[X] Close

அறிவியல் மேஜிக்: ஆடும் மெழுகுவர்த்தி!


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 12:05 pm
  • அ+ அ-

-மிது கார்த்தி

மெழுகுவர்த்தியை உங்களால் ஆட வைக்க முடியுமா? முடியும். சிறிய அறிவியல் சோதனை மூலம் மெழுகுவர்த்திதையை ஆடவைக்கலாம். நீங்கள் தயாரா? (பெரியவர்கள் துணையின்றி இந்தப் பரிசோதனையைச் செய்யக் கூடாது.)

என்னென்ன தேவை?

நீளமான மெழுகுவர்த்தி

கோணி ஊசி

தீப்பெட்டி

இரண்டு டம்ளர்கள்

காகிதம்

எப்படிச் செய்வது?

1. மெழுகுவர்த்தியின் தட்டையான பின்புற முனையில் திரி தெரியும் அளவுக்கு மெழுகைச் சுரண்டி எடுத்துவிடுங்கள்.

2. நீளமான கோணி ஊசியை மெழுகுவர்த்தியின் நடுப்பகுதியில் செருகுங்கள். மெழுகுவர்த்தி உடைந்துவிடக் கூடாது. ஊசி சரியாக நடுவில் இருக்க வேண்டும். மாற்றி செருகினால் சமநிலை கிடைக்காது.

3. இப்போது காகிதத்தைத் தரையில் விரித்து வையுங்கள். இரண்டு டம்ளர்களைச் சற்று இடைவெளி விட்டு, தலைகீழாக காகிதத்தின் மேலே கவிழ்த்து, அதன் மீது கோணி ஊசி செருகப்பட்ட மெழுகுவர்த்தியை வையுங்கள்.

4. இப்போது மெழுகுவர்த்தியின் இருமுனைகளிலும் திரிகளை ஏற்றுங்கள்.

5. சில விநாடிகள் காத்திருங்கள். பிறகு,மெழுகுவர்த்தி மேலும் கீழும் ஆட ஆரம்பிக்கிறதா?

காரணம்

ஒருமுனையிலிருந்து உருகி மெழுகுவர்த்தி துளித்துளியாக கீழே விழும்போது அந்த முனையின் எடை குறைவதால் மேலே தூக்குகிறது. பின்னர் அடுத்த முனையில் மெழுகுவர்த்தி உருகி கீழே விழும்போது அந்தப் பக்கம் மேலே போகிறது. மெழுகுவர்த்தியின் சமநிலை எப்போதும் மாறிக்கொண்டேயிருப்பதால், மெழுகுவர்த்தி மேலும் கீழூம் ஆடிக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்பதை நியூட்டனின் மூன்றாம் விதியில் படித்திருப்பீர்கள். அதன்படி மெழுகு ஒரு துளி கீழே விழுந்தாலும் அதற்குச் சமமான எதிர்விசையினால் மற்றொரு முனை மேலே எழுகிறது.

பயன்பாடு

சிறுவர் பூங்காவில் சீசா பலகை மீது உட்கார்ந்து விளையாடுவீர்கள் அல்லவா? அந்த விளையாட்டின் அறிவியல் தத்துவத்துக்கு இந்த மெழுகுவர்த்தி சோதனை ஓர் உதாரணம்.

படங்கள்: வாசன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close