[X] Close

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், பட்டாசுத் தொழிலாளர்களின் அதிருப்தியை அறுவடை செய்யவுள்ள ஆளுங்கட்சி; உற்சாகத்தில் காங்கிரஸ்: விருதுநகர் இறுதிக்கட்ட கள நிலவரம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 17:39 pm
  • அ+ அ-

-பாரதி ஆனந்த்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் அழகர்சாமி, நாம் தமிழர் சார்பில் சீமானின் மைத்துனர் அருள்மொழித் தேவன், மக்கள் நீதி மய்யம் சார்பில் முனியசாமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர் அறிவித்தவுடனேயே பாதி வெற்றி உறுதி என்றே காங்கிரஸார் கொண்டிடனர். காரணம் மாணிக்கம் தாகூரின் தொகுதி செல்வாக்கு. ஏற்கெனவே இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர். 2004 தேர்தலில் வைகோவை வீழ்த்தி இவர் வெற்றி பெற்றார்.

இப்போது மதிமுகவும் உள்ள திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று மக்களும் கூட்டணியைப் பார்க்காமல் மாணிக்கம் தாகூரின் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து வாக்களிக்க ஆயத்தமாகிவிட்டதாகவே தெரிகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், பட்டாசுத் தொழிலாளர்களின் அதிருப்தியால் ஆளுங்கட்சிக்கான வாக்கு வங்கி சரியும் என்று களத்தில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

ரூ.2000, ரூ.300: வைரலாகும் வீடியோ

பணப் பட்டுவாடா எப்படி என்று தொகுதியில் விசாரித்தால் அதிமுக சாத்தூர் இடைத்தேர்தலுக்கும் சேர்த்து ரூ.2000 என்றும் திமுக ரூ.300 என்றும் ஒருவொருக்கொருவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒற்றுமையாகவே பணம் விநியோகம் செய்கின்றனராம். அதுவும் சாத்தூர் இடைத்தேர்தல் வாக்காளர்கள் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வளவு கவனமாக இருக்கிறாராம். வேட்பாளர் ராஜவர்மன் ராஜேந்திர பாலாஜியின் பினாமி என்றும் சொல்லப்படுகிறது. விருதுநகர் பணப் பட்டுவாடா வீடியோ தமிழகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி பேச்சும் குலுங்கிச் சிரித்த கூட்டமும்..

விருதுநகரில் நட்சத்திரப் பேச்சாளர்கள் என்று வரிசை கட்டி யாரும் வரவில்லை என்றாலும் வாக்காளர்களை குஷிப்படுத்த திமுக சார்பில் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும், அமமுக சார்பில் நடிகர் செந்திலும் வந்து சென்றனர். உண்மையில் நகைச்சுவை நடிகர் செந்திலைவிட உதயநிதி ஸ்டாலின் தான் மக்களை அதிகம் சிரிக்க வைத்திருக்கிறார்.

காரணம் கோர்வையே இல்லாமல் அவர் பேசியவிதம். என்னடா இது இப்படிப் பேசுறாரு.. என்று சினிமா நட்சத்திரத்தை ஆவலோடு பார்க்க வந்த இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதில் ஹைலைட்டாக எங்க தாத்தா எல்லோருக்கும் டிவி தந்தார்.. எங்க அப்பா எல்லோருக்கும் கேபிள் கனெக்‌ஷன் தருவார் என்று அவர் பேச கைதட்டுவதற்குப் பதிலாக கூட்டத்தில் சிரிப்பே கேட்டிருக்கிறது.

பாவம் அழகர்சாமி..

தொகுதியில் காங்கிரஸ் வெற்றி மாணிக்கம் தாகூரை அறிவித்தபோது பாதி உறுதியானது என்றால் அதிமுக தேமுதிக்குவுக்குத் தொகுதியை ஒதுக்கியதில் முழுமையாக உறுதியாகிவிட்டது என்கின்றனர் விருதுநகர் தேர்தல் களத்தை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி மதுரைக்காரர். பக்கத்து ஊர் தானே என்று களமிறங்கிய அவருக்கு அதிமுகவினர் எந்த உதவியும் களத்தில் செய்யவில்லை.

ஆளுங்கட்சிதான் அப்படியென்றால் சொந்தக் கட்சியும் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. 4 தொகுதிகளை வாங்கிய பிரேமலதா தொகுதிக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு கணிசமான தொகையையும் ஆளுங்கட்சியிடம் வாங்கியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அழகர்சாமி தொகுதியில் செலவு செய்ய கிள்ளிக் கொடுத்திருக்கிறது கட்சி மேலிடம். அப்பாவியாக காட்சியளிக்கும் அழகர்சாமி என்ன கணக்கா கேட்கப்போகிறார் என்று நினைத்திருப்பார்களோ என்னவோ?

இந்தச் சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் மாணிக்கம் தாகூர் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். வாக்குப்பதிவு நாளன்று மதுரையில் தேரோட்டம் என்றாலும்கூட திருப்பரங்குன்றம், திருமங்கலம் மக்கள் தேர்தல் திருவிழாவை புறக்கணித்துவிடமாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.

அமமுக வேட்பாளர் பரமசிவம் அய்யப்பன் சாதி வாக்குகளையும், முதல் முறை வாக்காளர்களையும் கவரும் வகையில் பிரச்சாரம் செய்து கவனம் பெற்றிருக்கிறார். இவரது வாக்குகள் நேரடியாக அதிமுக கூட்டணியையே பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close