[X] Close

பெண் எழுத்து: இரண்டு கோடி பெண்கள் எங்கே?


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 13:02 pm
  • அ+ அ-

தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற பொறுப்பும் கடமையும் இல்லாதவர்கள்கூடத் தேர்தல் நேரத்தில் ஏதோவொரு கருத்துக் கணிப்பை முன்வைத்து அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள். கருத்துக் கணிப்பை யார் நடத்துகிறார்கள், அது நியாயமாக நடத்தப்பட்டிருக்கிறதா, அதில் சொல்லப்பட்டிருப்பவை உண்மையா என்பது பற்றிப் பலருக்கும் ஆர்வமோ அக்கறையோ இருப்பதில்லை.

இப்படியான சூழலில் தேர்தல் குறித்த உண்மைத் தகவல்களைச் சுமந்தபடி வந்திருக்கிறது ‘The Verdict’ புத்தகம் (பென்குவின் வெளியீடு). இந்தியாவின் சிறந்த தேர்தல் கணிப்பாளர்களான பிரணாய் ராய், தோரப் ஆர். சோபரிவாலா இருவரும் இணைந்து எழுதியிருக்கிற இந்தப் புத்தகம், 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வெளியானாலும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் ஆய்வுகளையும் உள்ளடக்கியிருக்கிறது.

பெண்களின் அரசியல் பங்கேற்பு ஆண்களைவிடக் குறைவு என்றபோதும், ஆண்களைவிட ஆர்வத்துடனும் கடமை உணர்வோடும் பெண்களே வாக்களிக்கின்றனர். 1962-ல் நடந்த தேர்தலில் 47 சதவீதமாக இருந்த பெண்களின் வாக்குப்பதிவு 2014 தேர்தலில் 66 சதவீதமாக உயர்ந்தது.

பெண்களின் வாக்குப்பதிவு 19 சதவீதம் உயர்ந்திருக்க, ஆண்களோ வெறும் ஐந்து சதவீத உயர்வோடு பின்தங்கியிருக்கின்றனர். இந்தக் கணக்குப்படி பார்த்தாலே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள்.

மறுக்கப்படும் உரிமை

பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருக்கும் வேளையில், பெண்களின் வாக்குரிமை மறுக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தில் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 2019-ல் பெண்களின் எண்ணிக்கை நூறு ஆண்களுக்கு 97.2 சதவீதமாக இருக்கும் என 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவித்திருக்கிறது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்களுக்கு இணையான அளவிலோ அவர்களைவிட ஓரிரு சதவீதங்கள் குறைவாகவோ பெண் வாக்காளர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 92.7 சதவீதம். அப்படியெனில் 4.5 சதவீதப் பெண் வாக்காளர்கள் எங்கே?

இப்போது மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலிலும் இப்படிப் புறக்கணிக்கப்படும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியேதான் இருக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் தேர்தல் ஆணையமும் வெளியிடும் புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இதுவரை நடந்த தேர்தல்களில் 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலே பெண்களின் வாக்குரிமைப் பறிப்புக்கு முக்கியமான சாட்சியாகத் திகழ்கிறது.

வாக்குரிமை இருந்தும் இரண்டு கோடியே 34 லட்சம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கக்கூடும் அல்லவா?

padippom 2.jpg 

பெண் வாக்காளர்களே இல்லாத மாநிலம்

நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் 4.5 சதவீதப் பெண் வாக்காளர்கள் விடுபட்டிருப்பது நமக்குப் பெரிய விஷயமாகத் தோன்றாது. ஆனால், இந்த சதவீதத்தை எண்ணிக்கையாக்கிப் பார்த்தால் அதன் ஆபத்து புரியும். கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், இந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலாத நிலையில் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

மிக எளிதில் கடந்துவிட முடியாத எண்ணிக்கை இது. ஜார்கண்ட், ஹரியாணா, தெலங்கானா, கேரளம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள பெண்கள் அனைவரும் வாக்களிக்காமல் இருப்பதற்கு இது சமம். இன்னொரு வகையில் பார்த்தால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 38 ஆயிரம் பெண்கள் வாக்களிக்க முடியாது என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இதெல்லாம் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கை இல்லை எனப் புறக்கணிக்க முடியாது. காரணம் ஒவ்வொரு ஐந்து தொகுதிகளுக்கும் ஒரு தொகுதியில் 38 ஆயிரம் அல்லது அதற்குக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி நிர்ணயிக்கப்பட்டிருப்பதை இந்திய தேர்தல் வரலாறு சொல்கிறது.

மாநில அரசுகளின் மெத்தனம்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் வைத்துத்தான் இந்த எண்ணிக்கையைத் தோராயமாகக் குறிப் பிட்டிருக்கிறார்கள். சரியான எண்ணிக்கையின்படி பார்த்தால், காணாமல்போன பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே எட்டு லட்சத்தைத் தாண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

இதற்குத் தேர்தல் ஆணையத்தை மட்டும் குறைகூற முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயரை இணைப்பது குறித்துப் பெண்களுக்குப் போதிய அளவு விழிப்புணர்வு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமையும்கூட.

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். காரணம், சில குறிப்பிட்ட தொகுதிகளில் அதிக அளவில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் வாக்குரிமை இருந்தும் வாக்களிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

இவற்றில் முதலிரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களே சமீபகாலமாக முதல்வர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பதவியேற்று மூன்று மாதங்களே நிறைவடைந்திருக்கின்றன. அதற்கு முன் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருந்தது. இதன் உச்சகட்ட அதிர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட 85 ஆயிரம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

book.jpg

தென்னிந்தியாவே முதலிடம்

பெண்களுக்கு வாக்குரிமையை வழங்குவதிலும் வட இந்திய மாநிலங்களைவிடத் தென்னிந்திய மாநிலங்களே முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் ஆந்திரப் பிரதேசத்திலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண் வாக்காளர்கள் விடுபட்டிருக்கிறார்கள். நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டு காலத் தலையெழுத்தை நிர்ணயிப்பதில் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் இந்தப் புத்தகம் விரிவாக அலசுகிறது. ஆளும் கட்சி மீண்டும் அரியணை ஏறுமா என்பதற்கான விடையும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

புள்ளி விவரங்களோடும் கள அனுபவங்களோடும் இந்தியத் தேர்தல் வரலாற்றை பிரணாய் ராயும் சோபரிவாலாவும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய நடையில் இருப்பது புத்தகத்தின் மற்றுமொரு சிறப்பு. தேர்தல் வரலாறு என்றதும் இது போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கான புத்தகமாக இருக்குமோ என்ற எண்ணத்தை நேர்த்தியான கட்டுரைகளால் ஆசிரியர்கள் இருவரும் உடைக்கின்றனர்.

1952-ல் நடந்த முதல்  நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்வரை இந்தியா முழுவதற்குமான வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

- பிருந்தா

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close