[X] Close

சுரண்டலுக்கு தீர்வுதான் என்ன?


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 12:33 pm
  • அ+ அ-

எந்திரன் படம் வந்தது. அதன் இரண்டாம் பாகமும் வந்து சக்கை போடு போட்டது. மனிதர்களின் அனைத்து உணர்வுகளும் ரோபோக்களுக்கு வந்தால் எப்படியிருக்கும் என்ற விபரீத கற்பனையின் வெளிப் பாடாக இந்த படம் அமைந்தது. இதையே மாற்றி சிந்தித்துள்ளனர் இங்குள்ள கொடூர முதலாளிகள்.

மனிதனையே ரோபோவை போல நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றச் செய்ய என்ன செய்யலாம் என்ற யோசனை அவர்களுக்கு எப்படி உதித்தது என்றுதான் புரியவில்லை. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகள் மிகக் கொடூரமானவை.

ஆம், மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மை நிகழ்வுகளை கேள்விப்பட்டாலே பாறை போன்ற இதயமும் கரைந்து போகும். இங்குள்ள கரும்பு ஆலைக்கு தேவையான கரும்புகளை வெட்டித் தருவதற்கு கூலிக்கு ஆட்களை நியமிப்பது வழக்கம். அதிலும் கூலி குறைவாக அளிக்க வேண்டும் என்பதற்காகவே பெண் தொழிலாளிகளை இவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

பெண்கள் என்றாலே அவர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சினை, மகப்பேறு உள்ளிட்ட எந்த நிகழ்வும் தங்களது தொழிலை பாதிக்கக் கூடாது என்பதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த முறைகள் மனிதத்தன்மை அற்ற கொடூரங்களின் உச்சம்.

திருமணமாகி, ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு தாயான பெண்களை இவர்கள் கூலித் தொழிலாளியாக தேர்வு செய்கின்றனர். அதோடு மட்டும் நிற்கவில்லை. இவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.

அதாவது பெண் கூலித் தொழிலாளியின் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுகின்றனர். இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவை அவர்களே கொடுப்பதுபோல் கொடுத்து, பின்னர் அதையும் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்துவிடுகின்றனர்.

இவ்விதம் பீட் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கர்ப்பப்பை நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் மாதவிடாய் காலங்களிலும் பணிக்கு வருவார்கள் என்பதுதான் முதலாளிகளின் திட்டம். தொழிலாளிகளின் வறுமையை சாதகமாகப் பயன்படுத்தி இதை கன கச்சிதமாக நிறைவேற்றியுள்ளனர்.

மனிதர்கள் ரோபோக்கள் போல நேரம், காலமின்றி குறைந்த ஊதியத்திற்கு உழைக்க வேண்டும் என்ற ஏதேச்சதிகார முதலாளித்துவ யோசனையை அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டுவிட்டனர். ஆனால் இதில் பாதிக்கப்பட்டது அப்பாவி தொழிலாளிகள்தான்.

இவர்களுக்கு கருப்பையை நீக்கம் செய்த மருத்துவர்கள் தங்களது மருத்துவப் படிப்புக்கான தார்மீக பொறுப்பை மறந்து அல்லது பணத்துக்காக இத்தகைய அறுவை சிகிச்சையை செய்ததன் மூலம் மருத்துவ தொழிலுக்கே மிகப்பெரிய அவமானத்தை தேடித் தந்துள்ளனர்.

எந்த ஒரு தொழிலிலுமே தொழில் தர்மம் என்று ஒன்று உண்டு. ஆனால் இவர்கள் கொத்தடிமைகளை விட மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் ரத்தம் சுரண்டப்படுவதை தடுப்பதற்காகத்தான் தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன.

கொத்தடிமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசுகள் கூறுகின்றன. ஆனால், மக்களால் மக்களுக்காக நடைபெறும் ஜனநாயக நாட்டில் இதுபோன்ற தொழில் சார்ந்த அவலங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

மனித சமூகத்தில் மனிதாபிமானம் மங்கி வருவதன் வெளிப்பாடுகள்தான் இவை. இன்னும் இந்தப் பணமய உலகத்தில் எளியோருக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் நிகழப் போகிறதோ என்ற அச்சம் எழுகிறது. இதுபோன்ற கொடுமைகளைக் கடுமையான சட்டங்கள் மூலம்தான் தடுக்க முடியும். அரசு செவிசாய்க்குமா?

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close