[X] Close

விடைபெறுகிறேன்..! எழுத்துச் சித்தரின் இறுதி நிமிடங்கள்


balakumaran-last-minutes

  • வி.ராம்ஜி
  • Posted: 21 May, 2018 11:17 am
  • அ+ அ-

“நாளைக்கி டிஸ்சார்ஜ் ஆயிடலாம் சார்’’ - கடந்த மே 13-ம் தேதி, காவேரி மருத்துவமனையின் டாக்டர்கள் சொன்னபோது, ஒரு குழந்தையைப் போல துள்ளிக் குதித்தார் எழுத்தாளர் பாலகுமாரன். அவர் எப்போதுமே குழந்தையின் குணங்களைக் கொண்டவர்தான்.

10-ம் தேதி, ஆஸ்பத்திரியில் அனுமதி. வழக்கம் போலவே நுரையீரல் தொற்று. மூச்சுவிடுவதில் ரொம்பவே சிரமம். மாஸ்க் எப்போதும் பொருத்தப்பட்டு, ஆக்ஸிஜன் செலுத்தவேண்டிய நிலை!

ஒவ்வொரு முறை மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம், நலம் பெறுகிற அதேநேரத்தில் கதையும் பண்ணுகிறவர் பாலகுமாரன் என்று எல்லோருக்கும் தெரியும். மருத்துவமனை என்றில்லை, அவர் எங்கு சென்றாலும் அந்தக் களம் கதையாகிவிடும். நோயின் தன்மை, மருந்தின் வீரியம், என்னென்ன சிகிச்சைகள், என்னென்ன செய்யும், எதையெல்லாம் தாக்கும் என்பதை டாக்டர்களிடம் கேட்டுக்கேட்டு வாங்குவார்.

சமீபமாக, சிறுகதை எழுதுவது குறைந்துவிட்டது. என்றாலும்கூட நோய், மருந்து, வலி குறித்தெல்லாம் தன் முகநூலில் விரிவாகவே பதிவிட்டுவிடுவார். ஆனால், இந்த முறை அப்படியில்லை. எதுவும் இயலவில்லை. வலியின் தாக்கமும் மூச்சின் தடைகளும் அவரை அயர்ச்சிப்படுத்தியிருந்தன.

பாலகுமாரன் மகள் ஸ்ரீகெளரி வெளிநாட்டில் கணவருடன் வசிக்கிறார். “அப்பாவுக்கும் அடிக்கடி முடியல. அங்கேயெல்லாம் வர முடியல. எங்க மாமனாருக்கும் உடம்பு முடியல. 17 வருஷம் எங்கேயோ இருந்தாச்சு. இப்ப சென்னைக்கே வந்துடலாம்னு முடிவாகி, அண்ணாநகர்ல வீடு வாங்கி, அடுத்த மாசம் செட்டிலாகப் போறோம். அப்பாவுக்கு ஒரே சந்தோஷம். ‘அங்க வந்து ரெண்டுநாள் இருப்பேன்’னு சொல்லிக்கிட்டே இருந்தார். நாங்க சென்னைக்கு வர்றதுல அவ்ளோ சந்தோஷம் அவருக்கு’’ என்கிறார் ஸ்ரீகெளரி.

“ `சூர்யா. என் வாய்ஸ் ரெக்கார்டர் எங்கே. அதை எடு. லேப்டாப்பை எடுத்துட்டு வரலியா? உடனே எடுத்துண்டு வரச்சொல்லு’’ என்று சிரமத்திற்கு மத்தியிலும் கோபமாகிக் கேட்டார். கதையை அப்படியே சொல்லி ரெக்கார்ட் செய்துதர, அதை உதவியாளர் லேப்டாப்பில் டைப் செய்து, காட்டுவார். ஆனால், எடுத்துவரவில்லை என்றதும் கோபம் வந்துவிட்டது அவருக்கு.

“மகாபாரதம் ஒரு தொகுதி புத்தகமாவே வந்துருச்சு. வர்ற ஜூலை 5-ம் தேதி, பிறந்தநாளின்போது, இன்னொரு தொகுதி. டிசம்பருக்குள் அடுத்த தொகுதின்னு மகாபாரதம் எழுதி முடிக்கணும்னு ஆசையா இருந்தார். ‘இன்னும் மூணு வருஷம் இருப்பேனா. அதுக்குள்ளே எழுதிடுவேன்’னு சொல்லிக்கிட்டே இருந்தார். ஓவரா ஸ்ட்ரெயின் பண்ணிக்காதேப்பான்னு வாய்ஸ் ரெக்கார்டர் தரலை.

வீட்ல இருக்கும்போது, திடீர்னு ‘சூர்யா வண்டியை எடு’ன்னு சொல்லுவார். கார்ல ஏறி உக்கார்ந்ததும் மகாபலிபுரம் ரூட்ல போகச் சொல்லுவார். வண்டிகிளம்பும். இவர் மகாபாரதத்துக்குள்ளே டிராவலாயிருப்பார். கண்ணை மூடிக்கிட்டு, கதையை ரெக்கார்டர்ல பதிவு செஞ்சுட்டு, கண்ணைத் திறக்கறதுக்கும் கேசட் முடியறதுக் கும் மகாபலிபுரம் வர்றதுக்கும் சரியா இருக்கும். ஆனா, இந்த முறை வழக்கத்தை விட அதிக சிரமம். நெஞ்சுல, கைல, தோள்ல, கால்ல வலி. உடம்பு பிடிச்சுவிட்டுக்கிட்டே இருந்தேன்’’ என்கிறார் சூர்யா பாலகுமாரன்.

இரண்டாம் உலகப் போர் பாலகுமாரனுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுகுறித்து ஆய்வுகள் செய்து, வெள்ளைத்துறைமுகம் என்று எழுதத் தொடங்கினார்.

“ஒருபக்கம் மகாபாரதம், இன்னொரு பக்கம் கூரைப்பூசணி சிறுகதைகள், அடுத்ததா, அப்பாவோட எல்லா சிறுகதைகளையும் தொகுத்து தனிப்புத்தகம்னு வேலைகள் நடந்துக்கிட்டே இருந்தது. இதுக்கு நடுவுல, வெள்ளைத்துறைமுகம் - இரண்டாம் உலகப்போர் பத்தி சொல்ல ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட 500 பக்கங்கள் வரை எழுதியாச்சு. ஆனா ஒருநாள்... ‘இது சரியில்ல. வேற விதமாப் போகணும். இது வேணாம்’னு சொல்லிட்டார். அப்பா அப்படித்தான். அவ்ளோ ஹானஸ்ட்மேன்’’ சொல்லும்போதே குரல் உடைகிறது சூர்யாவுக்கு.

 “டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்று சொன்ன பிறகு, ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. படுக்க முடியவில்லை. படுத்தால் இன்னும் மூச்சுவிட சிரமம். ஸ்பெஷல் ஐசியூவுக்கு மாற்ற, அங்கேயும் செய்கிறார் அடம். ‘வாய்ஸ் ரெக்கார்டர் எங்கே, லேப்டாப் வந்தாச்சா? கொஞ்சநேரம் கதை சொல்ல ஆரம்பிச்சா, சரியாயிரும். நாளைக்குத்தான் டிஸ்சார்ஜ்னு டாக்டர் சொல்லிட்டாரே.

லண்டன் போறோம். அங்கே மியூஸியத்துல இருக்கற ராஜராஜ சோழன் காலத்து நடராஜர் சிலையைப் பாக்கறோம். நான் அந்தச் சிலையைத் தடவிப் பாக்கணும். நடராஜர் கையோட என் கை கோத்துக்கணும். விரல் நீவி விடணும்’ - மூச்சிரைப்பைத் தாண்டி, மாஸ்க்கையும் கடந்து, ஸ்டீராய்டு டோஸூக்கும் அப்பாற்பட்டு சொல்லிக்கிட்டே இருந்தார் அப்பா. ஆனா, அடுத்தடுத்த நேரங்கள் இன்னும் மோசமாச்சு’’ சொல்லிவிட்டு, அப்பாவின் படத்தையே வெறித்துப் பார்க்கிறார் சூர்யா.

செவ்வாய்க்கிழமை. மே 15-ம் தேதி. நினைவில்லை; தப்பிவிட்டது. கன்னியாகுமரியில் இருந்து போன். கமல் பேசுகிறார்... ‘பாலா எப்படி இருக்கார்?’ என்கிறார். ‘முறைப்படி டாக்டர் இப்ப சொல்லப்போறாங்க அங்கிள்...’ எதிர்முனையில் பதிலில்லை.

எழுத்து எழுத்து எழுத்து... உழைப்பு உழைப்பு உழைப்பு... அந்த மூச்சு அடங்கும் வரைக்கும் அதே நினைப்பு. அதிலேயே லயிப்பு.

தந்தையின் அந்தக் கடைசி நிமிடங்களை இப்படி விவரித்தார் சூர்யா. ``நினைவு இருக்கும் போது, கொஞ்சநேரம் தூங்கி எழுந்திரிச்சார். எனக்குத் தெரிஞ்சு அப்பா பல வருஷங்களுக்குப் பிறகு கொஞ்சம் நிம்மதியா தூங்கினது அந்த டைம்தான். எழுந்ததும்... ‘என் போன் யார்கிட்டே இருக்கு’ன்னு கேட்டார். ‘எங்கிட்டதான் இருக்குப்பா’ன்னு சொன்னேன். கொடுன்னு கேட்டார். எதுக்குன்னு கேட்டேன்.

ஒருநிமிஷம் அமைதியா இருந்தார். ‘யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா’ன்னு சொன்னார். திரும்பவும் அமைதி. ‘ஃபேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போடணும்’னு சொன்னார். ‘என்னனு போடணும்’னு கேட்டேன்.’’

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close