[X] Close

காயமே இது மெய்யடா 28: செவிக்கும் ஓய்வு தேவை


28

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 13:08 pm
  • அ+ அ-

-போப்பு

காது மடல்கள் வடிவத்தில் சிறுநீரகத்தைப் போல இருந்தாலும், அவை முகத்தின் மினியேச்சர் எனலாம். உணர்வு வெளிப்பாட்டின் உச்சத்தில் காதுமடல்கள் துடிப்பதையும் நிறம் மாறுவதையும் அதிர்வு ஏற்படுவதை யும் நம்மால் துல்லியமாக உணர முடியும். க

காதுகளின் நுட்ப உணர்வைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே முகத் தின் மென்மையையும் உயிர்ப்பான பொலிவையும் பாதுகாக்க முடியும்.

நுரையீரலுக்கும் காதுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நெற்றிப் பொட்டிலிருந்து இறங்கி மூக்கு தொடங்கும் பாகத்தின் அடிப்பகுதிவரை உள்ள பகுதி காதுடன் நேரடியாகப் பிணைப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள காற்று நமது குரலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அந்தக் காற்றின் அதிர்வுதான் நமது குரலை நமக்கு உணர்த்துகிறது.

நாம் பேசும்போது நமக்குக் கேட்கும் குரலும், நமது பேச்சைப் பதிவுசெய்து கேட்கும் குரலும் ஒன்றாக இருப்பதில்லை. காரணம் மூக்கின் அடிப்பகுதிக்கும் காதுக்கும் இடையில் இருக்கும் காற்றும் நமது குரலின் அதிர்வைப் பதிந்துகொள்கிற காற்றும் வேறு வேறு.

வெப்ப சமனி

சிறுநீரகம் உடலின் வெப்பச் சமநிலையைப் பாதுகாப்பதைப் போலவே காதுகளும் தம்மளவில் தமது வெப்பச் சமநிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றன. உடலில், நுரையீரலில் சளி மிகுந்திருக்கும்போது காதுகளில் அவ்வப்போது அடைத்துக்கொள்வது போன்ற உணர்வு இருக்கும்.

உள்ளும் சளி மிகுந்து வெளியிலும் குளிர்ச்சி மிகுந்திருக்குமானால் குறிப்பாகக் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்குமானால் உடலின் வெப்பத்தைத் தக்கவைக்க நாம் காதுகளில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது. அதேநேரம் குளிர் காலத்தில் காதுகளின் மெல்லிய நரம்புகளையும் மென் எலும்புகளையும் அழுத்தும் வண்ணம் நவீனக் காது அடைப்பான்களைக் கொண்டு காதுகளை இறுக்கி அடைக்கக் கூடாது.

இது காதுகளின் மென்னுணர்வைச் சிதைப்பதோடு ஒட்டு மொத்தமாக உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்தக் கவனம் ஹெல்மெட் அணியும் போதும் நமக்கு இருக்க வேண்டும்.

காதுகளைப் பாதுகாக்கச் சிறுநீரகத்தைப் பாதுகாக்க வேண்டும். சிறுநீரகத்தைப் பாதுகாக்க உடலை எப்போதும் வெப்பச் சமநிலை கெடாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், நுரையீரலில் சளி சேராத வகையிலும் சொல் வழக்கில் வாயு என்று சொல்லப்படும் கெட்ட காற்று உடலில் தேங்காதபடியும் நமது வாழ்வையும் உணவு முறையையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஒலியைக் குறைப்போம்

காதுக்குள் ஒலிப்பானைச் சொருகி நீண்ட நேரம் பாட்டுக் கேட்பது செவிப்பறையையும் காது எலும்புகளையும் நுண் நரம்புகளையும் பாதிப்பதோடு காதுகள் வழியாகச் செல்லும் நரம்புகளையும் கடுமையாகப் பாதிக்கும்.

 செல்போனில் பேசவும் பாட்டுக் கேட்கவும் தொடர்ந்து ஹெட்போனைப் பயன்படுத்தும் போது பாதிப்புறும் செவிப்பறை, மிக எளிதில் பழைய நிலைக்கு மீண்டுவிடும். ஆனால், பாதிப்புக்கு உள்ளாகும் காதின் உட்பகுதி நரம்புகளும் எலும்புகளும் நிரந்தரமான பாதிப்புக்கு உள்ளாக நேரும். நாம் கண்களை மூடித் தூங்கும்போது அனைத்து உறுப்புகளும் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுகின்றன.

ஆனால், காதுகளுக்கு ஓய்வு என்பதே கிடையாது. அது நாம் தூங்கும்போதும் புறச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். வீட்டில் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் ஒலியை முடிந்த அளவு குறைவாக வைத்துக் கொள்வதே காதுகளின் பாதுகாப்புக்கு உகந்தது.

முகத்தின் பொலிவு

அன்றாடம் காலை ஆறு மணிக்கு முன்னர் பத்து நிமிடங்களாவது தளர்வாகக் கிடந்த நிலையில் மூச்சை நிதானமாக இழுத்துவிட்டு சுவாசப் பாதையைச் சரளமான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் சம்மணமிட்டு அமர்ந்து சுவாசத்தை நிதானமாக இழுத்து விட வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் முதுகுத் தண்டுப் பகுதிக்கும் மூளைப் பகுதிக்கும் தூய காற்று முழுமையாகச் செல்லும். சிறுநீரகத்தின் செயல்திறனும் கூடும். முகத்தில் பொலிவும் பெருகும்.  

அடுத்து சிறுநீரகத்தின் துணை உறுப்பாகிய சிறுநீரகப் பை குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close