[X] Close

இதுதான் இந்த தொகுதி: மத்திய சென்னை


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:26 am
  • அ+ அ-

-டி.செல்வகுமார்

சென்னை உயர் நீதிமன்றம், அரசு தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா கடற்கரை, தெற்கு ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனையான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, எழும்பூர், எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது மத்திய சென்னை. இத்தொகுதியில் எழும்பூர் (தனி), வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: தொகுதியின் பல பகுதிகளில் பாதசாரிகளுக்கான நடைபாதைகள், அந்தப் பகுதியில் உள்ளவர்களின் கார் நிறுத்தமாகவும், ஆட்டோ நிறுத்தமாகவும், கடைகளின் விற்பனைப் பொருட்களைப் பரப்பி வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குத் தீர்வு காண்பது அவசியத் தேவையாக பார்க்கப்படுகிறது.

எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது தொடர்கதையாக உள்ளது. கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்தி, ஆற்றைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாகக் கூறும் அரசு, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் ஓட்டத்தை சீராக்கினால்தான் கொசுத் தொல்லை குறையும்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்சினையாக இருந்துவருகிறது. எழும்பூர் ரயில் நிலையம், எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதற்கேற்ப அப்பகுதிகளில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பதும் பெருங்குறையாக உள்ளது. போதிய எண்ணிக்கையில் சுரங்கப் பாதை, நடைமேம்பாலங்கள் இல்லாததால் ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் இணைக்கும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது.

ஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முரசொலி மாறனும் அவரது மகன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர்களாக இருந்ததால் மத்திய அமைச்சரை உருவாக்கும்  ‘விஐபி தொகுதி’ என்ற பெயர் இத்தொகுதிக்கு உண்டு.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: மத்திய சென்னை தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் கணிசமாக உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள், படித்தவர்கள் அதிகம் உள்ளனர். எனவே, இத்தொகுதியில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் அரசியல் நிலையைப் பொறுத்தே வாக்குகள் கிடைக்கும்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்:   1977 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதி உருவாக்கப்பட்டது. திமுக அதிகபட்சமாக 7 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

களம் காணும் வேட்பாளர்கள்:

தயாநிதி மாறன் – திமுக

எஸ்.ஆர்.சாம் பால் – பாமக

கமீலா நாசர் – மக்கள் நீதி மய்யம்

கார்த்திகேயன் – நாம் தமிழர் கட்சி

தெஹ்லான் பாகவி - எஸ்டிபிஐ.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 13,32,135

ஆண்கள் 6,60,447

மூன்றாம் பாலினத்தவர்கள் 354

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close