[X] Close

இதுதான் இந்த தொகுதி: கள்ளக்குறிச்சி


  • kamadenu
  • Posted: 15 Apr, 2019 10:10 am
  • அ+ அ-

-ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் பரவியிருக்கும் தொகுதி. விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் (தனி) கெங்கவல்லி (தனி), ஏற்காடு (தனி) சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது.  ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் கல்வராயன் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது. கோமுகி அணை, மணிமுக்தா அணை, ஆஞ்சநேயர் கோவில், கல்வராயன் மலை, மேகம் அருவி, பெரியாறு அருவி, தியாகதுருகம் மலை உள்ளிட்டவை இத்தொகுதிக்கு சிறப்பு சேர்க்கின்றன.

பொருளாதாரத்தின் திசை: நெல், கரும்பு, பருத்தி, பாக்கு, சோளம், மரவள்ளி, மணிலா விளைவிக்கும் விவசாய பூமி. விவசாயத் தொழிலாளர்களும், அரிசி ஆலைத் தொழிலாளர்களும் இப்பகுதியில் அதிகம்.

விழுப்புரம் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 30-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அமைந்திருக்கிறது. கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில்துறைபட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை ஆகியவை கரும்பு விவசாயிகளுக்குப் பயனளிக்கின்றன.  தியாகதுருகத்தில் கல்குவாரி அமைந்துள்ளன.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: அண்மைக் காலமாக வெளிமாநிலங்களிலிருந்து வருகின்ற அரிசியால் கள்ளக்குறிச்சி அரிசி ஆலைகள் நலிவு நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. எனவே, வெளிமாநில அரிசிக்கு வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் புதைசாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.  கல்வராயன் மலைப் பகுதியில் சாலைகள் அமைக்க வனத்துறை இடையூறாக இருப்பதால் வெள்ளிமலைக்கு மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது, 70 கிராமங்களுக்கு இன்னும் பேருந்து வசதியில்லை. ஏற்காட்டில் உள்ள கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை.

நீண்ட காலக் கோரிக்கைகள்: கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உளுந்தூர்ப்பேட்டை அருகே அமைக்கப்படுமோ என்ற அச்ச உணர்வு மக்களிடம் எழுந்துள்ளது. ஏற்காடு மற்றும் கல்வராயன் மலையில் சுற்றுலா வளர்ச்சி, சாலை வசதி, கள்ளக்குறிச்சிக்கான ரயில் போக்குவரத்துத் திட்டம், கடுக்காய்த் தொழிற்சாலை, மரவள்ளித் தொழிற்சாலை உள்ளிட்டவை நீண்ட காலக் கோரிக்கைகள்.

ஒரு சுவாரஸ்யம்: கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை முன்வைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐ.பிரபு, தற்போது தினகரன் அணியில் ஐக்கியமாகிவிட்டார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: பட்டியலின சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். அடுத்ததாக வன்னியர் அதிகம். உடையார், செட்டியார், முதலியார், நாயுடு சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: 2008-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் 2009-ல் திமுகவும், 2014-ல் அதிமுகவும் வென்றுள்ளது.

களம் காணும் வேட்பாளர்கள்

திமுக கவுதமசிகாமணி

தேமுதிக சுதீஷ்

மக்கள் நீதி மய்யம் கணேஷ்

அமமுக கோமுகி மணியன்

வாக்காளர்கள்

மொத்தம் 15,11,972

ஆண்கள் 7,50,610

பெண்கள் 7,61,191

மூன்றாம் பாலினத்தவர்கள் 171

முதல் முறை வாக்காளர்கள் 1,16,852

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 85.21%

முஸ்லிம்கள்: 09.46%

கிறிஸ்தவர்கள்: 5.33%

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close