[X] Close

தாமதமாகும் 7 பேர் விடுதலையால் மகளை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்த நளினி


7

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 12:22 pm
  • அ+ அ-

ஏழு பேர் விடுதலை தாமதமா வதால் லண்டனில் வசிக்கும் மகள் ஹரித்ராவை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து அதற்கான ஏற்பாடுகளை நளினி மேற்கொண்டு வருகிறார். நளினிக்கு பரோல் கிடைத்ததும் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திரும ணத்துக்காக 6 மாதங்கள் பரோல் கோரி மனு அளித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மகளின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை சிறையில் இருந்தபடி நளினி கவனித்து வருகிறார்.

இது தொடர்பாக நளினி-முருகன் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானபோது நளினி, 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். சிறையிலேயே நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஹரித்ரா என்ற மேகேரா என்று பெயர் சூட்டினர். வேலூர் பெண்கள் சிறையில் சில ஆண்டுகள் வளர்ந்த ஹரித்ரா, சில காலம் சென்னையில் உள்ள நளினியின் தாய் வீட்டில் வளர்க் கப்பட்டார்.

முருகனின் உறவினர்கள் அனைவரும் லண்டனில் வசிக்கின்றனர். எனவே, ஹரித்ராவின் எதிர்கால நலன் கருதி லண்டனில் அவரை படிக்கவைக்க முடிவு செய்தனர். அதேநேரம், இலங்கையைச் சேர்ந்த முருகனுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நளினிக்கும் பிறந்தவர் என்பதால் ஹரித்ராவுக்கு இந்திய குடியுரிமை கோரி நீதிமன்றத்தை நாடினர். அந்த நேரத்தில், லண்டனில் குடியேறி படித்து வந்த அவருக்கு குடியுரிமை அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

வேறு வழியில்லாமல் அங்கேயே படித்த அவர் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பை முடித்துள்ளார். லண்டனில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஹரித்ராவுக்கும் திருமணம் செய்துவைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், பெற்றோர் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று ஹரித்ரா மறுத்துவிட்டார்.

இதற்கு இடைபட்ட காலத்தில் 7 பேர் விடுதலை தொடர்பான முயற்சிகள் வேகமாக இருந்ததால் எப்படியும் விடுதலை ஆகிவிடுவோம் என்று நளினி-முருகன் இருவரும் நம்பிக்கையில் இருந்தனர்.

தமிழக அமைச்சரவை தீர்மானம் இவர்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருந்தது. ஆனால், விடுதலை தொடர்பான கோப்பில் கையெழுத்திட தமிழக ஆளுநர் காலம் கடத்துவதால் நளினி, முருகன் இருவரும் விரக்தியில் உள்ளனர்.

மகளுக்கு வயதாகிக் கொண்டே செல்வதால் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு சமாதானம் செய்துள்ளனர். நளினியின் கருத்துகளை அவரது தாய் பத்மா மூலம் பேசப்பட்டு திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளனர். இதற்காகவே, நளினி 6 மாதங்கள் பரோல் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

பரோல் கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறும். பாதுகாப்புடன் திருமணத்தை எங்கு நடத்துவது என்பதெல்லாம் பின்னர் இறுதி செய்ய உள்ளனர். மகளின் திருமணம் தொடர்பான பணிகளை சிறையில் இருந்தபடியே நளினி கவனித்து வருகிறார். மகள் திருமண விஷயத்தில் நளினியின் முடிவே தனது முடிவாக முருகன் கருதுகிறார்’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close