற்கு வந்தேன். தங்கள் சீடனாக வீட்டைவிட்டு வெளியே வந்தேன்.  என்னவொரு பேரன்பு, என்ன ஒரு மதிப்பு,  ஒரு எழுத்தாளரைப் பார்க்கிற ஆசையில்தான் வந்தேன். குருவாக ஏற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.

திருவண்ணாமலையில் இரண்டு முறை யோகியைத் தரிசிக்கும் பேறு  கிடைத்தது.   அதன்பின் என் ஆன்மிக வாழ்க்கை பிரகாசித்தது.  தங்களைச் சந்தித்த பின் மீண்டும் துளிர்விட்டது. என் தவறுகளினால் நான் தாங்க முடியாத துன்பங்களைச் சந்தித்தபோது உங்களைச் சந்தித்தேன்.   எதுவும் பேசவில்லை.  பத்து நிமிடம் உன் பாதத்தின் அருகே அமர்ந்து            கதறி அழுதேன்.  என் சுமைகள் குறைந்தன. நான் நானானேன்.

பின்னும் ஒருமுறை ஊரே என்னை எதிர்த்தது. அப்படியொரு சூழல் வாழ்வில் விளையாடியது. உயர் அலுவலர்கள் என்னைப் பழிவாங்கத் துடித்தனர்.  என்னால் உதவி பெற்றவர்கள் அனைவரும் முதுகில் குத்தினர்.  குழியில் விழுந்த பலரை நான் குனிந்து கைதூக்கி விட்டிருக்கிறேன்.   நான் குழியில் விழுந்த போது அத்தனைபேரும் என்னை ஏறி மிதித்து ஆளுக்கொரு                 கைமண் போட்டு என்னை மூடிவிடத் துடித்தனர். என் புகழ் வெளிச்சம் அவர்கள் கண்களை உறுத்தின. ஆலயத்துறையில் ஊழலில் திளைத்த உயர் அலுவலர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு என்னை காலி பண்ணத்துடித்தனர்.  ஓடோடி வந்து உன் பாதம் அமர்ந்து கதறி அழுதேன்.  வேறு ஒன்றும் வார்த்தைகளால் விவரிக்கவில்லை.   என் சோகம் பஞ்சாய்ப் பறந்தன. என் மனதில் தெளிவு பிறந்தது.   எதையும் எதிர்கொள்ளும் தைரியம் வந்தது.  எல்லாம் நீ கொடுத்தது. 

என்னை அருகில் அமர வைத்து முதுகில் தடவி என் குண்டலினியை எழுப்ப முயற்சி செய்தாய்.  ஏற்கெனவே, யோகி திருவண்ணாமலையில்  என் முதுகில் சற்றே தட்டிக்கொடுத்தார்.   என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது.  மீண்டும் உன் கையால் உள்ளே ஒரு பரவல். அது எதற்காகவென்று எனக்குத் தெரியாது.  ஆனாலும் வாழ்வில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படும் என்பது அனுபவத்தில் தெரிகிறது.  

உன்னை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது.  கண்ணில் நீர் சுரந்து கண்ணை மறைக்கிறது.  அதேசமயம், மனதுக்குள் அப்படியொரு அமைதியும் பிறக்கிறது. அடுத்த சில கணங்களில் நீ கொடுத்த தைரியம் என்னை            நிமிரச் செய்கிறது.

என் மகனுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று உன்னிடம் வந்தபோது, உன் கைப்பட்டதன் விளைவு... அந்தக் கட்டியே கரைந்து போனது.  இப்படி எத்தனையோ அற்புதங்கள்... என் வாழ்விலும் எங்களின் வாழ்விலும்!

உன்னை சிறந்த எழுத்தாளன் என்றும் கதை, வசனகர்த்தா என்றும், ஆன்மிகவாதி என்றும் அவரவர்க்குத் தெரிந்த விதத்தில் எடுத்துரைக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை, நான் துன்பமுற்றபோது தோள் கொடுத்த தோழன் நீ. நான் பங்கமுற்றபோது பாசம் காட்டிய குரு.   யோகி ராம் சுரத்குமார் காட்டிச் சென்ற தெய்வம் நீ.

'திட்டை கோவிந்தராஜூ வாங்க!'   என்று அன்போடும் கனிவோடும் பிரியத்துடனும் ஆதுரத்துடனும் அழைப்பது காதில் இப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இனிய பாலகுமாரா... நான் தேடிக் கண்டுகொண்ட தெய்வம் நீ.

இந்த என் ஜென்மத்துக்கு இது போதும்! நீ போதும்!

எழுத்தாளர் பாலகுமாரன் தொடர்பான கட்டுரைகள்...

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close