[X] Close

தாயுமானவன்... இனிய பாலகுமாரன் சார்...


balakumaran-sir

  • வி.ராம்ஜி
  • Posted: 15 May, 2018 14:06 pm
  • அ+ அ-

வாழ்க்கையை, பாலகுமாரனுக்கு முன் பாலகுமாரனுக்குப் பின் என்றுதான் பிரிக்கவேண்டும். அப்படிப் பிரித்துப் பார்க்க, அவரின் எழுத்துகள், எப்படியெல்லாம் புடம் போட்டிருக்கின்றன என்பது கண்களின் வழியே விரிகிறது. கமல், ரஜினியைக் கடந்து, எண்பது தொந்நூறுகளின் மிகப்பெரிய ஹீரோ... பாலகுமாரன் சார்.  

மெர்க்குரிப்பூக்கள் சியாமளாவையும் கரையோர முதலைகள் ஸ்வப்னாவையும் சாலைகளில் தேடித்திரிந்தது உண்டு. நல்ல கணவனாக வாழ்பவர்களைப் பார்க்கும்போதெல்லாம் இதுதான் அகல்யா சிவசுவா என்று நினைத்துக்கொண்டதுண்டு.

அவரின் தலையணைப்பூக்களும் பயணிகள் கவனிக்கவுமும் ஆசைக்கடல், ஆசை என்னும் வேதம், மாலை நேரத்து மயக்கம் எல்லாம் வெறும் கதைகள் அல்ல. பொழுது போக்க உண்டான நாவலில்லை. அது ஏதோ செய்யும். செய்தது. அப்படிச் செய்து உருமாறிய லட்சக்கணக்கான துளிகளில் ஒருவன் நான்.

அவர் எழுத்தைப் படித்து, வாசகனாக அறிமுகமாகி, நண்பன் போல் ஏற்றுக்கொண்டு, ‘டேய் நல்லா எழுதுறியே. வாடா எங்கிட்ட’ என்று உதவியாளனாகச் சேர்த்துக்கொண்டதுதான் என் வாழ்வு ஜென்ம சாபல்யம் அடைந்த நாள். அவரிடம் பணியாற்றிய நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களும் வேதமாயிற்று.

பாலா சார் சொல்லச் சொல்ல... எழுதுவேன். காலிங்பெல் சத்தம். போஸ்ட்மேன் கடிதங்கள் தந்து செல்வார். படித்துப் பார்ப்பார். கடிதத்தில் கண்ணீர்க்கதைகள். அவரை என்னவோ செய்யும். அந்தக் கடிதத்தை உடனே பூஜையறையில் சுவாமிப் படத்துக்கு முன்னே வைப்பார். ஐந்து நிமிடம் அவர்களுக்காக, அந்த முகமறியா வாசகர்களுக்காக பிரார்த்தனை செய்வார். இதைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன்.

அவர் அளவுக்கெல்லாம் வேலையே செய்யமுடியாது. அவரின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், திணறியிருக்கிறேன். முதலில் ஒரு வாரப் பத்திரிகைக்கு தொடர் எழுதுவார். தொ...ட...ரும்... என்று சொல்லி ஸ்டைலாக முடிப்பார். அடுத்து ‘இந்தக் கதையை எடுத்துப்போமா’ என்று அடுத்த நிமிடமே அடுத்த கதைக்குப் போவார். அதை எழுதிமுடித்துவிட்டு, மாத நாவலுக்குள் நுழைவார். இவர் உண்மையிலேயே சிங்கம்தான். சிநேகமுள்ள சிங்கம் என்று நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

உல்லாசம் படத்துக்கு வசனம் பாலா சார்தான். அந்த வசனம் ஒவ்வொன்றும் கைத்தட்டல்கள் பெற்றன. பத்துப்பதினைந்து சீன்களுக்கு வசனம் எழுதிவைத்துவிட்டு, அப்படியே கண்மணித்தாமரை நாவலுக்கு போலாம் என்பார். அதுவரை அஜித்தாகவும் விக்ரமாகவும் ரகுவரனாகவும் மாறியிருந்தவர், இப்போது அபிராமிபட்டராகவே உருமாறியிருப்பார்.

எழுத்தை ஓர் தவம் என்பார்கள். எல்லாக் கலைகளையும் அப்படித்தான் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து, பாலகுமாரன் சார், ஒவ்வொரு கதையையும் அப்படி தவமாகவே செய்தார். சுழற்காற்று என்றொரு நாவல். மொத்தம் 130 பக்கம் எழுதவேண்டும். கிட்டத்தட்ட 85 பக்கங்கள் எழுதியாகிவிட்டது. எழுதிக்கொண்டே இருக்கும் போது, ‘டேய் ராம்ஜி... வேணாம்டா இது. நல்லா வரலை. எங்கியோ போவுது. அவருக்கு போனைப் போடு’ என்றார்.

‘கதை தப்பா போவுது. நாளைக்கி தரேன்னு சொன்னேன். ஸாரிப்பா. நாளன்னிக்கு தரேன்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த கதையை எழுதி, மறுநாள் மாலைக்குள் தருகிற வேகமெல்லாம் கண்டு பிரமித்திருக்கிறேன்.

அதேபோல் பொய்யாகவே எதுவும் சொல்லமாட்டார். ‘’இதோ, உங்களுக்குத்தான் எழுதிட்டிருக்கேன்’ என்று சும்மா சொல்வதெல்லாம் செய்யவேமாட்டார். ‘இதோ இப்ப ஒண்ணு எழுதிட்டிருக்கேன். இன்னும் முக்காமணி நேரத்துல எழுதிருவேன். அடுத்து உங்களுதுதான். கரெக்ட்டா, நாலுமணிக்கு வாங்க. ரெடியா இருக்கும்’ என்பார். அப்படியே ரெடியாக்கி தருவார்.

அவரிடம் இருந்துதான் உண்மையைக் கற்றுக்கொண்டேன். மிகமிக ஹானஸ்ட்டாக இருப்பார். ரொம்பவே அன்பானவர். எப்போதும் எல்லோரிடத்தும் கனிவும் கருணையுமாகவே இருப்பார். ’ரொம்பக் கோபப்படுவாரு’ என்பார்கள். அப்படியில்லை. அவரின் கோபம் நம்மிடம் இல்லை. நம் புரிந்துகொள்ளாமையைப் பார்த்து கோபப்படுவார். நம் அறியாமையைக் கண்டு திட்டுவார்.

ஹிட்லர் என்றொரு மலையாளப்படம். மம்முட்டி நடித்து சித்திக் இயக்கியது. இதை தமிழில் கொண்டுவர, பாலகுமாரன் சாரிடம் வந்து, ஐடியா கேட்டார்கள். படம் பார்த்து, யார்யார் என்னென்ன கேரக்டருக்கு போடலாம் என்று கேட்டார்கள். படம் பார்த்தோம். என்னிடம் கேட்டார். எனக்குத் தெரிந்தவகையில் சொன்னேன். ‘சும்மா சொல்லாதே. என்ன காரணம், ஏன் இவர் நடிக்கணும் என்றெல்லாம் சொல்லச் சொன்னார்.

பிறகு சித்திக்கை சந்திக்கும் போது, படத்தில் யாரெல்லாம் நடிக்கணும் என்றும் கதையில் எங்கெல்லாம் மாற்றங்கள் தேவை என்றும் சொல்லிக்கொண்டே வந்தார். நான் சொன்ன விஷயங்களைச் சொல்லும்போது, ‘அப்படின்னு என் அஸிஸ்டெண்ட் சொல்றார்’ என்று சொல்லிக்கொண்டே வந்தார். அதுதான் பாலகுமாரன் சார்.

இவரின் டைட்டில்கள், கதைகள், படத்தின் வசனங்கள் என்று பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் என்னவோ செய்யும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தவர் பாலகுமாரன் சார். எப்போதும் எழுத்து, எழுத்து, எழுத்து என்றே இருப்பார்.

அவருக்கு ஓய்வு கூட எழுத்துதான். ‘ஒரு வேலையை முடிச்ச உடனே ரெஸ்ட் எடுக்கணும். எப்படி தெரியுமா? அடுத்த கதைக்குள்ளே போயிடணும். அதான் ரெஸ்ட்’ என்பார்.

இந்த ரெஸ்ட் கூட... அடுத்து ஏதோவொன்றை என்னைப் போன்ற வாசகர்களுக்காகத் தருவதற்குத்தான் போலும்!

அவர் எழுத்தாளரா. ஆமாம். எழுத்துச்சித்தரா. ஆமாம். ஞானகுருவா. வெகு நிச்சயமாக். அவர் தகப்பனா. ஆமாம். சத்தியமாக.

சொல்லிக்கொடுப்பவர் தகப்பன் என்று எங்கள் ஆசான், ஞானகுரு பாலகுமாரன் சார் சொல்லிக்கொடுத்திருக்கிறார். எங்களின் ஞானத்தகப்பன் அவர்!

எழுத்தையே ஜீவிதமாகக் கொண்ட, வாழ்க்கையாகக் கொண்ட எழுத்துச்சித்தரின் எழுத்துக்களும் ஜீவிதம்தான். காலகாலத்துக்கும் உயிர்ப்புடன் இருக்கும். படிப்பவர்களை வெறுமனே பரவசப்படுத்தாது, உன்னதமாக்கும். மனிதனாக்கும்!

குருவுக்கு... நமஸ்காரம். அந்த ஞானகுரு பாலகுமாரன் சாரின் ஆத்மா அமைதி அடையட்டும். எல்லோரையும் வழிநடத்தட்டும்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close