[X] Close

நல்ல பொழுதுபோக்கு தரும் சீமான் பேச்சு!


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:29 am
  • அ+ அ-

-கே.கே.மகேஷ்

திமுக-அதிமுக என்ற இரு பிரதான மாநிலக் கட்சிகள், காங்கிரஸ்-பாஜக எனும் இருபெரும் தேசியக் கட்சிகள் இரண்டுக்கும் மாறாகத் தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘நாம் தமிழர்’ சீமானின் உரத்த குரல். தனியொருவராக அக்கட்சியின் 58 வேட்பாளர்களுக்கும் வாக்கு வேட்டையாடும் சீமானின் பிரச்சாரம் எப்படியிருக்கிறது?

எந்த சித்தாந்தத்தையும், எந்தக் கட்சியின் கொள்கையையும் அறிந்திராத ‘வெள்ளைக் காகிதம்’ போன்ற இளந்தலைமுறை, தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் சீமானின் பேச்சால் ஈர்க்கப்படுகிறது. ‘எந்திரன்’ சிட்டிபோல தன்னைப் போலவே சிந்திக்கிற, தன்னைப் போலவே பேசுகிற தம்பிகளை உருவாக்கியிருக்கும் சீமான், வாகனப் பிரச்சாரத்தை... மன்னிக்கவும் வாகனப் ‘பரப்புரை’யை முற்றாகத் தவிர்க்கிறார். மார்ச் 25 தொடங்கியது அவரது பரப்புரை. தினமும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள். இரண்டுமே மாலையில்தான். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6 கூட்டங்கள்.

அருவிபோல் கொட்டும் பேச்சு

தூத்துக்குடியிலும் சிவகாசியிலும் பிரச்சாரம் என்றால் தூத்துக்குடியில் அறையெடுத்துத் தங்குகிறார். மாலை 6 மணிக்கு முதல் பொதுக்கூட்டம். அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களை அருகில் நிற்க வைத்துக்கொண்டு, சீமான் ஒலிவாங்கியைப் பிடித்தால் குறைந்தது ஒன்றேகால் மணிநேரம் பேசுகிறார். அது வெறுமனே மேடைப்பேச்சல்ல; கருத்தரங்கம், ஓரங்க நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சி என்று பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

முடித்துவிட்டு சுமார் 50 முதல் 100 கிலோ மீட்டர் காரில் பயணித்து அடுத்த பொதுக்கூட்ட மேடையை இரவு 8.30-க்குள் அடைகிறார். பிறகு, அங்கேயும் ஒன்றரை மணி நேரப் பேருரை. கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் அருவிபோல கொட்டுகிறார். இடையிடையே நகைச்சுவை சொல்லிச் சிரிப்பு மூட்டுகிறார். நகைச்சுவைக்கு இடையிலேயே அவரே ஒரு மாதிரியாகச் சிரிப்பதைப் பார்த்து கூட்டம்  மேலும் சிரிக்கிறது.

மேற்கூரையற்ற மேடை. ஒற்றைச் சுவர்போல நிற்கும் பதாகையில், ‘வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்’ என்ற வாசகம் சிறிதாகவும், ‘புதியதோர் தேசம் செய்வோம், புரட்சியால் அதை உறுதி செய்வோம்’ என்ற வாசகம் பெரிதாகவும் இருக்கின்றன. திருவள்ளுவர், பிரபாகரன் படங்களுடன் சீமான், அந்தந்தத் தொகுதி வேட்பாளர்களின் படங்களும் விவசாயி சின்னமும் இடம்பெற்றிருக்கின்றன.

சாலையோரத்தில் சாப்பாடு

இரவுக் கூட்டம் முடிந்ததும் அவர் தனது காரில் செல்ல, கருஞ்சட்டையும் கருப்பு குளிர்க் கண்ணாடியும் அணிந்த தொண்டர் படையொன்று பாதுகாப்புக்காக சீமானைப் பின்தொடர்கிறது. கூடவே, அவரது ஊடகத் துறை (யூடியூப் சேனல், நாம் தமிழர் இணையதளம்) வாகனமும். அவரது வாகனம் புறப்படுகையிலேயே உணவுப் பொட்டலங்களைக் கையில் கொடுத்துவிடுகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள். அடுத்த நாள் பேச வேண்டிய ஊரை நோக்கி இரவிலேயே கார் விரைகிறது. போகிற வழியில் ஏதாவது வெளிச்சமான இடத்தில் கார் நிற்க, சீமானும் அவரது தம்பிகளும் உணவருந்துகிறார்கள். அறையைச் சென்றடைந்து தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணியாகிவிடுகிறது.

பொதுவாக, உடல் நலத்தில் தீவிர அக்கறை எடுத்துக்கொள்பவர் சீமான். உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று, அனைத்து விதமான உபகரணங்களையும் பயன்படுத்தி பயிற்சி செய்வது அவரது வழக்கம். வெளியூர்ப் பயணங்களின்போது குறைந்தபட்சம் கட்சி நிர்வாகி களுடன் அருகில் உள்ள மைதானத்துக்குச் சென்று எளிய பயிற்சிகளிலாவது ஈடுபடுவார். ‘‘தொடர் பரப்புரைப் பயணங்களால் காலையில் எழுவதற்கு 8 மணியாகிவிடுவதாலும், அதற்குள்ளாக சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடுவதாலும் உடற்பயிற்சியை முற்றாகக் கைவிட்டுவிட்டார். எனவே, அசைவ உணவுகளையும் முடிந்தவரையில் தவிர்க்கிறார். காலையில் சிறிது சிற்றுண்டி, மதியம் தம்பிகள் வீட்டிலிருந்து வருகிற எளிய உணவு, இரவில் பொட்டல உணவு’’ என்கிறார்கள் தம்பிகள்.

என்ன பேசுகிறார் சீமான்?

புகைவண்டிபோல மெல்ல ஓட ஓரம்பித்து, வேகமெடுத்து, தடதட தடதடவென ஓடி, இடையில் ஓவென்று குரலெழுப்பிக் கூட்டத்தைத் திடுக்கிட, புல்லரிக்க வைக்கும் பேச்சு பாணி சீமானுடையது. திருவள்ளுவர், மறைமலை அடிகள், தேவநேயப் பாவணர் போன்றோரின் கருத்தோடு பேச்சு மெல்லத் தொடங்குகிறது. “50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம், இவ்வளவு மூத்த இனத்தின் மக்கள் இன்று நாட்டை இழந்து, மொழியை இழந்து, பரந்த நிலப்பரப்பின் காலடியில் வந்து நிற்கிறார்கள். தமிழ் எழுச்சியே தமிழர் எழுச்சி. அதற்கு இறுதி வாய்ப்பு இந்தத் தேர்தல். வட இந்தியர்கள் 70 லட்சம் பேர் தமிழகத்தில் புதிதாக வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் ரயில்வே துறையில் வட இந்தியர்களைக் கொண்டுவந்து நிரப்புகிறார்கள். எதிர்காலத்தில் இந்த மண்ணை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் அவர்கள் இருப்பார்கள். தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் செய்தது என்ன? முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்சினைக்குக் காரணமான தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்போம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. சுழற்சி முறையில் பிரதமர் பதவி. மாற்று அரசியலுக்கு வாக்களியுங்கள், மானத் தமிழினத்துக்கு வாக்களியுங்கள்” என்று பேசுகிறார் சீமான். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி குறைந்தது 30 நிமிடம் பேசுவது வேறு எந்தத் தலைவரும் கடைப்பிடிக்காத நல்ல விஷயம்.

நோட்டணி சீட்டணி பெரும் பிணி

அதிமுக கூட்டணி பற்றிப் பேசுகையில், “இது கூட்டணி அல்ல, நோட்டணி, சீட்டணி, தமிழ்நாட்டிற்கான சனி, பெரும் பிணி” என்று அடுக்குமொழியில் அசத்துகிறார். தனக்கு இரட்டை மெழுகுவத்தி, காளை மாடு போன்ற சின்னங்கள் மறுக்கப்பட்ட காரணங்களை வேடிக்கையாகச் சொல்லி கவனத்தை ஈர்ப்பதோடு, ஓட்டு இயந்திரத்தில் ‘விவசாயி’ சின்னம் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார். தனது வேட்பாளர்களில் 50% பேர் பெண்கள் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். மேடையில் அவர் பேசும்போது அருகே நிற்கும் அந்தத் தொகுதி வேட்பாளர்கள் மற்ற கட்சியினரைப் போல கையெடுத்துக் கும்பிடுவதில்லை; அவரைப் போலவே அடிக்கடி முழங்கையை உயர்த்திக்காட்டுகிறார்கள்.

இப்போதெல்லாம் ‘வந்தேறி’ என்ற வார்த்தைப் பயன்பாட்டையும், இனவெறிப் பேச்சையும் தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார் சீமான். “சோழ முப்பாட்டன் காலத்தில் ஒரே கப்பலில் மூவாயிரம் யானைகளை ஏற்றிக்கொண்டு போகும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது” என்று அவ்வப்போது அள்ளிவிடுவதும்கூடக் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் கூடும் கூட்டத்தைப் போல 10 மடங்கு பேர் அவரது காணொளிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். கூடுகிற கூட்டமும் இணையத்தின் ரசிகர் கூட்டமும் அவருக்கு வாக்காக மாறுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, திமுக கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்கில் சீமான் சேதத்தை விளைவிக்கக்கூடும் என்றே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close