[X] Close

துயரத்தைப் பருகும் பெண்களின் கதைகள்!


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:31 am
  • அ+ அ-

-சுப்பிரமணி இரமேஷ்

நீலம் பூக்கும் திருமடம்

ஜா.தீபா

யாவரும் பதிப்பகம்

வேளச்சேரி, சென்னை-42.

விலை: ரூ.75

தொடர்புக்கு: 90424 61472

சமகாலத்தில் பெரும்பாலான பெண் படைப்பாளிகளின் தேர்வுகள் கவிதையின் பக்கம் இருக்கின்றன. புனைகதையின்பால் தங்களைத் திருப்பிக்கொண்ட பெண்களில் நம்பிக்கை தரும் படைப்பாளியாக வலம்வருகிறார் ஜா.தீபா. ஊடகவியலாளராகவும், சினிமாத் துறையில் தீவிரமாக இயங்கிவருபவருமான தீபா, இதுவரை சினிமா தொடர்பாக ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ‘நீலம் பூக்கும் திருமடம்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளையும் இணைக்கும் கண்ணியாக வாழ்க்கை மீது நம்பிக்கை இழக்காத பெண்கள் இருக்கிறார்கள். பெண்களின் அகவுலகம்தான் தீபாவின் புனைவுலகம். பெண்கள் தொடர்பான தீவிரமான உரையாடல்களுக்குப் பிறகும் தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளைத்தான் இவரது கதைகள் பேசுகின்றன. பெண்களை இச்சமூகம் எப்படி அணுகிக்கொண்டிருக்கிறது எனும் உரையாடலைக் கதைகளினூடாக நிகழ்த்துகிறார். மொழியைக் கூர்மையாகப் பயன்படுத்துகிறார். புனைவு குறித்த தீர்க்கமான பார்வையிலிருந்து கதைகள் உருவாகியிருக்கின்றன. எதைச் சொல்ல வேண்டும், எங்கே மௌனம் காக்க வேண்டும் என்பதிலும் அவரது அக்கறை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

மகாபாரதம் நிறைய எழுதுவதற்கு இடமளிக்கும் நெகிழ்வுத்தன்மையுள்ள பிரதி. தங்களின் சுயகௌரவத்தை நிலைநாட்டுவதற்காகப் பெண்களை ஆண்கள் பகடைகளாக உருட்டினார்கள். அதில் சகுனியின் பகடைதான் காந்தாரி. பார்வையற்ற திருதராஷ்டிரனுக்குத் தன் தங்கையைக் கொடுக்க அவன் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. துரியோதனனின் கௌரவத்தை நிலைநிறுத்துவதற்காகக் காலத்தின் கறைபட்ட பழிகளைத் தேடிக்கொள்கிறாள் காந்தாரி. அவள் தன் தேசத்தில் எவ்வளவு மென்மையுடையவளாக இருந்தாள்; சக உயிர்கள் மீது எவ்வளவு கருணை கொண்டிருந்தாள். அவளது இருப்பு திருமணத்துக்குப் பிறகு என்னவானது? புராணம் காலம் தொட்டு தற்காலம் வரையிலான பெண்கள் குறித்த சமூக உரையாடலை ஒரு விவாதத்துக்குள் எடுத்துச்செல்கிறார் தீபா.

தீபாவின் கதைகள் பெண்களுக்காக நியாயம் கேட்கவில்லை, இரக்கம் வேண்டி நிற்கவில்லை; இச்சமூகம் காலந்தோறும் பெண்களை இப்படித்தான் நடத்திவந்திருக்கிறது என்பதை அதிர்வுகள் கூட்டாத மொழியில் சொல்லியிருக்கிறார். அண்ணனை நம்பிய காந்தாரி, மகன்களை நம்பிய நாகம்மை, ஆசிரியரை நம்பிய சிவகாமி, கணவனை நம்பிய நீலா எனப் பலரும் அவர்களது நம்பிக்கைகளாலேயெ வீழ்த்தப்படுகிறார்கள். அதிர்ந்து பேசாத இப்பெண்கள், தாங்கள் வீழ்த்தப்பட்ட பின்னும் உறவுகள் மீது கொண்ட இறுக்கத்தை தளர விடவில்லை.

பெண்களை சமூகம் நடத்திய விதத்தைத்தான் தீபா விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார். உறவுகளின் சிதைந்த மனநிலையைப் பகடிசெய்கிறார். நெல்லை மொழி சில கதைகளில் வட்டார அடையாளம் இல்லாமல் வெளிப்பட்டிருக்கிறது. இவரது புனைவுகள் அடுத்தடுத்து நில அடையாளத்தையும் நோக்கி நகரும்போது இன்னும் கூடுதல் நெருக்கம் உடையதாகும்.

இழப்புக்குப் பிறகும் வாழ்க்கையைப் நேசிப்பதற்கு இவரது பெண்கள் பழகியிருக்கிறார்கள். மரம், செடிகொடிகளையும் சக உயிர்களாகக் கருதி வாழும் பெண்கள் இறுதியில் பருகுவது துயரத்தின் சாறைத்தான். நவீன வாழ்க்கைமுறை மனிதர்களிடம் மிச்சமிருக்கும் ஈரத்தைத்தான் முதலில் கவ்விக்கொள்கிறது. மனிதர்களின் ஆசை முதலில் பெண்களைத்தான் பலி கேட்கிறது. புகுந்தவீடு செல்லும் பெண்களுக்கு ஆந்தையைக் குறியீடாக்கியதில்கூட தீபாவுக்கு உறவுகள் மீது வெறுப்பு இல்லை; பரிதாபமே மிஞ்சியிருக்கிறது.

‘குருபீடம்’ கதையின் நவீனத் தன்மை முக்கியமானதாகப் படுகிறது. ஆசிரியருக்கென்று ஒரு பீடம் உண்டு. அது தங்கத்தாலானது. அந்த பிம்பம் செதில் செதிலாக உடைந்து நொறுங்கும்போதுகூட வெற்றிபெற்றதாக சிவகாமி கருதவில்லை. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற துயரத்தின் சாயைதான் அவளது பேச்சில் வெளிப்படுகிறது. தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ ஆசிரியர்களுக்குப் பெருமையைக் கூட்டியது. ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ குருவைப் புனிதத்திலிருந்து விடுவிக்க முயன்றது. தீபாவின் குருபீடத்தில் வரும் மாறன் வாத்தியார்கள் இன்று வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை கல்விப் புலத்தில் நடந்துகொண்டுதான் இருந்திருக்க வேண்டும். அதைப் பொதுவில் நிறுத்தியிருப்பதுதான் நவீனத்தின் சிறப்பு.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close