[X] Close

’பாலா... ஒரு தலைமுறையே உனக்கு கடன்பட்டிருக்கிறது’


bala-maalan

  • kamadenu
  • Posted: 19 May, 2018 14:59 pm
  • அ+ அ-

- மாலன்

பாலா, நினைவு இருக்கிறதா உனக்கு.

உணக்கையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்த ஜூன் மாதம், நடுங்கி ஒடுங்குகிற குளிரோ, புழுங்க அடிக்கிற சூடோ இல்லாத இதம்.

நினைத்துக்கொண்டாற் போல் கிளம்பி, நீ தஞ்சாவூர் வந்தாய். திடுமென்று என் ஆபீஸில் பிரசன்னமானாய். அந்த க்ஷணமே ஆபீஸை உதறினோம். அடுத்த நிமிஷம் பஸ்ஸில் ஏறிப்புறப்பட்டோம்.

நிசப்தம் இசையாய் பெருகி நதியாய் ஓடுகிற திருவையாறு. ‘களுக் க்ளுக்’ என்ற பக்கத்தில் சுருள்கிற் ஆற்றின் சிரிப்பிலும், பனித்தூளாய் பெய்கிற பலாப்பூவிலும், எங்கேயோ சோற்றுக்குக் கரைகிற் காகத்தின் குரலிலும் சங்கீதம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிற தியாகப் பிரம்மம்.

எத்தனை பெரிய உயிர். சங்கீதத்திலும் உருக்கத்தையும் தவத்தையும் ஒன்றாய் இணைத்த மனுஷன். ராகங்களுக்கு உடம்பு கொடுத்த மனுஷன், எளிமையும் இனிமையும் கலந்த வடிவம், சொல்கிற விஷயத்திற்கு ஏற்ற வடிவம். புரண்டு புரண்டு கற்ற கல்வி, உயிர் தொட்டுப் பெற்ற அனுபவம், மனம் குவித்துத் தேறிய சிந்தனை, அடிபட்டுத் துடித்த வலி எதுவுமில்லாது வெறும் பொழுதுபோக்காகவே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் மூடனுக்குக் கூட, நாம் கூட பாடிவிடலாம் என நம்பிக்கையும், பிரமிப்பும், சந்தோஷமும் தருகிற உருவங்களைப் படைத்த கலைஞன்.

இவனை ராஜாக்கள் கும்பிட்டார்கள். வித்வான்கள் விற்றுப்பிழைத்தார்கள். வியாபாரிகள் கேட்டு இளைப்பாறினார்கள். ஜனங்கள் கேட்டு நெகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு தாஸி அல்லவோ கோயில் கட்டினாள்.

தாஸி மாதிரிதான் காவிரி புரள்கிறது. பூணூல் மாதிரி ஒடுங்கின காவிரியைப் பார்த்திருக்கிறோம். கணுக்காலைத் தொட்டு வணங்கிப்போன காவிரியைப் பார்த்திருக்கிறோம். பாலத்து முதுகின் மேல் சீற்றத்தோடு துப்பிவிட்டு விரைகிற காவிரியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அன்றைக்குக் காவிரி புரள்கிறது. தாஸி மாதிரி புரள்கிறது. காலை அகட்டி மல்லாந்து படுத்துக் கொண்டு வெட்கமில்லாமல் சிரிக்கிறது. மோகம் கொண்ட பொம்மனாட்டி காரணமின்றி பின்னலை முன் வீசி, பிரித்து கால் மாற்றிப் பின்னியது போல் சந்தேகம் பேசுகிறது. புத்திசாலிப் பெண் போல வதைக்கிறது. தொடுவாயோ என்று சீண்டுகிறது. தொட்டால் மாட்டிக்கொண்டாய் என மிரட்டுகிறது.

நமக்குத் தாங்கவில்லை. இறங்கிவிட்டோம். உடுத்தின துணியை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு அவர் அகத்திலேயே துண்டு வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டோம்.

நெஞ்சுவரை இறங்கிவிட்டோம். காவிரிக்கு இணையாகத் துளைந்தோம். கையில் நீர் வாரி வான் நோக்கி இறைத்தோம். நாசித்துளையைப் பொத்தி தலை நனைத்து சிலும்பிச்சிலும்பி மூழ்கிக் களித்தோம். இடுப்புத்துண்டைக் காவிரி உருவிற்று. மனம் தளை அறுந்து காற்றில் மிதந்தது. நாம் கற்ற பாசுரங்களை இறைத்தோம். நெஞ்சில் இறங்கி ஊறிய பாரதியைத் துப்பினோம். முறைவைத்து கவிதை கட்டி காற்றில் ஊதினோம். மனசு அடங்கவில்லை. தமிழின் புதிய ருசி புரிந்தது. வழக்கமான வார்த்தைகளுக்கு வேறு புதிய அர்த்தங்கள் துலங்கின.

அன்றைக்குக் காவிரியின் சுழிகளை எனக்கு அடையாளம் காட்டினாய். அதன் நெளிவுசுளிவு பற்றி கற்றுக்கொடுத்தாய்.

காவிரியை விடப் பெரிய இன்னொரு நதியை அடையாளம் காட்டி சொல்லித்தந்தான் இன்னொருவன். அதுவும் மோகங்கொண்டு அழைக்கிற நதிதான். இறங்கினால் ஆளைப்புரட்டி விடுகிற நதிதான். இந்த வண்டல் சேர்ந்துவிட்டால் பிறகு எதை முழுங்கினாலும் பசேல் என்று கிளைத்து எழுந்து நிற்கும். புத்தகப் படிப்பு எழுத்து கவிதை, இலக்கியம் என்று சின்னச் சின்னதாய் ஓடைகள் சேர்ந்து பெருகின வாழ்க்கை நதி அது.

படிப்பை முடித்துக்கொண்ட கையோடு ஒரு வேலையை சம்பாதித்துக்கொண்டு சென்னை வந்த எனக்கு ஏற்பட்ட முதல் ஸ்நேகம் அவன்தான். அது அதிருஷ்டம்தான். அவன்தான் உன்னை எனக்குச் சொன்னான். என்னை உனக்குச் சொன்னான். சின்னப்பத்திரிகை, நல்ல சினிமா என்று ஒரு கதவைத் திறந்தான். புத்தகப் படிப்போடு நிறுத்திக்கொண்டு விடவில்லை. வெறுமனே பேசிக்களைத்து ஓய்ந்துவிடவில்லை. தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல்கிறது என்ற பிரமையில் கிறங்கிப்போய் உட்கார்ந்துவிடவில்லை. கற்றதை எழுத்தில் வடித்துக் காண்பித்தான்.

சுறுசுறுவென்று, ஆனால் உறுத்தாத கூர்மையும் ஒளியும் கொண்ட எழுத்து அவனுடையது. அவன் குரலைப்போலவே அவன் எழுத்தும் உரத்து நான் பார்த்ததில்லை. ஆனால் சொல்வதை அழுத்தமாக, தீர்மானமாக, நயமாகச் சொல்கிற எழுத்தாய் அது இருக்கும். அரைப்பக்க சினிமா விமர்சனமானாலும் சரி... நாலுவரி கேள்வி பதிலானாலும் சரி... கவிதை, சிறுகதை, நாவல் என்று கனமான விஷயங்கள் ஆனாலும் சரி.

ஞாபகம் இருக்கிறதா? கணையாழி கடைசிப்பக்கத்தில் சுஜாதா ஒரு மானசீகத் தொகுப்பு வெளியிட்டார். கு.ப.ரா., லா.ச.ரா., புதுமைப்பித்தன் என்று பெரிய பெயர்களோடு துவங்கியப் பட்டியலில் நம் தலைமுறையில் இருந்தது அவன் பெயர் ஒன்றுதான். தி.ஜானகிராமன் நன்றாய் எழுதுகிற புதியவர்கள் பற்றிய தில்லி இலக்கிய உரையாடலில் ஸ்டாண்டேனியஸாகச் சொல்லிய பெயர் அவனுடையதுதான்.

அவனை இன்று ஆபீஸ் தின்றுவிட்டது. லடக்ஸ் பீப்பாய்களுக்கும் கணக்குப் புத்தகங்களுக்கும் ஆபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப் பெரிய ஆபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப்போனான். அவனைக் கண்டு வியந்துபோய் இங்கே நீ நாவலாக்கியிருக்கிறாய். அவனை நாயகனாக்கியிருக்கிறாய்.

கவிதையும் இலக்கியமும் வாழ்க்கையும் ஒன்றாக இருந்த காலங்கள் காணாமல் போய்விட்டன. வெகு வருடங்களுக்கு முன்னால், அம்மா அவளுக்கு வேண்டிய சாந்தை அவளே தயாரித்துக்கொண்டிருந்தாள். அதை வைப்பதற்கென்றே தனியாக பாத்திரங்கள் கூட இருந்தன. வெண்கலத்தில், வெள்ளியில், தேங்காய் சிரட்டையில் ஊற்றிவைத்த சாந்து முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும். மேலே பாத்திரம் ஜவ்வு கட்டியிருக்கிற அந்தச் சின்னச்சின்ன வட்டங்களில் ரேகை பார்த்தது மெத்தென்ற் சுகமான அனுபவம். சின்னவயதில் என் ரேகைகளின் அத்தனை அழகையும் பார்க்கக் கிடைத்த அந்தச் சிரட்டைகள்தான் எத்தனை விதம். இனிமேல் அந்த சாந்துச் சிரட்டைகள் நமக்குப் பார்க்கக்கூடக் கிடைக்காது.

இது பிளாஸ்டிக் குப்பிகள் யுகம். மாஸ் புரொடக்‌ஷன் யுகம். நம்முடைய கையின் பதிவுகள் நமக்குக் கவிதையாய் கிடைத்துக்கொண்டிருந்த காலங்கள் தொலைந்துபோய்விட்டன.

திருநெல்வேலிக்குப் போயிருக்கிறயோ, பாலா? டிங்கர் ஒர்க்ஸ், சா மில், ஸ்கூட்டர் ஒர்க் ஷாப், லாரிக் கம்பெனி என்று வரிசையாகப் பட்டறைகளாக இருக்கும். சத்தமும் குப்பையும் குவிக்கிற பட்டறைகள். இரும்புத்துரு வெட்டின தகடு, கிரீஸ் எண்ணெய் என்று அழுக்கும் பிசுக்குமாய் குவிந்துகிடக்கும் பட்டறைகள். இத்தனை குப்பைக்கு அடுத்தாற்போல், சட்டென்று பெரிய பெரிய வயல்வெளிகள் விரிந்திருக்கும். இடைவெளி தெரியாமல் கிண்ணங்களாக இது நெருக்கியடித்து மண்டிக்கொண்டு நீரைப் போர்த்தியிருக்கிற ஒரு குளம் வரும். நெருக்கமான பச்சை நடுவில் குவளையா, அல்லியா என்னதென்று தெரியாத நீலப்பூக்கள் பூத்திருக்கும். வெள்ளையாய் நாரையும் கொக்கும் குளத்தைச் சுற்றிவரும்.

இந்த ஊரைப் பார்க்கிற போதெல்லாம் எனக்கு நம் தலைமுறை ஞாபகம் வரும். கடை, ஆபீஸ், ஃபாக்டரி, என்று அலைந்துவிட்டு, அழுக்கும்பிசுக்குமாக வேலை செய்துவிட்டு,வீட்டுக்குத்திரும்பி கவிதை எழுதுகிற காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்துக் கதை, நாவல் எழுதுகிறகாலம்.

இது முன்னேற்றமா? துரதிருஷ்டமா? இதைத் துக்கம் எனப் புரிந்து புலம்புவதா? சோகம் எனச் சுருண்டு கொள்வதா?

நம்முடைய இந்த நண்பன் சுப்ரமண்ய ராஜூ - இந்தக் கதையின் விஸ்வநாதன் - தன்னுடைய அம்மா இறந்துபோன இரண்டாம் நாள், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். படிக்கிறவனைக் கதற அடித்துவிடுகிற கடிதம் அது. தன் துக்கம் முழுக்கச் சொன்ன அந்தக் கடிதம் புலம்பவில்லை. ‘எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம், iraony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது மாலன். ஆனால் இது அல்ல சாஸ்வதம். எதுவுமே அல்ல.’

உன்னுடைய நாவலும் இதைத்தான் சொல்கிறது. வாழ்க்கை என்பது யுத்தம் எதிர்கொள் என உன் பேயரசன் சொல்கிறான். இந்த யுத்தத்தில் எந்த துக்கமும் வலியும், அபத்தமும் தோல்வியும், சாஸ்வதம் அல்ல. அழவேண்டாம். புலம்ப வேண்டாம். எதுவும் செய்யவேண்டாம். முதலில் இது இயல்பு, இயற்கை, சுபாவம் எனப் புரிந்துகொள் என்று உன் நாவல் மன்றாடுகிறது. இலக்கியத்திற்கும் உத்தியோகத்திற்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் பெரிதாக எடுத்துக்கொண்டு பேசாமல் மொத்த வாழ்க்கையும் எடுத்துக்கொண்டு பேசுகிறது.

எடை போட்டு எழுபது ரூபாய்க்கு எடுத்த விரிசல் சக்கரத்தை இருநூறு ரூபாய்க்குத் தள்ளி விடுவது அநியாயமா? வியாபாரமா? மூன்று லட்ச ரூபாய் சரக்கை கிணற்றில் இறக்கிவிட்டு ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், ஓடிப்போவது தற்காப்பா? நம்பிக்கைத் துரோகமா? லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவன்  ஒரு ராத்திரியில் நொடித்துப் போவது துரதிருஷ்டமா? கடவுள் சித்தமா? விபச்சாரம் செய்த பணத்தில் லாரி வாங்குவதும் விபத்திற்கு ஈடாய் வந்த பணத்தில் விபச்சாரம் செய்வதும் வயிற்றுப்பிழைப்பா? வக்கிரமா? ப்ரியத்தின் நிமித்தம் கொடுத்த பிரிவு உபச்சாரப் பணத்தை, கணக்குப் பார்க்கிற, விமர்சனம் செய்கிற வாத்தியார் ஞானியா? மூர்க்கனா? உதவி செய்தவனை முட்டாள் எனச் சொல்லும் பெண் அகங்காரியா? சத்தியவதியாக கணவனின் கவிதையைப் பொறுத்துக்கொள்ளாத மனைவியும், மனைவியின் அவஸ்தையைப் புரிந்துகொள்ளாத கணவனும் குழந்தை பெற்றுக் கொள்வது காதலா? காமமா?

எல்லாமே இயற்கை. இயல்பு. சுபாவம். அதைப் புரிந்துகொள் முதலில் என்று உன் பாத்திரங்கள் சொல்கின்றன. சரி, இந்தப் பிரிவு இல்லை என்றால் என்ன கஷ்டம்?

புரிந்துகொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை இதன் இயல்பைப் புரிந்துகொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படிச் சாத்தியம்? இந்தக் கூரிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் பிரிவு இல்லாமல் போனால் இருத்தலே இம்சையாகும். எதிலும் தெளிவற்று எப்போதும் சுலபமின்றி இருக்கிற வாழ்க்கை நரகமாகிவிடாதா? தன்னையும் துன்புறுத்திக்கொண்டு உடன் வாழ்கிறவனையும் காயப்படுத்திக்கொண்டிருந்தால், ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?

இந்தப் பிரிவு இல்லாமல்தான் நமது இளைஞர்கள் தலை கலைந்து போகிறார்கள். அந்நியமாதல் பற்றிப் பேசுகிறார்கள். எதிலும் நம்பிக்கையற்றுச் சிதைகிறார்கள். எதிர்மறையாய் யோசிக்கிறார்கள். எளிதில் கலங்குகிறார்கள். கவிதை எழுதி இலக்கியம் பேசி ஊர்விட்டு ஊர் போய் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இன்னொரு வகை இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த முதல்படி தாண்டியவர்கள். இந்த வாழ்க்கையின் முரண்பாடுகள் பற்றித் தெரிந்தவர்கள். இது இயல்பு என விளங்கியவர்கள்.

சரி, புரிந்துவிட்டது. ஆனால் இந்த முரண்பாடுகளும் அநீதிகளும் வக்கிரங்களும் இப்படியே இருக்கத்தான் வேண்டுமா? இவற்றை என்ன செய்வது? ‘சும்மா இரு’ என்கிறாய். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி just be என்று சொன்ன த்வனியில், பொருளில், சும்மாயிருக்கச் சொல்கிறாய். காஞ்சிப்பெரியவர், ‘மெளனமாய் இருப்பது என்றால் பேசாமல் மட்டும்தானா’ என்று கேட்ட அர்த்தத்தில் சொல்கிறாய்.

எனக்கு சும்மா இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதால் சாத்தியமில்லை. செயலற்றுச் சும்மா இருப்பது முறைதானா என்று எனக்குள் கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் இங்கே புறம்பான விஷயங்கள். வேறு ஒரு சமயம் பேசித்தெளிய வேண்டிய கேள்விகள். என்னைத் துலக்க இன்னொரு நாவல் எழுது.

இந்த நாவலை அற்புதமாக எழுதியிருக்கிறாய். ஒவ்வொரு வரியும் இழைத்து இழைத்துப் பூட்டின மணியாக விழுந்திருக்கிறது. அதேசமயம், மெருகு பொலிய எழுதுவது சாதாரணக் காரியம் இல்லை. இதற்குப் பக்கம்பக்கமாக நான் உதாரணம் காட்டமுடியும். வேண்டாம். தன் ரஸனையை மெய்ப்பிப்பதற்காகக் கம்பனை அக்கக்காக பிரித்த தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது. சுயமாக ஒன்றினை அறிதலும் புரிந்துகொள்ளலும் ரஸிக்கக் கற்றலும் மகாபாக்கியம். உன் வாசகர்கள் ரஸனைக்கு நடுவே நான் குருவியாய்ப் பறக்கவேண்டாம். உன் எழுத்துகள் மறுபடி மறுபடி எனக்கு ஒன்றை நிச்சயிக்கின்றன. ‘உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் ஒளியுண்டாகும்’.

எத்தனை காலமாய் உன் உரைநடையை நான் அறிவேன். எதிரே உட்கார்ந்து பேசுகிற பேச்சாகப் பெருகுகிற நடை அது. உன்னைப் போல் ஒரு கம்பீரம் கொண்ட நடை. உன் கவிதைகளை நான் காதலிக்கிறேன். யாப்புதான் கவிதை என்கிற மெளடீகத்தையும் வார்த்தைகள்தன் கவிதை என்கிற ரொமாண்டிஸத்தையும் தாண்டிய சரியான கவிதைகள். தி.ஜானகிராமன் சொல்கிற மாதிரி சரியான ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளைக் கவிதைகள். இந்த நாவலைக் கவிதையும் உரைநடையுமாக ஊடும் பாவுமாக நெய்திருக்கிறாய். ஆணும் பெண்ணும் புணர்தல் போல சரியான முறையில், சரியான இடத்தில், சரியான அளவில் உரைநடையும் கவிதையும் கலந்திருக்கின்றன. முறையும், இடமும், அளவும் தவறினால், விகாரமாகும். மிகுந்தால் ஆபாசமாகும். குறைந்தால் நோய் காணும். தாம்பரத்தில் ஏறி கிண்டியில் இறங்குவதற்குள் அந்த வார அத்தியாயத்தைப் படித்து முடித்து ஜீரணமும் செய்துகொள்ள வாசகன் ஆசைப்படுகிற காலம் இது. இதில் கவிதையிலேயே ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறாய். என்ன அற்புதம் இது.

ஒருமுறை ஒரு நண்பனைப் பார்க்க அரசூர் சென்றிருந்தேன். மெயின் ரோட்டில் இறங்கி பத்துநிமிஷம் கிளைச்சாலையில் நடக்கவேண்டும். மையிருட்டு. ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்மினி. தூரத்தில் ‘களக் களக்’ என்று சுண்ணாம்புக் காளவாய். நடக்கத் தயங்கி நின்றிருந்தபோது டயரைக் கொளுத்திக் கையில் பிடித்தபடி எதிரே ஒருவன், நின்று நிதானித்து எரிகிற ரப்பர் சுடர். லேசில் அணையாத ஜோதி.

இன்றைக்குச் சூழ்ந்திருக்கிற இருளுக்கு நடுவில் மொய்க்கிற மின்மினிக்களுக்கு நடுவில் பயம் காட்டுகிற காளவாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வழிகாட்டுகிற சுடராகப் பொலிகிறது உன் நாவல். இருட்டு மண்டுகிற போது வெளிச்சம் காட்டவேண்டியது முக்கியம். இதற்கு நெய்ப்பந்தம்தான் சிலாக்கியம் என்று மரபு பேசுவது காலவிரயம். எல்லா ரோடுகளுக்கும் எலக்ட்ரிக் பல்பு என்பது மிகுந்த யோக்கியமான சிந்தனை என்றாலும் உடனடியாக சாத்தியமாகாத காரியம். குழம்பிச் சோர்ந்துவிடாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு சுடரை ஏற்றியிருக்கிறோம். நீர் உனக்குள்ளே ஆகுதி சொரிந்த காலங்காலமாய் வளர்ந்த யாகத் தீயில் ஏற்றிய சுடர்.

இதற்காக, ஒரு தலைமுறை உனக்குக் கடன்பட்டிருக்கிறது.

மிகுந்த ப்ரியமுடன்

மாலன்

(இரும்பு குதிரைகள் புத்தகத்தில், முன்னுரைப் பகுதி)

தொடர்பு உடைய கட்டுரைகள் படிக்க...

பாலகுமாரன் பற்றி ஷங்கர்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close