[X] Close

பாலகுமாரன் பற்றி கமல்! எழுத்தில் ஸின்ஸியாரிட்டி! 


kamal-bala

  • வி.ராம்ஜி
  • Posted: 22 May, 2018 11:19 am
  • அ+ அ-

’நீங்க சொல்லித்தான் அவர் சினிமாவுக்கு வந்தார்’ என்று பாலகுமாரனின் துணைவியார் சாந்தா பாலகுமாரன் ஆறுதல் சொல்லவந்த கமலிடம் நினைவுபடுத்தினார். பாலகுமாரனின் மகள் ஸ்ரீகெளரிக்கு ஆறுதலாகப் பேசினார் கமல். ‘அப்பா இறந்து போறதுக்கு பத்துநிமிஷம் இருக்கும்போது, எப்படி அங்கிள் கரெக்டாப் போன் பண்ணினீங்க’ என்று கேட்ட சூர்யாவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

’’சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு பாலகுமாரன் நல்ல நண்பர். நான் சொன்னதால்தான் சினிமாவுக்கு வந்தார். தமிழுக்காக பாலகுமாரன் நிறைய பரிசுகள் வழங்கியிருக்கிறார். தமிழும் அவருக்கு நிறைய பரிசுகள் வழங்கியிருக்கின்றன’’ என்று தெரிவித்தார் கமல்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘சின்னச் சின்ன வட்டங்கள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு புத்தகத்திற்கு, கமல்ஹாசன் முன்னுரை எழுதினார். 1979ம் வருடம் வந்த புத்தகம் இது.

இதோ... கமல்ஹாசனின் அந்த முன்னுரை...

சிநேகிதருக்கு முன்னுரை எழுதிக் கொடுப்பதில் லேசான சிரமம் ஒன்று உண்டு. எத்தனை கவனமாய், தெளிவாய் அவர் படைப்புகளைப் படித்தாலும், எழுதியவர் பக்கம் மெல்ல சாயாமல் இருக்கமுடியாது.

அதுவும் பாலகுமாரனை எனக்கு நெடுநாளாகவே தெரியும். அவர் கதைகளுக்கு முன்னரே அவரோடு எனக்குப் பழக்கம். ஒருவரின் நடை உடை, பாவனை, ருசி, அறிவு பற்றி முழுக்கத் தெரிந்த பிறகு அவரை அவர் கதையில் சுலபமாய்க் கண்டுபிடித்துவிட முடியும். இந்தக் கதையில் பாலகுமாரன் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கிற சந்தோஷத்திற்காகவே அவருடைய கதைகளைப் படிப்பது வழக்கம்.

மேலும் ஒரு முன்னுரை எழுதப் பரந்த தமிழ் இலக்கிய அறிவு தேவையா என்று எனக்குத் தெரியவில்லை. என் தமிழ் அறிவு சொல்பம். அறுபதுக்குப் பின் வந்த படைப்புக்கள்தான் எனக்கு அறிமுகம். ஆழ்ந்த இலக்கிய அறிவு அற்றவனாகவும், பாலகுமாரனின் சிநேகிதனாகவும் இருக்கிற என்னால் எழுதப்படப் போகும் முன்னுரையின் தவறுகளை நான் எழுதும் முன்னரே யோசித்துவைத்துவிட்டேன். அவைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

இவை முற்றிலும் தவிர்த்துவிடக் கூடியவையா என்பதும் எனக்குச் சந்தேகம்தான்.

ஆனால்...

நானும் எழுதுகிறேன். நிறைய படிக்கிறேன். தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அலைமோதுகிறேன். தனியாகவும் நண்பர்களுடனும் கவலையோடு தத்துவ விசாரம் செய்கிறேன். தத்துவம் அறிந்து தெளிந்த பின்னும் தவறுகள் செய்கிறேன். வலியிலும் வேதனையிலும் அவமானத்திலும் குன்றிப்போகிறேன். சிலசமயம் இவை நேராமல் நகர்ந்து நைச்சியமாய்த் தப்பித்துக் கொள்கிறேன். வலியற்று இருக்கையில் பழைய காயங்களின் பொருக்கைக் கிள்ளுகிறேன். கிள்ளி ரத்தம் கசிவதைப் பார்த்ததும் சட்டென்று மருந்திட்டு மேலும் கசியாமல் காப்பாற்றிக் கொள்ளுகிறேன்.

இங்கே, இதில் இந்த பாலகுமாரன் என்னுடைய ஜாதி. என்னைப் போலவே அவ்வப்போது தவறுகளைச் செய்துவிட்டு, தடுக்கி விழுந்து ரத்தவிளாறாய் எழுந்துநின்று, நொண்டி நொண்டி மேலே நடக்கத் தலைப்பட்டவர். அவர் கதைகளில் அவர் அநுபவம் தெரிகிறது. அந்த அநுபவத்தை வெட்கமின்றி கதையாக்கிப் பகிர்ந்துகொள்வது புரிகிறது. விலகி நின்று சம்பவத்தை யோசித்து எடை போட முயல்வது புரிகிறது.

அநுபவங்களை எழுதுகையில் சில தவறுகள் ஏற்பட்டுவிடும். சம்பவத்தைத் தன் பக்கம் சாதகமாக இழுத்துக்கொள்ளும் ஆசை ஏற்பட்டுவிடும். சம்பவத்துக்கு அப்பாலும் வேறு சிலவற்றைக் கோர்த்துவிட நேர்ந்துவிடும். பாலகுமாரனும் இதற்கு விலக்கல்ல. அதிகமாய், மிகக் கடுமையாய் பெண்களால் விமரிசிக்கப்பட்ட ‘கெட்டாலும் ஆண் மக்கள்’ கதையில் இது நேர்ந்துவிட்டிருக்கிறது. ஆண்களை உச்சாணிக்குக் கொண்டு போய், ‘ஆஹா’ என்று ஒரு பொய்யான பிரமிப்பு காண்பிக்க அவருக்கு ஆசை வந்துவிட்டது. மனைவி தவறு செய்தாள் என்பதற்காகப் புருஷனைப் பாராட்டுவது உத்தமமாகாது. பெண்ணுக்கு உண்டான நடைமுறை நிர்ப்பந்தங்களைப் புறக்கணித்துவிட்டு, ஆணைத் தட்டிக்கொடுப்பது சரியில்லை. பாலகுமாரன் ஆணாக இருப்பதால், இது நேர்ந்துவிட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனாலும் இந்தக் கதைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகமிகக் கடினமான ஓர் அம்சத்தை சற்று விலகினாலும் ஆபாசமாகிவிடும் விஷயத்தை, உறவுத் தளரலைத் தெளிவாகவும், நெருடலின்றியும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார். ஒரு கவிஞனின் லாகவத்துடன் எழுத்தைக் கையாண்டிருக்கிறார். ஆண் பெண் கூடலை வயதான எழுத்தாளர்கள் பக்கம்பக்கமாய் இன்னும் எழுதிக்கொண்டிருக்க, ‘உடம்பில் ஒன்றுமில்லாமல் ஓடுகிற சியாமளியும் பேண்டுக்குள் புகுந்துகொண்டிருக்கிற பையனும்’ என்று இரண்டே வரியில் கூடல் விஷயத்தைக் காட்டுகிறார் இந்த இளைஞர். எழுத்தில், எழுதுவதில் அவருக்குள்ள ஸின்ஸியாரிட்டியை நான் சட்டென இங்கே புரிந்துகொண்டேன். நேரடி அநுபவம் மிக்கவர் என்று அறிந்துகொண்டேன். அநுபவித்தவன் அலட்டிக்கொள்ளமாட்டான் என்பது இங்கே நிரூபணமாகிறது.

இந்தக் கதையில் பெண்களை அவர் தாழ்த்திவிட்டது ஒரு ஸ்லிப் என்பது அடுத்த கதைகளில் தெரிந்துபோயிற்று.

‘எந்தக் கரை பச்சை?’ கதாநாயகன் சாது. நல்லவன். மன்னியின் புடவையை மடித்துவைக்கிறவன். மிளகாய் வற்றலை நினைவாய் வெய்யிலில் உலர்த்துகிறவன். தானே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு எச்சலிடுகிறவன். குற்ற உணர்ச்சி இல்லாமல் பெண்களுக்கு வேலை செய்கிறவன். பெண் பார்க்கிற படலம் வேண்டாம், அது ரசக்குறைவு, அநாகரிகம் என உண்மையாய் நினைக்கிறவன். இத்தனை மென்மையானவனும் சறுக்குகிறான். எதிராளி ஏற்றின விஷம் தாக்கித் தடுமாறுகிறான். காப்பி தயாரித்துக் கொடுக்கச் சொன்ன மன்னி மீது பாம்பாய்ச் சீறுகிறான். இந்தத் தடுமாற்றம் க்ஷணநேரம் என்று கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் நம் மனதுக்குத் தெரிகிறது. பெண்களுக்கெதிராய் இந்தச் சமூகக் கோட்பாடு ஆணுக்கு விஷமேற்றி விட்டிருக்கிற அவலம் புரிகிறது. அந்தப் பையன் சற்றுநேரத்தில் சரியாகிவிடுவான் என்று தோன்றுகிறது. விலாவரியாய் அவன் வீட்டுப் பெண்களைப் பற்றிச் சொல்லி அவன் சீறலை சுருக்கி உரைத்ததன் நயம் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.

 இதே விதமாய், ‘நெட்டிபொம்மைகள்’ நடைமுறைக்கு ஒவ்வாத ஓர் உறவு. இரண்டு இளைஞர்கள் உபநடிகையுடன் கூடிக்களிக்கும் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. எழுத வாய்ப்பிருந்தும் கூடல்கள் பற்றிய விவரங்கள் நிர்த்தாட்சண்யமாய் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.  பரஸ்பர மனித நேயம், புருஷ கம்பீரம், ஓடி உதவுகிற சாமர்த்தியம், புத்திசாலித்தனம், சின்னச்சின்னதாய் கவனமாய் கோர்க்கப்பட்டிருக்கின்றன. கதை முழுக்க இந்த இளைஞர்களின் படிப்பு, பணம் பற்றிய கர்வம் படருவது தெரிகிறது. இந்த இளைஞர்கள் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை; நம்மைப் போல் இரண்டுங்கெட்டான்கள். ஆனால் உபநடிகையின் ஒரு சின்ன எதிர்ப்பை, இடம் மாறலை இவர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இத்தோடு முடித்திருந்தால், இது ஒரு மோசமான கதையாய் மாறிவிட்டிருக்கும். பாலகுமாரனுக்கு நிஜம் அறிந்துகொள்வதில் உள்ள ஆவல் கடைசி பாராவில் வெளியாகிவிட்டது. தாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறபடி புரட்சியாளர்களோ, தத்துவாதிகளோ தாங்கள் இல்லை என்பது இவ்விருவருக்கும் வேறு ஒரு கோணத்தில் புரிந்துபோகிறது. ஒரு சுயமதிப்பீடு (self criticism) வந்துவிடுகிறது. உண்மை சிலருக்கு சிலசமயம் சற்றுநேரம் கழித்தே புரியும். என்ன செய்வது? இந்தக் கதை நாவலாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்ததாய் ‘ஒற்றை காகம்’. வலிய வந்து சுற்றிச் சுற்றி ஹிம்சைப்படுத்தும் சிநேகிதம், இடம் புரியாமல்., இதம் புரியாமல் ஆளை அழுத்தும் சிநேகபாரம். ஆளை வெட்டி, சீச்சீ... என்று சொல்வது தவறுதான்... ஆனால் வேறு வழியில்லையே! போலியான ஆட்களுடன் பேசிக்கொண்டிருக்கிற கஷ்டத்தைத் தவிர்க்க முடியாத இந்தச் சிரமத்தைச் சிறப்பாய் எழுதியிருந்தார்.

சைரன் எழுப்பி, டோக்கன் போட்டு வெளியே போகையில் சட்டையைத் தடவி அனுப்பும் தொழிற்சாலையை எனக்குத் தெரியாது - ஆனாலும் புரிந்துகொள்ள முடிகிறது. யூனியனும் யூனியன் லீடரும் வெவ்வேறானவை என்று புரிகிறது. ஒரு கூட்டம் உயரத்தூக்கி ஒரு தனிநபரைத் தலைவனாக்குகையில் அவன் உள்மன விவகாரம் அவனைவிட உயரமாய் ஊளையிடுகிறது. வாசகர்களில் கூடத் தொழிற்சாலை சிலருக்குப் புரியாததாய் இருக்கலாம். ’மிதப்புகள் முறியும்’ யூனியன் லீடரைத் தெரியாமல் போகாது. அவன் இன்றைய அரசியல் நபர். இவர்களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது ஒரு வெட்கப்படத் தகுந்த உண்மை. அவனுக்கே அவன் மன விகாரம் பிடிபடுகையில் - இது சுவாரஸ்யமான கதை.

‘அரியா... அரியா...’ தொழிற்சாலை ஆட்களின் கதை. ஓடி வந்த பெண்ணை ‘வைத்துக்கொள்கிற’ ஓர் இளைஞனின் சுயநலம். அவன் நண்பர்களைத் துரோகிக்கும் பான்மை... தொடர்ந்து பழிவாங்கு படலம். ஒரு திரில்லரின் சுவையோடு சொல்லப்படுகிறது.

‘மிஷின்... மிஷின்... மிஷின்...’ இன்னொரு விதமான தொழிலாளி. தன்னை மிஷின்களோடு பிணைத்துக் கொண்டு, அதைக் குனிந்து ஜப்பானியன் மாதிரி வழிபடுகிறவனின் மனம். பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு போவது மாதிரி, காதலியைப் பாக்டரிக்கு அழைத்துவரவேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால் ஆறு மடிப்பும், பன்னிரெண்டு ஓட்டையுமாய் வெளியே விழுந்து இறக்கிறான். கதை முடிவு அதிர்ச்சியுற வைப்பதற்கா என்ற கேள்வி வந்தாலும் crisp ஆக இருக்கிறது.

‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள்’, ‘நெருடலை மீறி நின்று’, ‘மனிதர் முகத்தை மனிதர் பழிக்கும் வழக்க மினியுண்டோ?’ - மூன்றுமே ஆண், பெண் உறவுகளை வெவ்வேறு கோணத்தில் அலசுகின்றன. லேசான fantasy தெரிகிறது. எல்லாச் செலவோடும் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்கிற ஆள் - அருகில் அமர்ந்து, தொட்டுத் தலையைத் தடவி உன் முகத்து கோரம் உனக்கு மறந்து போகணும் என்று சொல்லிவிட்டுப் போகும் ஆண். ஆரம்பத்தில் மனைவியின் முகத்தை, உடம்பை பழித்துவிட்டு விபசாரக் கைதிகளுக்கு நடுவே போலீஸ் வேனில் உட்காரும் நிர்ப்பந்தம் பார்த்தவுடன் பதறி அவளை அணைத்துக் கொள்ளும் புருஷன் - சம்பவங்கள் மிகக் கவனத்துடன் கட்டப்பட்டிருக்கின்றன. இப்படி உனக்கு நடந்தால் என்ன செய்வாய் என்று யோசிக்க வைக்கின்றன. பரஸ்பரம் மனிதரைப் புரிந்துகொள்ள ஓர் அவஸ்தை தேவைதான் என்று பறைசாற்றுகின்றன.

மேற்சொன்னவை தவிர மற்ற கதைகள் என்னை அதிகம் பாதிக்கவில்லை. இதற்கு காரணம் என் அநுபவமின்மையோ என்னை, பிறரை இனங்காணும் தன்மையோ எனக்குக் குறைவாக இருக்கலாம். அவைகள் நல்ல கதைகள் என்று வேறு யாராவது பாராட்டவும் கூடும்.

ஒட்டுமொத்தமாய் எனக்குப் பாலகுமாரனிடம் புரிந்தது நல்ல உறவுக்கு ஏங்குந்தன்மை. இதை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம். எப்படி எப்படி என்று அலையும் சுபாவம். சராசரி எல்லா மனிதனுக்குள்ளும் இவை நிச்சயம் இருக்கும். இவைகளுக்காக நானும் ஏங்கியிருக்கிறேன் என்பதே... தொடர்ந்து தவிக்கிறேன் என்ற காரணமே இந்த முன்னுரை எழுத என் முதல் தகுதியாகவும் உந்துதலாகவும் எடுத்துக் கொண்டேன். இவைகளை மனசில் நிறுத்திப் படிக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இவர் கதைகள் மிகவும் பரவசமூட்ட முடியும். இவைகளைத் தாண்டி அப்பால் சென்றுவிட்டவர்களும் ரஸிக்க முடியும்.

மற்றபடி செய்நேர்த்தி, எழுத்தின் கட்டுக்கோப்பு, வார்த்தை ஜாலம் நீக்கி அடக்கமாய்ப் பேசும் குணம் இவைகளை அக்கறை உள்ளவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள். நான் கருத்துக்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துபவன். என்னோடு என் போலவே என் சகமனிதன் சிந்திப்பது ஆரோக்கியமாய்ப்பட்டது. இவர் கருத்துக்களோடு போகையில் இந்தக் கதைகளை தமிழின் மிகச் சிறந்த படைப்பு என்று நான் சொல்ல முடியவில்லை.

ஆனால்...

வியாபாரப் பத்திரிகை, விற்காத பத்திரிகை என்று இலக்கியம் பிளவுபட்ட காலம் இது. எல்லாக் கலைகளுக்கும் உண்டான தலைவிதி இது. இவ்விரண்டு இடங்களிலுமே பாலகுமாரன் தன்னை நிறுத்திக்கொள்ள முயற்சிப்பது கூர்ந்து கவனிக்கிறவர்களுக்கு புரியக்கூடும். என் அறிவுக்கெட்டியவரை கலை உலகத்தில் இவ்விதமான நபர்களே திருப்புமுனையாளராகவும் அதிகம் பேசப்படுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பாலகுமாரன் இங்கே அதிகம் நம்பிக்கை தருபவராகவே எனக்குப்படுகிறார். என் இனிய நண்பரின் இலக்கியப் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

- கமலஹாசன்

எழுத்தாளர் பாலகுமாரன் தொடர்பான கட்டுரைகளைப் படிக்க...

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close