[X] Close

சி.சு.செல்லப்பா: சுதந்திர தாகமும் இலக்கிய வேட்கையும்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 09:40 am
  • அ+ அ-

-சி.மோகன்

இளமையில் சுதந்திரப் போராட்டக்களத்திலும், அதைத் தொடர்ந்து இலக்கியத்தளத்திலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சி.சு.செல்லப்பா. காந்தி யுக அர்ப்பணிப்பு மனோபாவமே அவருடைய வாழ்வை வழிநடத்திய சக்தி. காந்தியமும் இலக்கியமுமே அவருடைய வாழ்வின் லட்சியப் பிடிமானங்களாகக் கடைசி வரை இருந்தன. வேள்வித் தீயென வாழ்வை அமைத்துக்கொண்டவர் சி.சு.செல்லப்பா.

1912 செப்டம்பர் 29-ல் வத்தலக்குண்டில் செல்லப்பா பிறந்தார். தந்தை அரசு அதிகாரி. தந்தையின் பணியிட மாற்றலுக்கேற்ப பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்புகளை முடித்தார். மதுரைக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். ஆங்கிலேய அரசு அதிகாரியான தந்தை ஒரு தேசியவாதி. தந்தையிடமிருந்து தேசிய ஊக்கம் பெற்ற இவர் சிறு வயதிலேயே ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அப்போது நூறு தேசியப் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்துவைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். வீட்டில் ராட்டையில் நூல் நூற்றிருக்கிறார். சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறையும் சென்றிருக்கிறார்.

உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் வத்தலக்குண்டில் இருந்த தாய்வழிப் பாட்டி வீட்டுக்குச் சென்றபோது, மாமாவின் வீட்டு நூலகத்தில் அன்றைய தமிழ் நாவல்களை ஆர்வத்துடன் படித்திருக்கிறார். இலக்கிய ஆர்வமும் தேசிய சுதந்திர உணர்வும் மேலோங்கிய இளம்பருவ நாட்கள் இவருடையவை. பி.ஏ. தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தவறி, அதைப் பல்வேறு ஊர்களில் தங்கிப் படித்துப் பலமுறை எழுதியும் அப்பாடத்தில் இவரால் தேற முடியவில்லை. ஆங்கிலத்தின் மீது உள்ளூரக் கொண்டிருந்த வெறுப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்.

இக்காலத்தில், அப்போது வெளிவந்து கொண்டிருந்த வ.ரா.வின் ‘மணிக்கொடி’, சங்கு சுப்ரமணியத்தின் ‘சுதந்திரச் சங்கு’ ஆகிய இதழ்களோடு உறவு ஏற்பட்டதை அடுத்து, அவருடைய படைப்பாக்கப் பயணம் தொடங்கியது. ‘சுதந்திரச் சங்கு’ வாரப் பதிப்பில் இவருடைய முதல் சிறுகதை ‘மார்கழி மலர்’ பிரசுரமானது. பின்னர், பி.எஸ்.ராமையாவின் ‘மணிக்கொடி’ முதல் இதழில் வெளிவந்த ‘சரஸாவின் பொம்மை’ சிறுகதை தனிக் கவனம்பெற்றது. வத்தலக்குண்டைச் சேர்ந்த பி.எஸ்.ராமையாவுடன் ஏற்பட்ட உறவும் நெருக்கமும் பத்திரிகைப் பணி மூலம் வாழ்வை நகர்த்துவதற்கான விருப்பத்தை உண்டாக்கியது. அதன்பொருட்டு 1937-ல் சென்னை வாசத்தை மேற்கொண்ட செல்லப்பா பல்வேறு பத்திரிகைகளில் அவ்வப்போது பணிபுரிவதும், வேலையை இழக்கும் தருணங்களில் வத்தலக்குண்டு சென்றுவிடுவதுமாக இருந்தார். இக்காலகட்டத்தில் ஆறு ஆண்டுகள் (1947-53) ‘தினமணி கதி’ரில் பணியாற்றியதுதான் நீடித்த கால வருமானமிக்க பணி. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவராகக் கவனம்பெற்று அநேகக் கதைகள் இச்சமயத்தில் வெளிவந்தன.

‘சரஸாவின் பொம்மை’ (கலைமகள் பிரசுரம்), ‘மணல் வீடு’ (ஜோதி நிலையம்) என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ‘எழுத்து’ இதழ் வெளிவருவதற்கு முன்னரே வெளிவந்திருக்கின்றன. க.நா.சுப்ரமண்யத்துடன் கொண்ட நட்பும் இலக்கிய உறவும் விமர்சனத்தின் மீது அளப்பரிய ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. தமிழ்ச் சூழலில் அதன் உடனடி அவசியத்தை உணரச்செய்தது. விமர்சனத்துக்கென்று இதழ் கொண்டுவர முனைந்தார். அதன் விளைவுதான் ‘எழுத்து’.

எந்தவொன்றிலும் ஈடுபடுவதற்கு முன்பு தன்னை அதற்குத் தகுதிப்படுத்திக்கொள்வதென்பது செல்லப்பாவின் சுபாவம். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், அமெரிக்கத் தகவல் மைய நூலகம் இரண்டிலும் உறுப்பினராகி வாசிக்கத் தொடங்கினார். ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், எஃப்.ஆர்.லூவிஸ் போன்ற மேலை விமர்சன மேதைகளின் அணுகுமுறைகளையும் கோட்பாடுகளையும் கற்றறிந்தார். ‘என்கவுன்டர்’ போன்ற சிறுபத்திரிகைகளிலிருந்தும் உத்வேகம் பெற்றார். அதேபோல் ‘எழுத்து’ இதழ் ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னதாக, ‘வாடிவாசல்’ நாவலை எழுத முனைந்திருந்த சி.சு.செல்லப்பா, நாவலுக்கான காட்சி முகாந்திரமாக ஜல்லிக்கட்டைப் புகைப்படங்கள் எடுக்க விரும்பினார். அதற்காகப் புகைப்படம் எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள ஒரு ‘பாக்ஸ் கேமரா’ வாங்கிப் பழகினார். ‘வாடிவாசல்’ நாவலில் வெளிப்படும் காட்சிரீதியான துல்லியம் இந்தப் பிரயாசைகளிலிருந்து உருவானதுதான். ‘வாடிவாசல்’ வெளிவந்தபோது அதன் முகப்பாக அமைந்தது, செல்லப்பா எடுத்த புகைப்படம்தான்.

‘வாடிவாசல்’ நாவல் ஜல்லிக்கட்டுக் களத்தை மையமாகக் கொண்ட சிறு நாவல். சிறிய படைப்பென்றாலும் மிகுந்த கலை வீர்யமிக்கப் படைப்பு. அளவிலும் சரி, கலையம்சத்திலும் சரி, படைப்பின் குணாம்சத்திலும் சரி, ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற ‘கடலும் கிழவனும்’ நாவலோடு பொருத்திப்பார்க்கத் தூண்டும் படைப்பு சக்தி கொண்டது. இன்று, செல்லப்பாவை நிலைபெறச் செய்திருக்கும் ஒரே படைப்பாக இது மட்டுமே இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவருடைய ‘ஜீவனாம்சம்’ நாவலும் பொருட்படுத்தப்பட வேண்டிய ஒரு படைப்பு. நனவோடை உத்தியிலான நாவல். கணவனை இழந்து அண்ணன் வீட்டில் தங்கி வாழும் பெண், புகுந்த வீட்டாரிடம் ஜீவனாம்சம் கேட்டுத் தொடர்ந்த வழக்கின் பின்புலத்தில் விரியும் அகவுலகச் சித்தரிப்பு. பொருள் சார்ந்த வாழ்வுக்கும் அன்பின் வலிமைக்கும் இடையேயான அகப்போராட்டத்தை வசப்படுத்தியிருக்கும் முக்கியமான நாவல்.

அவரது ‘முறைப்பெண்’ நாடகம்கூடத் தமிழ் நாடகப் பனுவல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றுதான். “க.நா.சு., தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமையா, கு.அழகிரிசாமி எல்லோரும் நாடகங்கள் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், செல்லப்பாவின் ‘முறைப்பெண்’ நாடகம்தான் நாடக மேடையேற்றத் தகுந்த நாடகப் பண்புகள் கொண்ட நாடகம்” என்கிறார் விமர்சகர் வெங்கட் சாமிநாதன். ‘யதார்த்தா’ பெண்ணேஸ்வரன் இந்நாடகத்தை டெல்லியில் மேடையேற்றியதோடு, சென்னையில் செல்லப்பா முன்னிலையிலும் மேடையேற்றியிருக்கிறார். செல்லப்பாவின் கிராம வாழ்விலிருந்து, முக்குலத்தோர் சமூகப் பின்புலத்தில் அவர்களுடைய நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்முறைகள், பிடிவாதங்கள் என்றாக அமைந்த ஒரு சமூகச் சித்தரிப்பு இந்நாடகம்.

திருவல்லிக்கேணியில் ஒரு குறுகிய வீட்டில் புத்தகக் கட்டுகள் அறையை அடைத்துக்கொண்டிருக்க, முதுமையின் தளர்ச்சியோடும் மனைவியின் துணையோடும் வாழ்ந்த செல்லப்பா டிசம்பர் 18, 1998-ல் மரணமடைந்தார். அப்போது நான் திருவல்லிக்கேணியில்தான் குடியிருந்தேன். அன்று காலை, கவிஞரும் பத்திரிகையாளரும் அருகாமையில் இருந்தவருமான ராஜமார்த்தாண்டன் என் அறைக்கு வந்து செல்லப்பாவின் மரணம் பற்றிச் சொன்னார். இருவரும் சென்று அஞ்சலி செலுத்தினோம். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் வந்து அஞ்சலி செலுத்தியது மரணத்தைக் கவனப்படுத்தியது.

செல்லப்பாவின் மரணத்துக்குப் பின், அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவலுக்காக 2001-க்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவரது நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. இவை எதுவுமே அவருடைய புத்தகங்கள் மறுபிரசுரமாவதற்கும் கைப்பிரதிகள் நூலாவதற்கும் துணை செய்யவில்லை. ஓர் அரிய பொக்கிஷத்தின் அருமையை நாம் அறியாதிருக்கிறோம். நவீனத் தமிழ் இலக்கிய வெளியை உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய சி.சு.செல்லப்பா, இன்று நம் நினைவுகளிலிருந்து மங்கிக்கொண்டிருக்கிறார். இது நம் இன்றைய இலக்கியச் சூழல் பற்றிய ஆதங்கமன்றி வேறில்லை.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close