[X] Close

அரசியல் பிரக்ஞையின்றி எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது!- ஆடஃப் சுயிஃப் பேட்டி


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 09:39 am
  • அ+ அ-

டிஷானி டோஷி

எகிப்தில் முபாரக் தலைமையிலான ஆட்சியின்போது அதிகரித்துவந்த காவல் துறை அராஜகத்தை எதிர்த்து லட்சக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டார்கள். பாதுகாப்புப் படைக்கும் அரசிடமிருந்து முறையான பாதுகாப்பு வேண்டி போராடிய பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 900 பேர் மாண்டார்கள்; 6,000 பேர் படுகாயமடைந்தார்கள். காவல் துறை மீதான எதிர்ப்பைக் காட்டும் விதமாக 90 காவல் நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளோடு போராட்டம் இன்னும் பூதாகரமாகத் தொடர்ந்தது. விளைவாக, பதவியிலிருந்து முபாரக் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முபாரக்கின் ஊழல் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்தும் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்துத் தீர்ப்பிட்டது நீதித் துறை. எகிப்திய போராட்டத்தின்போது தாஹ்ரிர் சதுக்கத்தில் திரண்ட இருபது லட்சம் பேரின் மீதும் உலகின் கவனம் திரும்பியது. இந்தப் பதினெட்டு நாள் போராட்டத்தை நம் கண் முன் நிறுத்தும் ‘கெய்ரோ: மெம்வா ஆஃப் அ சிட்டி ட்ரான்ஸ்ஃபார்ம்டு’ எனும் புத்தகத்தை எழுதினார் ஆடஃப் சுயிஃப். எழுத்தாளரும், அரசியல்-கலாச்சார விமர்சகருமான ஆடஃப் சுயிஃபுடன் கவிஞரும் பத்திரிகையாளருமான டிஷானி டோஷி நிகழ்த்திய உரையாடலிலிருந்து...

இலக்கியத்துக்குப் புரட்சி நல்லது என்று நினைக்கிறீர்களா?

மனித உயிரியக்கத்துக்குப் புரட்சி நல்லது என்றே நினைக்கிறேன். எனவே, இலக்கியத்துக்கும் புரட்சி நல்லதாகத்தான் இருக்க முடியும். அது தீங்கற்ற வெடிப்பு; அதிலிருந்து நன்மை பிறந்தாகத்தான் வேண்டும். ஆனால், கவிதைகள் தவிர வேறு இலக்கிய வடிவங்களில் புரட்சி சார்ந்த அம்சங்களை உடனடியாகப் பார்க்க முடியாது. விஷயங்கள் உள்ளுக்குள் ஊற காலம் பிடிக்கும். எகிப்தில் நடந்த போராட்டம் உடனடியாக சுவரோவியங்களாகவும் இசையாகவும்தான் பிரதிபலித்தது.

தாஹ்ரிரில் 2011 போராட்டத்தின்போது திரண்ட லட்சக்கணக்காணவர்களிடம் இருந்த நம்பிக்கையின் மகத்துவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உயிரோடு இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் இருக்க வேண்டும். போராட்டத்தின்போது உலகமே ஆதரவுக்கரம் நீட்டியது. யாரெல்லாம் அந்தப் போராட்டத்தில் பங்குபெற்றார்களோ அவர்களெல்லாம் அதைத் தங்கள் வாழ்க்கையின் மகத்துவம் மிகுந்த தருணமாகப் போற்றினார்கள். ஆனால், சில மோசமான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்தன. மனிதச் சட்டகத்தால் அவற்றைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒன்றை அடுத்து ஒன்று என மோசமான விஷயங்களை மட்டுமே உங்களால் பார்க்க முடியும்போது ஏதோ ஒன்று நடக்கிறது. அதைத் தொடர்ந்து நீங்கள் உயிர் வாழவும் செய்கிறீர்கள். உங்கள் உணர்வுகளை மழுங்கடிக்கும் விதத்தில் ஏதோ ஒன்று நடக்கத்தான் செய்கிறது.

அருந்ததி ராய் போன்றவர்களின் நாவல் பயணமானது அவர்களது அரசியல் தலையீட்டால் தடைபட்டது. உங்களுக்கு எப்படி?

‘தி மேப் ஆஃப் லவ்’ புத்தகம் 2000-ல் புக்கர் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றபோது திடீரென எனக்கு வெளிச்சம் கிடைத்தது. நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். ஆனால், அரேபியப் பிரச்சினைகள் - குறிப்பாக, பாலஸ்தீன் பிரச்சினைகள் - ஊடகங்களால் எவ்வளவு தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன என்பதை நன்றாக அறிய முடிந்தது. அந்நேரத்தில் மேற்கிலுள்ளவர்களின் அபிப்ராயங்கள் சில மாற்றங்களையும் களத்தின் சூழலில் சில விளைவுகளையும் உண்டாக்கும் என்று நம்பினோம். பாலஸ்தீன் பிரச்சினை என்னைப் பலமாகப் பாதித்தது. அது குறித்து எழுத வேண்டும் என்று நினைத்தேன். பாலஸ்தீன் கிளர்ச்சியின்போது ஒரு வாரம் அங்கே தங்கியிருந்து களநிலவரம் குறித்து எழுதுகிறீர்களா என ‘தி கார்டியன்’ என்னிடம் கேட்டது. நான் எழுதினேன். அந்த அனுபவம் என்னை வேறு எதுவும் செய்ய முடியாத அளவுக்குப் பீடித்துக்கொண்டது. பிறகு, பாலஸ்தீன் இலக்கியத் திருவிழாவை ஏற்பாடு செய்தேன், அடுத்தது எகிப்தியப் போராட்டம்; எனவே, ஒன்று மாற்றி ஒன்று எனத் தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகள், அடுத்தடுத்த உரைகள், நேர்காணல்கள் என 18 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆகவே, இப்போது மறுபடியும் புனைவு பக்கம் போக முயன்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால், களப்போராளியாக என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் என்னளவில் செய்து தீர்த்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், புனைவு பக்கம் திரும்புவது அவ்வளவு சுலபமானது அல்ல. புனைவுக்கென ஒரு பிரத்யேக மனநிலை வேண்டும். இதுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

புனைவுகளில் அரசியல் பிரக்ஞை இருப்பது அவசியமா?

இது மிக முக்கியமான கேள்வி. அரசியல் பிரக்ஞை இல்லாத புத்தகத்தை எழுதுவது குறித்து என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. ஆனால், அதை எப்படிப் படைப்பாக்கப்போகிறோம் என்பதில் சிக்கல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு நாவலில் ஒரு பிரதான பாத்திரமோ அல்லது வாசகர்கள் அக்கறைகொள்ளத்தக்க சில பாத்திரங்களோ இருக்கலாம். அது ஒரு அந்தரங்க வெளியிலிருந்து வர வேண்டும். அரசியல் சார்ந்த விவகாரங்கள் இங்கே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தபோது அது என்னை உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தது. எனக்கென அந்தரங்கமான எந்த வெளியும் இல்லை எனும்படி என்னை வதைத்துக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் மிகப் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகும்போது ஒருவரின் மீது நம் அக்கறை இருக்கப்போவதில்லை இல்லையா? ஆனால், ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றியும் உங்களால் நாவல் எழுத முடியாது என்பதால் அதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்.

நாவலில் தனிமனிதரின் அனுபவம் பிரபஞ்ச அனுபவமாகவே மாறுகிறது. அதனால்தான், நாவல் என்பது அவ்வளவு சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக இருக்கிறது. அதுதான் அதைத் தொடர்ந்து முயன்றுகொண்டிருப்பதற்கான பொதுவான அல்லது அரசியல்ரீதியான நியாயப்பாடு. ஆனால், ஒரு குறிப்பிட்ட கதைக்கு முன்னுரிமை கொடுக்க எது எனக்கு உரிமை தருகிறது என்பதைப் புரிந்துகொள்ள நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். கூடவே, மற்ற விஷயங்களை, அதாவது மேலும் பெரிய விஷயங்களை அதனுடன் சேர்த்து அறிமுகப்படுத்தலாமா என்று முடிவெடுக்கவும் போராடிக்கொண்டிருக்கிறேன்.

எகிப்தின் போராட்டக் காலகட்டத்தில் இலக்கியச் சமூகம் துடிப்புடன் இருந்ததா?

நடந்தவை எதையும் இதுவரை ஜீரணிக்க முடிந்திராத சூழல்தான். நாங்கள் முன்னெப்போதும் இல்லாத அடக்குமுறையை எதிர்கொள்ளும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகவே, இந்தச் சூழலை வைத்து நடப்பதை நாம் புரிந்துகொள்ள முடியுமா என்ன? அரசாங்கமானது கலாச்சார வாழ்க்கையில் ஊடுருவியிருக்கிறது. அவர்களுக்கான பிரச்சார இலக்கியத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டார்கள். திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளுக்காக அவர்களுக்கென கம்பெனிகளை உருவாக்கினார்கள். அதனால்தான், மற்ற எல்லாவற்றையும் இழுத்து மூடினார்கள். எனவே, என்ன நடக்கக்கூடும் என சாத்தியங்களை யூகிப்பது ரொம்பக் கஷ்டம். பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளுக்காகவே மக்கள் கைதுசெய்யப்பட்டார்கள். நீதித் துறையும் ஆளுங்கட்சிக்கு இசைவாகவே செயல்பட்டது. இந்தச் சூழலின் கெடுபிடியில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் எல்லோரும் தங்கள் குமுறல்களை வெள்ளமெனக் கொட்டக்கூடும்.

எட்வர்ட் ஸெய்த்துடன் உங்களுக்கு இருந்த நட்பு குறித்துச் சொல்லுங்களேன்?

1980-களில் இறுதியில் ‘ஓரியென்டலிசம்’ வாசித்தேன். அவரது எழுத்து மிகுந்த பரவசத்துக்கு உள்ளாக்கியது. பிறகு, 1981-ல் அவரை நியூயார்க்கில் என் கணவரோடு சந்தித்தேன். நாங்கள் நல்ல நண்பர்களானோம். அவரைத் தெரிந்துவைத்திருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன். பெருங்கூட்டத்தின் முன் அவர் பேசுவதைக் கேட்பது அலாதியானது. இளைஞர்கள் அவரைக் கொண்டாடினார்கள். அவரது மறைவு உருவாக்கிய வெற்றிடத்தைப் பலரும் ஆத்மார்த்தமாக உணர்ந்தார்கள். எகிப்தில் போராட்டம் நடந்தபோது எட்வர்ட் இங்கே இருந்திருக்க வேண்டும் என விரும்பினார்கள். அவர் எங்களுடன் பேசியிருப்பார்; எங்களுக்காகப் பேசியிருப்பார்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாகத் தமிழில்: த.ராஜன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close