[X] Close

இனி எல்லாம் நலமே 01: நாம் தவறவிடும் அறிகுறிகள்


01

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 12:17 pm
  • அ+ அ-

-அமுதா ஹரி

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட பிறகும் அவை பெரும்பாலான மக்களை ஓரளவு சென்றடைந்துவிட்ட பிறகும் பெண்கள் அதைத் தொட்டால் தீட்டு, இதைச் செய்தால் பாவம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

பெண்ணுடலில் நிகழும் மாற்றங்கள் குறித்த அறிவியல்பூர்வமான புரிதல் இல்லாத நாட்களில் இவற்றைச் சொன்னதைக்கூட புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மருத்துவத் துறையில் கரைகண்ட பிறகும் இப்படிச் சொல்வதும் அதன்படி பெண்களை நடக்க வற்புறுத்துவதும் பெண்களின் உடல், மனரீதியான வளர்ச்சிக்கு நல்லதல்ல.

ஆரோக்கியமான சமூகம் என்பது பெண்களின் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியதுதானே. பெண்கள் பருவம் அடைவது தொடங்கி மாதவிடாய் நிறைவுவரை ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு வகையான உடல், மனரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். அதைப் பெண்கள்  மட்டுமல்ல; வீட்டில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கண்ணுக்குப் புலனாகிற மாற்றங்கள் குறித்து அக்கறை காட்டும் பலரும் கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்குள் நடக்கிற மாற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சிலரோ கண்ணுக்குத் தெரிகிற மாறுதல்களைக்கூடக் கவனிக்காமல் புறக்கணித்துவிடுவார்கள் அல்லது அதைப் பெரிதுபடுத்தி பயந்துபோவார்கள். ஸ்வேதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அம்மாவும் அப்படித்தான் பயந்திருந்தார்.

அம்மாவின் பயம்

ஸ்வேதாவுக்கு ஒன்பது வயது. சிறுநீர் கழித்துவிட்டு வந்த பிறகும் சில நேரத்தில் சாதாரணமாக இருக்கும்போதும் பிறப்புறுப்பைச் சொறிந்துகொண்டே இருப்பதாக அவளுடைய அம்மா சொன்னார். வீட்டில் அனைவர் முன்னிலையிலும் மகள் அப்படிச் செய்வது அவளுடைய அம்மாவுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூடு பிடித்திருக்குமோ என நினைத்து, குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களைச் சில நாட்களுக்குத் தந்திருக்கிறார்.

அப்படியும் அவளது செய்கை குறைந்தபாடில்லை. அடிக்கடி இப்படிச் செய்வது நல்லதல்ல என்று சொல்லும்போது கருத்தாகக் கேட்டுக்கொள்ளும் மகள், மீண்டும் அவளை அறியாமல் அதைச் செய்துவிடுகிறாள். அதன் பிறகுதான் ஸ்வேதாவின் அம்மாவுக்குப் பயம் அதிகரித்தது. அவளுக்கு ஏதாவது நோய்த் தொற்று இருக்குமா எனக் கேட்டார்.

பொதுவாகத் தற்போதைய வாழ்க்கை முறையாலும் உணவுப் பழக்கத்தாலும் பெரும்பாலான குழந்தைகள் சிறு வயதிலேயே பருவம் எய்திவிடுகின்றனர். முன்பு ஒன்பது வயதில் பருவ மாற்றத்துக்கான அறிகுறிகள் தோன்றும். இப்போதெல்லாம் ஏழு வயதிலேயே அது நடந்துவிடுகிறது. அதையொட்டி குழந்தைகளின் உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிடுகின்றன.

பருவமடைதலின் முதல் நிலையில் பெண் குழந்தைகளுக்கு மார்பகம் வளர்வதோடு மறைவிடங்களில் ரோமம் வளரும். சில குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படக்கூடும். ஸ்வேதாவுக்கும் பருவமடைதலின் தொடக்கம் என்பதால்தான் அது நடந்திருக்கிறது. சில நேரம் சாதாரண பூஞ்சைத் தொற்றாகவும் இருக்கலாம். குழந்தைகள் பயன்படுத்துகிற உள்ளாடைகள் தரமானவையாகவும் பருத்தித் துணியால் ஆனவையாகவும் இருப்பது நல்லது.

தரமற்ற உள்ளாடைகளை அணிவது, சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்யாமல் வருவது போன்றவையும் பிறப்புறுப்பில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும். இவற்றைச் சரிசெய்தாலே பிரச்சினை சரியாகிவிடும். அப்படியும் சரியாகாதபோது மருத்துவரை அணுகலாம்.

சிறுநீரை அடக்குவது தவறு

பள்ளிகளில் கழிவறை சுத்தமாக இல்லாததால் பெரும்பாலான சிறுமிகள் வெகுநேரம் சிறுநீரை அடக்கியே வைத்திருப்பார்கள். இது தவறு. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்ததுமே கழித்துவிடுவதுதான் நல்லது. இல்லையென்றால் சிறுநீர்ப்பை விரிந்து, அதையொட்டி இருக்கும் கருப்பையையும் மலக்குடலையும் பின்னுக்குத் தள்ளும். கருப்பை இப்படி அடிக்கடி பின்னுக்குத் தள்ளப்படுவது நல்லதல்ல.

வளர்ந்த பிறகு கருப்பை தொடர்பான சிக்கல்களை அது உண்டாக்கக்கூடும். அதனால், நீண்ட நேரம் சிறுநீரை அடக்கிவைப்பது ஆரோக்கியத்துக்குக் கேடு என்பதைக் குழந்தைகளிடம் சொல்லிப் புரியவைக்க வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமல்ல; ஆண் குழந்தைகளும் சிறுநீரை அடக்கிவைக்கக் கூடாது.

உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை

பருவமடைதலின் தொடக்கத்தில் எலும்புகள் வளர்ச்சிபெறும். சில குழந்தைகளுக்கு அபரிமிதமான உடல், உயர வளர்ச்சி இருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்குச் சத்தான ஆரோக்கிய உணவைக் கொடுப்பது நல்லது. பெரும்பாலான வீடுகளில் தினமும் பிஸ்கெட், பிரெட், பன், சாக்லேட் போன்றவற்றையே கொடுப்பார்கள். கேட்டால் குழந்தைகள் அவற்றைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்கள் எனப் பெற்றோர் அதற்கு விளக்கமும் வைத்திருப்பார்கள்.

உண்மையில் நாம் எதைப் பழக்குகிறோமோ அதைத்தான் குழந்தைகள் பழகிக்கொள்கிறார்கள். அதனால், இப்போதிருந்தே குழந்தைகளுக்குக் காய்கறிகளையும் கீரை வகைகளும் அதிகமாகக் கொடுக்க வேண்டும். புரதச் சத்து, அமினோ அமிலம் போன்றவை நிறைந்த உணவைக் கொடுப்பது சிறந்தது. முறையான உணவுப் பழக்கம் இல்லாததால் பல குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ரத்தசோகை ஏற்பட்டு அதற்கு மாத்திரை சாப்பிடுவதைவிட ஆரோக்கிய உணவைத் தினமும் சாப்பிட்டால் பிரச்சினை இல்லை.

சில குழந்தைகளுக்கு அழகு குறித்த சிந்தனை ஏழு வயதிலும் இன்னும் சிலருக்கு அதற்கு முன்பேகூடத் தோன்றக்கூடும். ஒல்லியான தோற்றம் வேண்டும் என்பதற்காகவே சில குழந்தைகள் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள். பருவமடைவதை நோக்கி நகரும் இந்த நாட்களில் சரிவிகித உணவைப் புறக்கணிப்பது, பின்னாளில் பெரும் சிக்கலுக்கு அழைத்துச் செல்லும். அதனால் உணவில் பெற்றோர் கண்டிப்புக் காட்ட வேண்டியது அவசியம்.

இத்தனை நாட்களாகப் பெற்றோர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தைகள் இப்போது தனித்துச் சிந்திக்கத் தொடங்குவார்கள். எல்லாம் தனக்குத் தெரியும் என்ற நினைப்பு அவர்களுக்கு மேலோங்கும். தங்களுக்குப் பிடித்தவர்களைக் கதாநாயகர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களைப் போல் நடக்க முயல்வார்கள். இவற்றையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளத் தேவையில்லை. இது போன்றவற்றை அவர்கள் கடந்து வரத்தான் வேண்டும். சரி, வெளியே இவ்வளவு மாற்றங்கள் நடந்துகொண்டிருக்க, உடலுக்குள் என்னவெல்லாம் நிகழும்?

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

 

ini amudha.jpg

அமுதா ஹரி, 25 ஆண்டுளுக்கு மேலாக மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். 18 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. தொற்றுள்ள கர்ப்பிணிகளுக்குத் தொற்றில்லாக் குழந்தைகள் பிறக்க மருத்துவ உதவியோடு துணைநின்றிருக்கிறார்.

வளரிளம் பருவத்தினருக்கான வாழ்க்கைத் திறன் கல்வி, ரத்த சோகைத் தடுப்புத் திட்டம், மலைவாழ் மக்களிடையே உடல் நலத் தூதுவர்களை உருவாக்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை டாக்டர் அமுதா ஹரியின் மித்ராஸ் பவுண்டேஷன், அரசுடன் இணைந்தும் யுனிசெஃப் போன்ற நிறுவனங்களின் நிதியுதவியுடனும் செயல்படுத்திவருகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close