[X] Close

வானகமே இளவெயிலே மரச்செறிவே 26: கிளிகளின் தேசம்


26

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 13:09 pm
  • அ+ அ-

-சு. தியடோர் பாஸ்கரன்

நீலவானப் பின்புலத்தில் பனித்திவலைகள் மிதந்து வருவதைப் போன்ற தோற்றம். இருநோக்கியில் பார்த்தபோது அது வெள்ளை நிறக்கிளிகளின் திரள் என்பது புலப்பட்டது. எந்தப் பறவையும் இவ்வளவு மெதுவாகப் பறந்து, நான் பார்த்ததில்லை.

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஒரு குன்றின் மீதிருந்த விடுதி ஒன்றில் அப்போதுதான் நுழைந்திருந்தோம். எங்கள் அறையின் உப்பரிகையிலிருந்து இந்தப் பறவைக் கூட்டத்தைப் பார்த்தேன்.

அந்த நாட்டில் எல்லாப் பூங்காக்களிலும் பல வகைக் கிளிகளைக் காண முடிந்தது. வீட்டைச் சுற்றிலும் உள்ள தோட்டங்களிலும் வெவ்வேறு இனக் கிளிகள் இருக்கும். சரணாலயங்களில் கேட்கவே வேண்டாம். இளஞ்சிவப்பு வண்ணக் காலா கிளியைப் பெருங்கூட்டமாகக் காணலாம். அடிக்கடி பார்க்கக்கூடிய வகை காக்கட்டூ எனும் வெள்ளை வண்ணக் கிளி.

நம்மூர் கொண்டைலாத்தியைப் போல் தனது மஞ்சள் நிறக் கொண்டையை அவ்வப்போது விரித்து மூடுவது இதன் பழக்கம். இதுவும் தரையில் இரைதேடும் இயல்பு கொண்டது. கறுப்புக் கிளி, சிவப்புக் கிளி எனப் பலநிறக் கிளிகள் இங்கு உண்டு.

சிறு மைனா அளவிலிருந்து கழுகு அளவுள்ள பெரிய கிளிகளும் உண்டு. இங்கு வாழும் பனைமரக் கிளி என்று அறியப்படும் கறுப்பு நிறக் கிளிதான் உருவில் பெரியது. கூட்டமாகக் குரல் எழுப்பியவாறே பறக்கும்.

கூண்டு சித்திரவதை

பறவை உலகில் கிளிகளுக்கு ஓர் அரிய குணம் உண்டு. கூட்டம் கூட்டமாக மரங்களில் அடைந்தாலும், இனப் பெருக்கம் ஒரே துணையுடன்தான் இருக்கும். எல்லாக் கிளிகளுமே மரப்பொந்துகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. பழ வகைகள், கொட்டைகள் ஆகியவற்றை இரையாகக் கொள்ளும்.

கொட்டைகளை உடைத்து உண்பதற்கேற்ப இவற்றுக்கு அலகுகள் உறுதியாக அமைந்துள்ளன. அது மட்டுமல்ல; மற்ற பறவைகள்போல் அல்லாமல் கிளியின் மேல் அலகு, மண்டையோட்டோடு சேராமல் தனியாக மேலும் கீழும் அசையும்படி அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 12 வகைக் கிளிகளில், எல்லாமே பச்சை வண்ணம் கொண்டவைதான். தமிழகத்துப் பச்சைக்கிளி, இலக்கியத்தில் செந்தார்ப் பைங்கிளி என்று குறிப்பிடப்படுகிறது என்கிறார் புலவர் க. ரத்னம். நல்லவேளையாகக் கிளிகளைக் கூண்டிலடைத்து வளர்க்கும் பழக்கம் குறைந்து வருகிறது. மனிதருக்குத் தனிச்சிறை போல், நாயைக் கட்டி வைத்து வளர்ப்பதுபோல் இதுவும் ஒரு சித்திரவதைதான்.

“கூண்டுக்கிளியினைப்போல் தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்” என்று பாரதி எழுதினார். எந்தப் பறவையையுமே கூண்டில் அடைத்து வளர்க்கக் கூடாது. அது கொடுமை மட்டுமல்ல, 1972ம் ஆண்டு காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் நம் நாட்டில் அது சட்ட விரோதமானதும்கூட. இந்த விதி கிளி ஜோசியத்துக்கும் பொருந்தும்.

இந்தியாவில் 25 ஆஸ்திரேலிய வகைகள் லவ் பேர்ட்ஸ் என்று பல்வேறு கடைகளில் விற்கிறார்களே, அதை வளர்க்கக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆஸ்திரேலிவில் வாழும் பட்ஜரிகர் என்ற இந்தச் சிறிய கிளி பல ஆண்டுகளுக்கு முன்னரே பல நாடுகளுக்கும் வணிகரீதியாகப் பரவிவிட்டது.

கூண்டுப் பறவையாக உலகிலேயே அதிகமாக வளர்க்கப்படும் புள்ளினம் இது. பிரச்சினை என்னவென்றால் இந்தியக் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் நமது நாட்டு உயிரினங்களை மட்டுமே பாதுகாக்கிறது. வெளிநாட்டுப் பறவைகள் அதன் வீச்சுக்குள் வராததால், சட்டப் பிரச்சினையில்லாமல் அவற்றை வளர்க்கவும் விற்கவும் முடிகிறது.

அரிய உயிரினங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க CITES (Convention of International Trade in Endangered Species of Wild flora and fauna) என்று அறியப்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் செயல்படுகிறது. 183 நாடுகள் இணைந்திருக்கும் இந்த அமைப்பில் இந்தியாவும் ஓர் அங்கம். இதில் சிக்கல் என்னவென்றால் நம் நாட்டுக்குள் ஓர் உயிரினம் கடத்திக்கொண்டு வரப்படுவதைத் தடுக்க முடியும். ஆனால், உள்நாட்டில் விற்பனையைத் தடுக்க முடியாது. ஏனென்றால் “இப்பறவை காப்பிட இனப்பெருக்கத்தில் தோன்றியது” என்பார்கள். சில கடைகளில் சான்றிதழும் கொடுப்பார்கள். சட்டத்தில் உள்ள இந்த ஓட்டை மூலம்தான் எல்லாச் செல்லப்பிராணி வணிகர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் 25 ஆஸ்திரேலியக் கிளி வகைகள் விற்கப்படுகின்றன என்று ஒரு மதிப்பாய்வு கூறுகிறது.

அழிவில் பங்கேற்கிறோம்

எந்தக் காட்டுயிரினத்தையும் நாம் வீட்டில் வளர்க்க முடியாது. அது சட்டத்துக்குப் புறம்பானது. இப்போது உயிரினக் காட்சியகங்களுக்கு எதிராகக்கூட ஓர் இயக்கம் பல நாடுகளில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

காப்பிட இனப்பெருக்கம் செய்யப்பட்ட உயிரினங்களை மட்டும்தான் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும். காட்டுயிர்களை வாங்கி வளர்க்கக் கூடாது என்ற சட்டம் சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நம் நாட்டுச் சட்டம்தான் தடுக்கவில்லையே என்று வெளிநாட்டுக் காட்டுயிர்களை வாங்கினால், ஏதோ ஒரு ஏழை நாட்டில் அவை அழிவதற்கு நாமும் பங்காற்றுகிறோம் என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

சந்தைக்கு வரும் ஒவ்வொரு பறவைக்குப் பின்னாலும் குறைந்தது ஒன்பது பறவைகளாவது உயிரிழந்திருக்கும். அதாவது பத்தில் ஒன்றுதான் பிழைக்கிறது. மரங்களின் ஆழமான பொந்துகளில் அடைகாத்து குஞ்சு பொரிக்கும் பறவைகளைப் பிடிக்க மரத்தையே திருட்டுத்தனமாக வெட்டி விடுகிறார்கள்.

திருட்டுச் சந்தை

தென்னமெரிக்காவைச் சேர்ந்த பஞ்சவர்ணக்கிளி என்றறியப்படும் மக்காவ் (Macaw), ஆஸ்திரேலியாவிலிருந்து மஞ்சள்கொண்டை காக்கட்டூ (Sulphur crested Cockatoo) எனும் கிளி, ஆப்பிரிகாவில் வாழும் அரிதான சாம்பல் வண்ணக் கிளி (Grey Parrot) ஆகியவற்றுக்குப் பன்னாட்டுச் சந்தையில் ஏகக் கிராக்கி.

ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு இவை விற்கப்படுகின்றன. சாம்பல் கிளிதான் பேசும் கிளி எனப்படும் உலகப் புகழ்பெற்ற புள்ளினம்.

காட்டுயிர்கள் அற்றுப்போவதற்கு வாழிட அழிப்புக்கு அடுத்தபடியாகச் செல்லப்பிராணி வாணிபம்தான் (pet trade) முக்கியக் காரணம். இது உலகெங்கும் பரவியுள்ள திருட்டுச் சந்தை. எந்தக் காட்டுயிரும் செல்லப்பிராணியாக வளர்க்கத் தகுதியற்றது என்று தெரிந்திருந்தாலும், அதை வைத்திருப்பதைச் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள்.

 போர்னியோ காடுகளில் வாழும் வாலில்லாக் குரங்கான உராங்ஊத்தன் போன்ற அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் உயிரினங்கள்கூடக் கடத்தப்படுகின்றன. இதில் குட்டியைப் பிடிக்கத் தாய்க்குரங்கு கொல்லப்படுகிறது.

உலகிலுள்ள 332 வகைக் கிளிகளில் 55 ஆஸ்திரேலியாவில் உண்டு. அதனால்தான் இந்நாடு கிளிகள் தேசம் என்றறியப்படுகிறது. இத்தனை வண்ணங்கள் கொண்ட கிளிகள் பரிணாம வழியில் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு உயிரியலாளர்களின் பதில்: இனப்பெருக்கக் காலத்தில் அடையாளக் குழப்பம் ஏற்படாமல் இருக்க இயற்கை உருவாக்கிய ஏற்பாடு இது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close