[X] Close

சுய-முரண்பாடுகளை  ‘பாரபட்சமற்ற தன்மை’ என்று கூறிக்கொள்ளும் ஹர்ஷா போக்ளே?


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 13:19 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

கிரிக்கெட் வர்ணனையாளர், எழுத்தாளர், கருத்தாளர் ஹர்ஷா போக்ளே கிரிக்கெட் பற்றி நட்சத்திர வீரர்கள் பற்றி அவ்வப்போது மாறுபட்ட இருவேறு கருத்துகளைக் கூறிவருபவர்.

 

முக்கியப் பிரச்சினைகளிலெல்லாம் கொஞ்சம் அண்டை, அயல் பார்த்து கவனமாகவே அவர் கருத்து கூறுவது வழக்கம்.  அனில் கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் நடந்த மோதலில் அனில் கும்ப்ளே பெருந்தன்மையாக விலகினார். அப்போது கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன, அப்போது இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் சவுகரியமாக  ‘அர்ப்பணிப்புள்ளவர்களை அமைப்புகள் காக்க வேண்டும்’ கூறிவிட்டு, உடனேயே அடுத்த ட்வீட்டில் கேப்டனுக்கும் கோச்சுக்கும் முட்டிக் கொண்டால் கேப்டன் தன் வழியில் செல்வதைத் தவிர்க்க முடியாது’ என்று தன் முந்தைய கருத்திற்கு மாறாக டிவீட் செய்தார்.

 

ஸ்மித் வார்னர் தடையின் போதும் தண்டனை அவசியம் என்றார், பிறகு தண்டனை சற்று கடுமையானது என்றார். 

 

விராட் கோலி இந்தியா வெல்ல வேண்டும் என்று நினைக்காதவர்கள் நாட்டை விட்டு போகட்டும் என்று அராஜகமாக தன் ஆப் வீடியோவில் தெரிவித்ததற்கு ஹர்ஷா போக்ளே வழா வழா கொழ கொழாவென்று ஒரு ட்வீட் செய்து அதைக் கண்டிக்கிறா இல்லையா என்பதை நேரடியாகத் தெரிவிக்காமல் சுற்றிவளைத்து யாருக்கும் புரியாமல் ட்வீட் செய்ததும் நினைவுக்கு வருகிறது.

 

அன்று தோனி நடுவர்கள் தீர்ப்பை மாற்றும் முயற்சியில் மைதானத்துக்குள் புகுந்து காரசார வாக்குவாதம் செய்த போதும் ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்சுரேக்கர், சேவாக், பிஷன் பேடி உள்ளிட்டோர் நேரடியாகக் கண்டித்ததைப் போல் கண்டிக்காமல் ’இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று தோனி உணர்வார்’ என்று பூடகமாக கூறினார். தோனி உணர்வார் என்பது இவருக்கு என்ன ஜோசியமா தெரியும்?

 

ஆனால் இவ்வாறு பூடகமாக முரண்பாடுகளுடன் வழ வழா கொழ கொழா கருத்துக்களைக் கூற காரணம் ஒரு முறை ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று அவரை பணியிலிருந்து காரணம் கூறாமல் விலக்கியது. அப்போது அவர் கூறினார், “சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், லஷ்மண், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் மிக அருமையான ஒரு கிரிக்கெட் வீரர்கள். இவர்கள் இருக்கும் போது நான் என்ன வர்ணனையில் கூறுகிறேன் என்பதைப் பற்றி விளைவுகள் பற்றி கவலைப்படாமல் தெரிவிக்கலாம்.  ஒரு முறை சச்சின் டெண்டுல்கர் ரன்களுக்காக போராடிய போது  ‘ஒரு மகாராஜா சாமானிய மனிதர் போல் தெருக்களில் நடந்து செல்கிறார்’ என்றேன் ஆனால் அதன் பிறகு ஒருவர் கூட என்னிடம் வந்து ‘சச்சினுக்கு அது பிடிக்கவில்லை’ என்று கூறியதில்லை என்று கூறினார்.

 

இதன் பொருள் இன்றைய தலைமுறை வீரர்கள் குறித்து விமர்சனம் செய்தால் உடனே அது அவர்களுக்குப் பிடிக்காமல் போகிறது என்பதுதான். ‘சச்சினுக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் ஒருவரும் கூறியதில்லை’ என்றால் இன்று விமர்சனம் செய்தால் உடனே ‘அவருக்குப் பிடிக்கவில்லை’ இவருக்குப் பிடிக்கவில்லை  என்று கமெண்ட் வருவதாகவே போக்ளே குறிப்பிட்டுள்ளார்.

 

ஆகவே முக்கிய விவகாரங்களில் அவர் அதிரடி விமர்சனக்கருத்துகளை வெளியிடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று புரிகிறது. இந்தியில் வர்ணனை செய்யும் போது இந்திய வீரர்களை புகழ்பாடியே வர்ணனை செய்வார், ஆனால் ஆங்கில வர்ணனையில் அவ்வாறு செய்ய மாட்டார். இவையெல்லாம் முரண்பாடுகள்தான். தன் கரியர் நோக்கங்களுக்காக அவர் இவ்வாறு இருப்பதில் தவறில்லை என்றாலும் இதனை நடுநிலை என்று கூற முடியுமா? பாரபட்சமற்ற அவரது தன்மை என்று கூற முடியுமா என்பதே நம் கேள்வி.

 

ஆனால் அவர் தன் ட்வீட்டில், “சமீபகாலங்களகா என்னை தோனி ஆதரவாளர், தோனி எதிர்ப்பாளர், இந்திய ஆதரவாளர் இந்திய எதிர்ப்பாளர், கோலி ஆதரவாளர் கோலி எதிர்ப்பாளர் பிசிசிஐ ஆதரவாளர் பிசிசிஐ எதிர்ப்பாளர் என்று என்னை முத்திரைக் குத்துகின்றனர்.  ஆனால் இது சந்தேகங்களை நீக்குவதாக உள்ளது. அதாவது  இந்த முத்திரைகள் என்னிடம் பாரபட்சத் தன்மை இல்லை என்பதை உறுதி செய்கிறது. பாரபட்சமற்ற தன்மைதான் எனக்கு நானே அமைத்துக் கொண்ட அளவுகோல்” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

முரண்படும் இருவேறு கருத்துக்களை, ஒரு விமர்சனக் கருத்தை மற்றொரு உடன்பாட்டுக் கருத்தினால் பதிலீடு செய்வது பாரபட்சமற்றது என்று கூற முடியாது, இது சுய முரண்பாடுதான்.. நடுநிலைத் தன்மையல்ல, நிலைப்பாடு எடுக்க முடியாத இயலாமையே என்று நாம் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close