[X] Close

கால் நூற்றாண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வாரா பவன் குமார் சாம்லிங்?


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 08:31 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கும் சிக்கிம் மாநிலம் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சி ஆட்சியைத் தக்கவைக்குமா என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 தனிநாடாக இருந்து 1975-ல் இந்தியாவுடன் சேர்ந்து மாநிலமானது. 1979-ல் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் முதல் இதுவரை மாநிலக் கட்சிகளே ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. அம்மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கும் ‘371-எஃப்’ சட்டப்பிரிவை தேசியக் கட்சிகள் பாதுகாக்காது என்று கருதும் சிக்கிம் மக்கள் மாநிலக் கட்சிகளையே சார்ந்திருக்கிறார்கள். 1979-ல் நடந்த முதல் சட்ட மன்றத் தேர்தலில் நார் பகதூர் பண்டாரி தலைமையிலான சிக்கிம் ஜனதா பரிஷத் (எஸ்ஜேபி), போட்டியிட்ட 31 தொகுதிகளில் 16-ல் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஒருகட்டத்தில் காங்கிரஸுடன் எஸ்ஜேபி சேர்ந்துவிட்டது. ஆனால், பண்டாரி அதிலிருந்து வெளியேறி சிக்கிம் சங்க்ரம் பரிஷத் (எஸ்எஸ்பி) எனும் தனிக் கட்சியைத் தொடங்கினார். 1985 தேர்தலில் அக்கட்சி வென்று ஆட்சியைப் பிடித்தது. 1989-ல் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

 1990-களில் நிலைமை மாறியது. அக்கட்சியைச் சேர்ந்த பவன் குமார் சாம்லிங் கட்சியிலிருந்து வெளியேறி சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சியைத் தொடங்கினார். 1994 தேர்தலில் 19 இடங்களில் வென்று அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து தேர்தல்களில் வென்று 25 ஆண்டுகளாக முதல்வராக இருக்கிறார் சாம்லிங். எஸ்டிஎஃப் அரசின் முன்னாள் அமைச்சர் பிரேம் சிங் தமங் (பிஎஸ் கோலே) தொடங்கிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி 2014 தேர்தலில் களத்துக்கு வந்தது. 10 இடங்களில் வென்று பலரை ஆச்சரியப்பட வைத்தது. இந்தச் சூழலில், 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 11-ல் வாக்குப் பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இந்த முறை கால்பந்து வீரர் பய்சுங் பூட்டியாவின் ஹம்ரோ சிக்கிம் கட்சியும் களத்தில் இருக்கிறது.

 இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்ற மாநிலம் சிக்கிம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்வதற்கு சாம்லிங் கொடுத்த ஊக்கமும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதற்கு வித்திட்டன. தனிநபர் ஜிடிபியில் இரட்டை இலக்கத்தைத் தொடர்ந்து பராமரித்துவருகிறது அம்மாநிலம். வறுமை ஒழிப்பு, கல்வித் துறை வளர்ச்சி என்று தொடர்ந்து அசத்திவருகிறது சாம்லிங் ஆட்சி.

 அதேசமயம், பிரேம் சிங் தமங்கின் எஸ்கேஎம் கட்சி கடும் சவாலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. போக்லோக் காம்ராங், நாம்சி ஆகிய இரு தொகுதிகளில் சாம்லிங் போட்டியிடுகிறார். சவால்கள் கடுமையாக இருந்தாலும், ஆழமாக வேரூன்றியிருக்கும் எஸ்டிஎஃப் கட்சி இந்தச் சூறாவளியைத் தாக்குப்பிடிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மே 23-ல் முடிவுகள் தெரிந்துவிடும்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close