[X] Close

பயணங்களும் பாதைகளும்: 6- அங்கேயும் திருட்டு!


payanangalum-pathaikalum-6

  • kamadenu
  • Posted: 11 May, 2018 11:39 am
  • அ+ அ-

ஒரு தீபாவளி பொழுதில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஷாப்பிங் செய்த அனுபவம் உண்டா? உயரமாகக் கட்டப்பட்டிருக்கும் நாலு கால் டெம்பரரி ஸ்டாண்டுகளில் ஏறி நின்று கொண்டு, வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, கைப்பைகளைக் கவனமாக வைத்துக்கொள்ளவும் ....... என்று உரக்கக் குரல்கொடுத்தபடி உள்ள போலீஸ் தலைகளை பார்க்காமல் இருந்திருக்கமுடியாது.

அப்போதெல்லாம் என் மனதிற்குள் தோன்றும் ஓர் எண்ணம் ‘இந்தத்திருட்டு புத்தி நம் நாட்டின் சாபக்கேடா அல்லது இது மனிதனின் இயற்கை குணமா?’ இதைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்முன் எனக்கு நடந்த இரு சம்பவங்களை உங்கள் முன்னே வைக்கிறேன்.

இரண்டுமே நடந்தது வெளிநாடுகளில் தான். நான் எதையும் சுபமாக முடிக்க நினைப்பவள். அதனால் துயரம் முதலில், நல்லது கடைசியில்.

ஐரோப்பா டூரில், ரோம் நகருக்கு ஒரு இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்தோம். பார்க்க வேண்டியது நிறைய இருந்தாலும், ரோம் புகழ்பெற்ற டூரிஸ்ட் செண்டர் என்பதால் அங்கு பணமும் சற்று அதிகமாகவே தேவைப்படும். 

எனவே பட்ஜெட் விசிட். ஓர் இரவு ப்ளோரன்சிலிருந்து விமானம் மூலம் ரோம் நகரம் சென்றோம். இரண்டு நாட்கள் மட்டும்தான் இருந்ததால் ஒரு டைட் ஷெட்யூலில் பார்க்கவேண்டிய இடங்களைத் தேர்வு செய்து நேர ஒதுக்கீடு செய்தோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நாள் முழுவதும் சுற்றிவிட்டு ஹோட்டல் திரும்புவதற்கு ரயில் நிலையம் சென்றோம். ஐரோப்பாவில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் மிகவும் சுலபம். சொன்ன நேரத்திற்கு பஸ்சோ ட்ரெய்னோ வந்துவிடும். கடைசி ரயில் சேவைக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. இரவு வெளிச்சத்தில் மிக அற்புதமாக இருக்கும் கொலோசியம் என்று கேள்விப்பட்டிருந்ததால், காலையிலேயே பார்த்துவிட்டாலும் இரவிலும் சென்று பார்த்துவிட்டு மறுபடியும் இங்கே வந்து நம் ரயிலைப் பிடித்தால் என்ன என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்ற, உடனே ப்ளாட்ஃபார்ம் மாற்றி கொலோசியம் அருகே செல்லும் ரயிலுக்குக் காத்திருக்கச் சென்றோம். ப்ளாட்ஃபார்மில் சற்றே கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில் வந்தது. முதலில்
இறங்குபவர்களுக்குத்தான் முன் உரிமை. நிறையக் கூட்டம் இறங்கியது. பின் நாங்கள் ஏறத்தொடங்கினோம். நான் முதலில் ஏறிவிட்டேன். பின்னால் என் கணவர். அப்போது ஒரு பெண் என்னைத்தள்ளிய வண்ணம் இத்தாலிய மொழியில் என்னவோ கேட்டுக்கொண்டே வந்தாள். அவள் பின் ஒரு வாலிபன் ஆங்கிலத்தில் இதற்கு முன் ஸ்டேஷனா இது என்றுகேட்க, இவர் பின்னால் இருந்து இல்லை அது போய்விட்டது என்று சொல்ல, இறைவனை மிகுதியாகத் திட்டிக்கொண்டே இருவரும் பின்னால் ஏறிய என் கணவரை சுற்றி நின்றனர்.

இவை நடந்தது ஒரே ஒரு நிமிடம்தான். தானே இயங்கும் கதவுகள் மூட ஆரம்பித்த உடன் விருட்டென்று இருவரும் வெளியே பாய... ஒரு வழியாகச் சமாளித்து நாங்கள் இருவரும் கம்பியை விழாமல் இருக்கப் பிடித்து சுதாரித்தபோது...." என் பர்ஸ். அய்யோ காணும்" இவர் குரல் கொடுப்பதற்கும் ரயில் மெதுவாக வேகம் எடுக்கத்தொடங்க....
எங்களுக்குப்புரிந்து விட்டது என்ன நடந்திருக்கும் என்று. உடனே ஸ்டாப் பட்டனை அழுத்த....கிரீச்சிட்டு வண்டி மெதுவாக அசைந்து நிற்க, நாங்கள் கதவைத்திதந்து கொண்டு ப்ளாட்ஃபார்மின் அந்தக் கோடியில் குதித்து இறங்கி வேகமாக நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தால். காலி...துடைத்துப்போட்டார் போல் இருந்தது அந்த இடம். அவசரமாக ஃபுட் பிரிட்ஜ் ஏறி எல்லாத் திசையும் சென்று பார்த்தோம். அவர்கள் கண்களில் படவே இல்லை.


இப்போது ஜெர்மனியில் நடந்த ஒரு அனுபவத்தைச்சொல்கிறேன்.

நான் சென்றிருந்தது ஒரு கிறிஸ்துமஸ் காலத்தில். விடுமுறை தினங்களில் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர அதிரடி விற்பனை விலை குறிப்புக்கள் எல்லாக் கடை வாசல்களிலும் நியானில் பல பளத்தது.நாங்களும் கடை ஒன்றில் நுழைந்தோம். அது ஒரு பிரபலமான துணிக்கடை. இங்கே ஒன்றை முக்கியமாகச் சொல்கிறேன். நம் ஊர் போல் இங்கே வெளிநாடுகளில் உள்ளாடைகள் போட்டுப்பார்பதற்கு தடை கிடையாது. அதனால் இங்கே என்ன உடை வாங்கினாலும் அதைத் துவைத்த பின் போட்டுக்கொள்வது நல்லது.

சரி விஷயத்திற்கு வருகிறேன். கைகள் நிறைய உடைகளை எடுத்துக்கொண்டு ட்ரயல் ரூம் சென்று போட்டுப்பார்த்து, பில் போட்டு வாங்கிக்கொண்டு ட்யூபில் ஏறிப் பாதி தொலைவு வந்துவிட்டோம்.
அப்போது தான் கூட வந்தவர் ,அய்யோ என்று ஒரு உச்ச ஸ்தாயிக்குரல் கொடுக்க , திகைத்துப்பார்த்தேன்.
" கைப்பை...கைப்பை....அதற்கு மேல் அவருக்குப்பேச வரவில்லை.
மெதுவாக அவரைச் சமாதானப்படுத்தி நான் தெரிந்து கொண்டது, உடை போட்டுப்பார்க்கும் ட்ரயல் ரூமிலேயே அவர் கைப்பையை விட்டு விட்டு வந்தது.

உடனே அடுத்த ஸ்டாபில் இறங்கி ,எதிர்த் திசை ட்யூபில் ஏறி அந்தப்பெரிய துணிக்கடை செயினுக்கு சென்றோம். இருவருக்கும் நிச்சயமாகத்தெரியும் கை பை அங்கே இருக்காது என்று. இருந்தும் எஸ்ஜகேடரில் ஏறி நான்காவது மாடிக்குச்சென்று , பெரிய லைனில் பில் போட நின்றவர்கள் அனைவரையும் ஒரு சந்தேகக்கண் கொண்டு பார்த்தபடி ட்ரயல் ரூமிற்குச்சென்று பார்த்தால்...

கைப்பை வைத்தது வைத்தபடி அதே இடத்தில் சமர்த்தாக அமர்ந்திருந்தது.
ஆக எனக்கு அப்போதுதான் புரிந்தது. திருட்டு என்பது பணத்தேவைக்காக மட்டும் நடப்பதில்லை.நம்மில் பல பேர் கீழே கிடக்கும் பத்து ரூபாயை யாரும் பார்க்காத போது பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு விடுகிறோம். இதுவும் ஒரு வகை திருட்டுதான். அதனால் மற்றவர் பொருள் நமக்குத்தேவை இல்லை எனும் உணர்வை , நம்பிக்கையை எந்தத் தேசத்தில் மிக நேர்த்தியாக மக்கள் மனதில் பதிய வைக்க முடிகிறதோ, அந்தத் தேசமே பெருமைக்குரியது.

- லதா ரகுநாதன்

தொடர்புக்கு: lrassociates@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close