[X] Close

பாலாவின் குதிரை வேக எழுத்துகளும்... அந்த குதிரைக் கவிதைகளும்..!


bala-horse-kavidhaikal

  • வி.ராம்ஜி
  • Posted: 21 May, 2018 10:14 am
  • அ+ அ-

எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் வாசகர்கள், லாரியைப் பார்க்கும்போதெல்லாம் குதிரையை நினைவுபடுத்திக்கொள்வார்கள்.  குதிரையப் பார்க்கும் போதெல்லாம் அவரின் இரும்புகுதிரைகள் எனும் நாவலையும் அதில் அவர் எழுதிய, குதிரைக் கவிதைகளையும் அசைபோடுவார்கள். இரும்புகுதிரைகளும் குதிரைக் கவிதைகளும் எழுத்துலகில் வெகு கம்பீரமாய், இன்றைக்கும் குளம்படி ஓசை கேட்க, பவனி வந்துகொண்டிருக்கின்றன.

இரும்பு குதிரைகள் நாவலில் இன்னொரு முயற்சியையும் மேற்கொண்டிருப்பார் பாலகுமாரன். அதாவது, நடுநடுவே குதிரைக் கவிதைகள் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒருகட்டத்தில் ஓர் அத்தியாயம் முழுக்கவே கவிதையாகவே, குதிரைக் கவிதையாகவே எழுதியிருப்பார். 

அந்த குதிரைக் கவிதைகள்...

குதிரைகள் கடவுள் ஜாதி- அதைக்

கும்பிடுதல் உலக நீதி.

புணர்ந்தபின் குதிரைகள்

ஒருநாளும் தூங்கிய தில்லை

பிடரியைச் சிலிர்க்க ஓடும்

பின்னங்கால் வயிற்றில் மோத

மனிதரில் உயர்ந்தவர்கள்

மறுபடி குதிரையாவார்

மறுபடி குதிரையாகி

மனிதரைக் காண வருவார்

*******************

குதிரைகள் பசுக்கள் போல

வாய்விட்டுக் கதறுவதில்லை

வலியில்லை என்பதல்ல

வலிமையே குதிரை ரூபம்

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை

சவுக்குக்காப் பணிந்துபோகும்- இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் முதலாம் பாடம்

****************************

குளம்படி ஓசைக் கவிதை

குதிரையின் கனைப்புக் கீதம்

வீசிடும் வாலே கொடிகள்

பொங்கிடும் நுரையே கடல்கள்

பிடரியின் வரைவே வயல்கள்

உருண்டிடும் விழியே சக்தி

குதிரையின் உடம்பே பூமி

சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு- இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் இரண்டாம் பாடம்

*****************************

குதிரைகள் பயணம் செய்யா

கூட்டமாய்ப் பறவை போல

இலக்குகள் குதிரைகளில்லை

முன்பின்னாய் அலைதல் தவிர

குதிரையை மடக்கிக் கேளு

போவது எங்கே என்று

புறம் திரும்பி அழகு காட்டும்

கேள்வியே அபத்தம் என்று

இலக்கில்லா மனிதர் பெரியோர்

உள்ளவர் அடையமாட்டார் - இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் மூன்றாம் பாடம்

************************

குதிரைகள் தூங்குவதில்லை

ஏனைய உயிர்கள் போல

நிலம் பரவி கால்கள் நீட்டி

கன்னத்துப் பக்கம் அழுந்த

குதிரைகள் தூங்குவதில்லை

ஏனைய உயிர்கள் போல

நிற்கையில் கண்கள் மூடி

களைப்பினைப் போக்கும் குதிரை

தொட்டதும் விழித்துக்கொள்ளும்

தொடுதலைப் புரிந்துகொள்ளும்

தூங்குதல் பெரிய பாவம்

தூங்கவா பிறந்தீர் இங்கு?

வாழ்வதோ சிறிது நாட்கள்

அதில் சாவினை நிகர்த்த தூக்கம்

புரிபவர் பெரியோர் அல்லர்.

வாழ்பவர் தூங்கமாட்டார்.

குதிரைகள் கண்கள் மூடி

குறி விறைத்து நிற்கும் காட்சி

யோகத்தின் உச்சக்கட்டம்

நெற்றிக்குள் சந்திரபிம்பம்- இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் நான்காம் பாடம்

************************************

 நீர்குடிக்கக் குனியும் குதிரை

நிழல் தெரியப் பின்னால் போகும்

மிரளுவது மிருகம் என்பார்

சீர்குணம் அறியமாட்டார்

வேறொன்று குடிக்கும்போது

தான் கலக்கல் கூடாதென்று

குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை

மிருகத்தில் குழந்தை ஜாதி

கால்வைத்த இடங்கள் எல்லாம்

பூ முளைக்கும் இடமென்றெண்ணி

குளம்பது விளிம்பில் நிற்கும்

குதிரையா மிரளும் மிருகம்

குதிரையின் குளம்பைப் பாரும்

இடுக்கிலே ரோமம் சிரிக்கும் - இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் ஆறாம் பாடம்

*****************************

அவல ஆடுகள் கூட இங்கே

கொம்புடன் ஜனித்ததாக

கீச்சுப்பூனைகள் கொண்டதிங்கே

கூரிய நகமும் பல்லும்

யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்

கல்லாய் ஓடு,

பச்சோந்தி நிறத்தை மாற்றும்

பல்லிவால் விஷத்தைத் தேக்கும்

குதிரைகள் மட்டுமிங்கே

கொம்பின்றிப் பிறந்ததென்ன?

வெறுப்புடன் பிறந்த மாக்கள்

பயத்தினைத் துணையாய்க் கொள்ள

விருப்புடன் பிறந்த குதிரை

கொம்பில்லை விஷமுமில்லை

தர்மத்தைச் சொல்லவந்தோர்

தடியோடா காட்சி தருவர்?

குதிரைகள் காதைப் பாரும்

உள்ளங்கைச் சிவப்பு தோற்கும்

இது குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் ஏழாம்பாடம்.

*************************

உழைப்புக்கே குதிரை யென்ற

பெரும் போக்கு ஒருநாள் உடையும்

குரங்குகள் மனிதர் போல

வளர்ந்தது உண்மையாயின்

குதிரையின் ரூபம் மாறும்

உடல் மட்டும் மனிதர் போல

மடிமீது வீணை போட்டு

மழைக்கான வேதம் பாடும்

இரு காலில் புவி ஈர்ப்பை

ஏந்திய குதிரைப் புத்தி

உலகத்தின் மாயை மாற்றும்

சகலமும் கவிதையாகும்

குதிரைகள் மாறும் ஒருநாள்

குரங்குகள் மடியும் அன்று.

*********************

சவுக்கடி பட்ட இடத்தை

நீவிடத் தெரியா குதிரை

கண்மூடி வலியை வாங்கும்

இதுவுமோர் சுகம்தானென்று

கதறிட மறுக்கும் குதிரை

கல்லென்று நினைக்கவேண்டாம்

கதறிட மேலும் நகைக்கும்

உலகத்தை குதிரை அறியும்

**********************

கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி

கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி

கால்நடையைச் செல்வமெனக் கொண்ட நாளில்

ஆண்டிருந்த ஓரரசன் பறையறிவித்தான்

வீட்டிற்கொரு குதிரை வளர்க்கவேண்டும்

வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்

குதிரைகளே தேசத்தின் செல்வமாகும்.

போர் வந்தால் புரவிகளே அரசே வாங்கும்

போர்க்களம் காணாத அரசே இல்லை

போராட்டம் இல்லாத காலம் இல்லை

போர்க்காலம் முன் கருதி புரவி வளர்ப்பீர்

பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர்

மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்

மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி

பறையடித்தும் ஊர் முழுதும் சேதி சொல்ல

ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு

இவனென்ன பேயரசன் குதிரைவெறியன்.

************************************

கல்தோன்றி மண் தோன்றி கடவுள் தோன்றி

கைவழியே மொழிவளரும் காலம் தோன்றி

கால்நடையைச் செல்வமெனக் கொண்ட நாளில்

ஆண்டிருந்த ஓரரசன் பறையறிவித்தான்

வீட்டிற்கொரு குதிரை வளர்க்கவேண்டும்

வேண்டுகின்ற உதவிகள் அரசு செய்யும்

குதிரைகள் தேசத்தின் பொக்கிஷங்கள்

போர் வந்தால் புரவிகளை அரசே வாங்கும்

போர்க்களம் காணாத அரசே இல்லை

போராட்டம் இல்லாத காலம் இல்லை

போர்க்காலம் முன் கருதி புரவி வளர்ப்பீர்

பின்வரும் சந்ததிக்கு உறுதி கொடுப்பீர்

மீறுபவர் தேசத்தின் முதல் எதிரிகள்

மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார் உறுதி

பறையடித்தும் ஊர் முழுதும் சேதி சொல்ல

ஜனம் கூடி தெரு நடுவே புலம்பலாச்சு

இவனென்ன பேயரசன் குதிரைவெறியன்.

திடுமென்று குதிரைக்கு எங்கேபோக...

குதிரைதான் செல்வமெனில் செந்நெல் என்ன

கொள்ளு மட்டும் பயிரிடவா வயலும் நீரும்

ஆடுகளோ உணவாகும் மாடுகளோ பயிர்வளர்க்கும்

மேய்ப்பதொன்றும் கடினமில்லை

கோல் அசையக் கூடவரும்

குடும்பத்து பெண்மணிக்கு குதிரைகளா கட்டுப்படும்?

குரல்கொடுத்தால் நாய்போல புரவிகளா துணையாகும்?

இவன் என்ன பேயரசன் குதிரை வெறியன்

பார்ப்பனர்கள் சிலர் கூடி தமக்குள் பேசி

முடிவாக திடமாக சபைக்குள் சென்று

தமக்கும் மட்டும் கட்டளையைத் தளர்த்துமாறு

பணிவாக அறிவித்தார் காரணம் சொன்னார்

வேதங்கள் சொல்லுகையில் குதிரை கனைக்கும்

பாடத்தில் முழுமுனைப்பு சிதறிப்போகும்

தோல்பொருளை பார்ப்பனர்கள் தொடக்கூடாது

வாரின்றி குதிரைகள் வசப்படாது

போருக்கும் பார்ப்பனருக்கும் பொருத்தமில்லை

போரில்லா வாழ்க்கையிதே எங்கள் கொள்கை

பேரரசன் யோசித்தான் தலையசைத்தான்

பார்ப்பனர்கள் குதிரைக்கு விலக்கு என்றான்.

 

பார்ப்பனர்கள் சபை நீங்க வணிகர் வந்தார்

வைத்தியரும் கொல்லரோடு சேர்ந்துகொண்டார்

எங்களுக்கும் விலக்களிப்பாய் தேரா மன்னா

வணிகத்தில் எருதுகளே உதவியாகும்

பொதி சுமக்கும் கழுதைகளே போதும் எமக்கு

ஊர்சுற்றும் வேலையிலே நாங்கள் இருக்க

பெண்டுகளே பிறவேலை செய்தல் வேண்டும்.

புரவிகளை பெண்டுகளால் ஆளமுடியுமா?

பேரரசே தயைசெய்யும் இது தாங்கமுடியுமா?

மன்னவனும் மனு ஏற்றான். விலக்கு என்றான்.

 

வந்தவர்கள் சபை மீள கூட்டமாக

தொழில் தெரிந்த சூத்திரர்கள் முன்னே சென்றார்.

குதிரைகள் பேணுதற்கு வசதியில்லை.

முன்பின்னே இதுகுறித்துப் பழக்கமில்லை.

கைகாலே துணையாக உழைப்போர் நாங்கள்.

போரென்றால் கால்படையின் அங்கம் நாங்கள்

குதிரைகள் சுமை எமக்கு உதவிதராது.

உழவுக்கோ கவலைக்கோ துணையாகாது.

மன்னவனும் தலையசைத்தான் சரியே என்றான்.

படைவீரர் மேற்கொள்வார் போகச் சொன்னான்.

 

படைவீரர் பெருமறவர் கூட்டம் போட்டார்

முடிவாக அரசனிடம் வணக்கம் சொன்னார்

போர்க்காலம் குதிரைகள் தேவையெனினும்

போர் எதிரி யானையுடன் வந்து நின்றால்

குதிரைகள் என் செய்யும் கலைந்துபோகும்

படைவீரர் தெருவுக்கு ஒருயானை வளர்ப்பார்

முறைபோட்டு அனுதினமும் பேணிக்காப்பார்

வீட்டுக்கொரு குதிரையென்ற விதியினின்று

பேரரசே விலக்களிப்பீர், யானை தருவீர்.

 

பேரரசன் யோசித்தான் கவலை சூழ

கையசைத்தான் மறவர்கள் கலைந்துபோக

மறுநாளே சபைகூட்டி எழுந்து நின்று

பெருமன்னன் குரல் செருமி பேசலானான்

குதிரையெனச் சொன்னது விலங்கா மக்காள்

புரவியதன் மகிமையைத் தெரியா ஜனமே

வீட்டுக்கொரு வலிமையுள்ள மனிதர் என்று

நான் சொன்ன செய்தியது தவறோ சொல்வீர்.

குதிரையதை சபைநடுவே நிறுத்திப்பாரும்

உடல் முழுதும் கைதடவி உணர்ந்துபாரும்

எவ்வளவு தின்றாலும் குழிந்த வயிறு

எப்போதும் எப்போதும் துடித்த உணர்வு

கண்மூடி நின்றாலும் காதுகேட்கும்

காதுகளே நாலுபக்கம் சுற்றிப்பார்க்கும்

உடல்வலிமை இருந்தாலும் மூர்க்கம் காட்டா

குதிரை குணம் கொண்டவர்கள் உயர்ந்தோர் ஆவார்

 

போர் என்றால் குத்தீட்டி யுத்தம் அல்ல

மனிதரோடு மனிதர் வெட்டிச் சாய்தல் அல்ல

பெருவாழ்க்கை தனைநோக்கிக் காலம் போகும்

தன்மையினைப் போரென்றேன் வேறொன்றில்லை

புரியாத என்மக்காள் மந்தை ஆடே

உமக்கிங்கே அரசனாக வெட்கம் கொண்டேன்

வெறும் பதரைக் கோல்பிடித்து காப்பார் உண்டோ?

உணர்வில்லாத ஜனத்துக்கு அரசன் கேடோ

ஒருகாலம் இவ்வுலகம் கொள்ளும் கண்டீர்

குதிரைகளே உலகத்தின் பெருமூச்சாகும்

குதிரைகளே இப்புவியில் செங்கோல் ஓச்சும்

விரல் நுனியால் விசையறிந்து வேகம் காட்டும்

உழவுக்கும் தொழிலுக்கும் உதவியாகி

ஊர்விட்டு ஊர்போகக் கருவியாகி

விண்முட்டிக் கீழிறங்கி அனைத்துச் செயலும்

குதிரையே முன் நின்று நடத்தும் கண்டீர்.

கலியென்ற காலமுண்டு இத்தரை மீதில்

கடவுளெனக் குதிரைவரும் ஆட்சி செய்யும்

பல்வேறு ரூபத்தில் மனிதர் முன்னே

குதிரையெனும் பெருவுணர்வே கைகொடுக்கும்

வளமான வாழ்வுண்டு மனிதர் அன்று

தேவரென வலம் வருவார் சொல்வேன் கண்டீர்

கால்நடையில் ஆடுகளே செல்வம் என்ற

மக்களிடம் மன்னனென இருத்தல் வேண்டா

பசுக்களெனும் பார்ப்பனர்கள் காலம் முடிந்து

குதிரையிது வீணையிலே வேதம் பேசும்

காலத்தை என்னுள்ளே இன்றே கண்டேன்

போய் வருவேன் என்மக்காள் விடைகொடுப்பீர்.

உம்மோடு இருத்தல் இனி இயலாதென்றான்

பெருமன்னன் வாள்வீசி தன் தலை துணித்தான்

கவியென்றும் குதிரையதன் ஆட்சியின்று

கண் திறக்கத் துவங்கி விட்ட நேரம் கண்டோம்

தலைதுணிந்த பெருமன்னன் வருவான் மீண்டும்

முகம் மட்டும் குதிரையாகக் கொண்ட வாறு

குரங்குகளை மூத்தோராய்க் கொண்ட மனிதர்

குணம் மாறி குதிரைக்கு வணக்கம் சொல்வார்

கலியென்ற குதிரை தன் ஆட்சி துவங்கும்

 

மனிதருக்குள் மறுபடியும் நேசம் துளிர்க்கும்

யாகங்கள் பூஜைகள் பூர்த்திசெய்யா

ஸ்நேகத்தை குதிரைகள் வளர்த்துக் கொடுக்கும்

குழப்பங்கள் முற்பரப்பில் தோன்றினாலும்

குதிரைகள் விஞ்ஞானம் உலகம் வளைக்கும்

குதிரைகள் ஞானத்தை என்னுள் கண்டேன்

கலியென்னும் யுகத்துக்க்கு வரவு சொன்னேன்.

**************************

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close