[X] Close

2019 தேர்தலின் மைய விவாதம்


2019

  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 08:28 am
  • அ+ அ-

-ராதா குமார்

தேசப் பாதுகாப்பு என்பது அரிதாகவே தேர்தல் பிரச்சினையாக எதிரொலிக்கும் விஷயம். மசூத் அசார் புண்ணியத்தில், 2019 மக்களவைத் தேர்தலில் இது ஒரு தேர்தல் பிரச்சினையாக மாறியிருக்கிறது - குறிப்பாக, தனது தேர்தல் பிரச்சாரத்தில் புல்வாமா தாக்குதலையும், பாலாகோட் பதிலடித் தாக்குதலையும் பிரதானமாக பாஜக முன்வைத்திருக்கும் சூழலில்!

பாஜகவின் தேர்தல் அறிக்கையே ‘முதலில் தேசம்’ எனும் தலைப்பில் தேசப் பாதுகாப்பு பற்றிய வார்த்தைகளுடன்தான் தொடங்குகிறது. அதன் பெரும்பாலான குறிப்புகள், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையுடன் ஒத்துப்போகின்றன, உதாரணமாக, பாதுகாப்புத் துறை கொள்முதலைத் துரிதப்படுத்துவது, படைகளை நவீனப்படுத்துவது, எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்பை மேலும் முறைப்படுத்துவது, ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் மறுவாழ்வு, இடதுசாரித் தீவிரவாதத்தை (மன்மோகன் சிங் அரசு பயன்படுத்திய பதம்) எதிர்கொள்வது என்பன போன்றவற்றைச் சொல்லலாம். அதேசமயம், பாதுகாப்பு தொடர்பாக இரண்டு தேர்தல் அறிக்கைகளும் வெவ்வேறான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

காங்கிரஸ் - பாஜக அறிக்கைகள் ஒப்பீடு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தேசப் பாதுகாப்பு விஷயத்துடன் தொடங்கவில்லை. ஆனால், பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நலன் சார்ந்து விரிவான, கூடுதலான கவனத்துடன் அணுகுகிறது. இவ்விஷயத்தை பாஜக தொடவில்லை. உயரமான பகுதிகளில் குறைவான பணிநேரத்தை உறுதிசெய்யும் காங்கிரஸின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சூழலுக்கு இணங்க பணிநேரத்தைக் குறைப்பது என்பது மேலும் சிறப்பான விஷயமாக அமையும். துணை ராணுவப் படையினரிடையே மனித உரிமை மீறல்கள், அதிகமான தற்கொலை விகிதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் விரக்தி மனப்பான்மையைக் குறைக்க இது உதவும்.

இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இருக்கும் அடிப்படை வேறுபாடு, பயங்கரவாதம், சிவில் மோதல்கள் தொடர்பான அணுகுமுறைதான். பயங்கரவாதத்தை அறவே பொறுத்துக்கொள்ள முடியாது என்கிறது பாஜக தேர்தல் அறிக்கை. அதாவது, பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பது. இப்படிச் சொல்வது அதிகப்படியானது என்றே தெரிகிறது. பொதுவாக, பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் கொடுப்பது என்றால், ராணுவம் தனது நடவடிக்கைகளுக்காக ஒரு செயல்திட்டத்தை வகுத்து அரசிடம் அதற்கான ஒப்புதலை வாங்க வேண்டும் என்று அர்த்தம். இதற்கு முன்பு இப்படிப் பல முறை நடந்திருக்கிறது என்றாலும், நமக்குத் தெரிந்து, இப்படியான செயல்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்படவில்லை.

உண்மையில், கிளர்ச்சிக்கு எதிரான வியூகங்கள் அல்லது தேசப் பாதுகாப்பு வியூகங்களை அரசுக்காக வகுத்துத் தருவதைக் காட்டிலும், அரசின் உத்தரவுகளையே ராணுவம் பின்பற்றுகிறது என்பதையே பல விஷயங்கள் உணர்த்துகின்றன. பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான நிலைக்கு மக்களை வைத்திருப்பது என்பது, கிளர்ச்சிக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை எளிதாக்காது; மாறாக இடையூறைத்தான் ஏற்படுத்தும் என்பது ராணுவத்துக்குத் தெரியும்.

 பல தசாப்தங்களாக அரசியல் மற்றும் ராணுவ அணுகுமுறைகளை ஒன்றிணைத்துச் செயல்படுவதைத்தான் ராணுவம் விரும்புகிறது. அந்த அணுகுமுறைதான் உள்ளூர்ப் போராளிகளையும் அந்நியப் போராளிகளையும் வேறுபடுத்துகிறது. இதயமும் மனமும் இணைந்த வியூகத்தைக் கையாள்கிறது. 

பாஜகவைப் போலவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாகப் பேசுகிறது. ஆனால், பல்வேறு வழிமுறைகளின் ஊடாக உளவுத் துறைச் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை முறைப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் மேலும் அதிகமான தொழில்முறை அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இவற்றில் பெரும்பாலானவை அமலில் இருந்தன. ஆனால், மோடி ஆட்சியில் அவை புறந்தள்ளப்பட்டன.

முக்கியமான வேறுபாடுகள் என்ன?

குடிமக்கள் திருத்த மசோதாவைக் கொண்டுவருவது, இந்திய ஒன்றியத்துடனான காஷ்மீரின் உறவை வரையறுக்கும் 370-வது சட்டப் பிரிவை ரத்துசெய்வது என்று பாஜக முன்வைக்கும் அறிக்கைகள் இரு தேர்தல் அறிக்கைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள். பாதுகாப்புப் படைகளை அரசியல்மயப்படுத்தும் இந்தப் போக்கு கவலைக்குரியது.

 இவற்றை ஏன், பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் குறிப்பிட வேண்டும்? குடிமக்கள் திருத்த மசோதா என்பது சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பானது; 370-வது சட்டப் பிரிவை ரத்துசெய்வது என்பது ஒரு அரசியல் நிலைப்பாடு.

வட கிழக்கில் குடிமக்கள் திருத்த மசோதா ஏற்கெனவே பெரும் பிரச்சினையாக வெடித்திருக்கிறது. சட்டவிரோதமாகக் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்; ஆனால், முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது எனும் அறிவிப்பும் நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பிளவு, மோதல்களுக்கு வழிவகுக்கும், நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது வட மேற்கு மற்றும் வட கிழக்குப் பகுதி மாநிலங்களின் பிரச்சினைகளை, சச்சரவுகளுக்கான தீர்வைக் கோரும் பிரச்சினைகளாகவே அணுகுகிறது. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதியளித்திருக்கிறது. மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் வகையிலான திருத்தங்களை அடையாளம் கண்டுகொள்வதில் மன்மோகன் சிங் அரசு திறம்படச் செய்யவில்லை;  அந்தத் தவறிலிருந்து தற்போது காங்கிரஸ் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறது என்று நம்பலாம்.

பாதுகாப்பு விஷயங்களுக்கு காங்கிரஸ் முன்னுரிமை வழங்காது; பாஜக முன்னுரிமை வழங்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு சவால்களை ஆழமாகப் புரிந்துகொள்வது காங்கிரஸ்தான் என்பதையே காங்கிரஸ், பாஜக இரு தேர்தல் அறிக்கைகளுக்கும் இடையேயான ஒப்பீடு காட்டுகிறது.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close