[X] Close

ஆரம்பத்தில் இருந்தே ட்ரெண்ட் மாறாத நெல்லை, தென்காசி தொகுதிகள்; குறைத்து மதிப்பிட முடியாத இடத்தில் அமமுக: இறுதிக்கட்ட கள நிலவரம்


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 16:11 pm
  • அ+ அ-

-பாரதி ஆனந்த்

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் ஆரம்பத்தில் என்ன ட்ரெண்ட் நிலவியதோ அதே ட்ரெண்ட்தான் இன்று பிரச்சாரத்தின் கடைசி நாளிலும் நிலவுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன், திமுக சார்பில் ஞானதிரவியம், அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே நெல்லை களம் யாருக்கு என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அப்போது களம் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கே ஆதரவாக இருப்பதாகக் கூறப்பட்டது. அதே நிலைதான் இன்று கடைசி நாளும் நிலவுகிறது.

வெற்றி ட்ரெண்ட் இப்படியாக இருந்தாலும்கூட ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று ஆளுங்கட்சி ரூ.300 முதல் ரூ.500 வரை பணப் பட்டுவாடா செய்கிறது. பூத் ஸ்லிப்புக்குள் காசை வைத்து வீட்டுக்குள் வீசிச் செல்லும் அளவுக்கு பணப்பட்டுவாடா படு ஜோராக நடக்கிறது.

கள நிலவரம் சாதகமாக இல்லாததால் திமுகவினர் ஏதும் பெரிதாக பணப் பட்டுவாடா செய்யவில்லை. ஆனால், அமமுக அப்படியில்லை. அவர்களும் ஒரு ஓட்டுக்கு ரூ.300 என்ற வீதம் தாராளமாகக் கொடுத்து வருகின்றனர்.

காரணம், அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக சார்பில் நின்று வெற்றி பெற்றவர்.இப்போது அமமுகவில் இருக்கும் அவர் முந்தைய செல்வாக்கு ஓட்டுகள், சிறுபான்மையினர் ஓட்டுகள், சாதி ஓட்டுகள் என அதிமுகவின் வாக்குகளை கணிசமாகப் பிரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதனால், தங்கள் முக்கிய இலக்கு அதிமுகவை ஓய்த்து விடுவதுதான் என்ற கொள்கையிலிருந்து சற்றும் விலகாமல் இலக்கில் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார் மைக்கேல் ராயப்பன்.

சீமானுக்கு ஆதரவு; கமல் கட்சியைக் காணவில்லை

நெல்லை மக்களவைத் தொகுதியில் 18, 19 வயது வாக்காளர்கள் மட்டும் 1 லட்சத்து 7000 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களின் மனநிலை சீமானின் நாம் தமிழர், அமமுக பக்கமே இருப்பதாகத் தெரிகிறது.

அண்மையில்கூட ஒரு கல்லூரி விழாவில் இளைஞர்கள் சிலரிடம் அபிமான தலைவர் யார் என்ற கேள்விக்கு சீமான் என்ற கோஷமே அதிகமாக இருந்தது.

இருந்தாலும்கூட கடந்த தேர்தலில் இருந்த அளவே வாக்கு சதவீதம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் நிறுத்தியுள்ள மென்பொருள் நிபுணர் வெண்ணிமலை வெயிலுக்கு அஞ்சியே வெளியில் வராததால் மக்களுக்கு அந்தக் கட்சியே சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை.

வலுவான இடத்தில் தனுஷ் எம்.குமார்

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் வேட்பாளராக நிற்கிறார். அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி நிற்கிறார். அமமுக சார்பில் ஏ.எஸ்.பொன்னுத்தாய் நிற்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பின் தென்காசியில் வெற்றியைச் சுவைக்கவுள்ள திமுக இதன் காரணமாகவே பணப் பட்டுவாடாவை முற்றிலுமாக ஒதுக்கிவைத்துவிட்டதாம்.

தேர்தல் செலவுக்கு இன்னும் கொஞ்சம் தாராளமாகப் பணம் தந்திருக்கலாம் என்பது மட்டும் வேட்பாளர் தரப்பின் சிறு ஆதங்கம் என சொல்லப்படுகிறது. மற்றபடி, தொகுதியில் ஆரம்பத்திலிருந்த ட்ரெண்ட் மாறவே இல்லை.

 

ten.jpg

 

புதிய தமிழகத்துக்கு நேரடி சவால் அமமுகவின் பொன்னுத்தாய். தொகுதியில் 2 லட்சம் வாக்குகளை இவர் பிரிப்பார் எனக் கூறப்படுகிறது. இதுதான் கிருஷ்ணசாமியின் சறுக்கலுக்குக் காரணமாகவும் அமையப்போகிறது. அமமுகவும் சுயேச்சை கட்சியாகவே கருதப்படுவதால் ஒரே பெயரில் பல வேட்பாளர்களை சுயேச்சையாக ஆளும் கட்சி இறக்கியும்கூட கிருஷ்ணசாமிக்கு வெற்றி அரிது என்பதே நிலவரமாக உள்ளது. முயற்சிகளை விட்டுவிடக் கூடாது என்பதால் தொகுதியில் ரூ.300 வரை அதிமுக ஓட்டுக்கு செலவு செய்வதாகத் தெரிகிறது.

நெல்லை, தென்காசி என இரண்டு தொகுதிகளிலுமே வெற்றியின் ட்ரெண்ட் மாறாவிட்டாலும் குறைத்து மதிப்பிட முடியாத இடத்தில் அமமுக இருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close