[X] Close

சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவில் பொம்மலாட்ட நாடகம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 07:18 am
  • அ+ அ-

சிங்கப்பூர் தகவல் தொடர்பு மற்றும் கலை அமைச்சகத்தின் சார்பில், ‘திருமுறை கண்ட சோழன்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ் நிலைய அரங்கத்தில் பொம்மலாட்ட நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

சிங்கப்பூர் தகவல் தொடர்பு மற்றும் கலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், ‘வளர் தமிழ் இயக்கம்’ கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் தமிழ் மொழி விழாவை நடத்தி வருகிறது. இந்தாண்டு மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கிய இந்த விழா, ஏப்ரல் கடைசி வாரம் வரை நடைபெறவுள்ளது.

தமிழ் மொழியின் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் நடத்தப்படும் இந்த விழாவில், மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, பாட்டு, நாடகம், நடனம், விவாதப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இணையத்தில் தமிழ், சிங்கப்பூர் தமிழ் அறிஞர் ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி போன்ற தலைப்புகளில் கருத்தரங்கும், பட்டிமன்றமும் நடைபெறவுள்ளன.

விழாவின் ஒரு பகுதியாக கும்பகோணம் ஸ்ரீமுருகன் சங்கீத பொம்மலாட்டக் குழுவினரின் ‘திருமுறை கண்ட சோழன்’ பொம்மலாட்ட நாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகத்தை மாணவர்களே உருவாக்கியிருந்தனர். அதை பொம்மலாட்டக் கலைஞர்கள் நாடகமாக நிகழ்த்தி காட்டினர். முன்னதாக அரங்க அமைப்பு, கலை, பின்னணிக் குரல், இசை, பாட்டு, பொம்மைகள் வடிவமைப்பு என அதன் பல்வேறு நிலைகளும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது.

சோழ மன்னர் ராஜராஜ சோழன் , தில்லையில் தேவார ஏடுகளைக் கண்டறிந்த கதைதான், ‘திருமுறை கண்ட சோழன்’. இந்தக் கதையை நவீனக் கோமாளி அறிமுகம் செய்து வைப்பதுடன் பொம்மலாட்டம் தொடங்கியது. கோயில் மண்டபமும் அரசவையும் இதில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. வசனம், இசை, பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன. பொம்மைகள் வடிவமைப்பும் உடைகளும் அனைவரின் கவனத்தைக் கவரும் வகையில் இருந்தன. இந்நிகழ்ச்சியை ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இதன் மூலம் பொம்மலாட்ட கலை, தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை அவர்கள் பெற்றனர்.

உமறுப் புலவர் தமிழ் நிலைய அரங்கத்தில், ‘தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் இன்று பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. நாளை ‘தமிழ்க் கணிமையில் கட்டற்ற மென்பொருட்கள் இருப்பதற்கான சாத்தியம்’ பற்றிய கலந்துரையாடல் சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெறுகிறது. ‘தமிழ் மொழி விழா’ வரும் 28-ம் தேதி உமறுப் புலவர் தமிழ் நிலையத்தில் நடைபெறவுள்ள ‘கவி மாலை’ நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close