[X] Close

இதுதான் இந்தத் தொகுதி: வேலூர்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:32 am
  • அ+ அ-

வி.செந்தில்குமார்

பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள் கட்டுப்பாட்டில் இருந்த வேலூர் நகரம், விஜயநகரப் பேரரசு காலத்தில் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. 16-ம் நூற்றாண்டில் பொம்ம நாயக்கர் ஆட்சியில் ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் அகழியுடன் கூடிய கோட்டை கட்டப்பட்டது. 1806-ம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் சுதந்திரப் போராட்டமாகக் கருதப்படுகிறது. ஆசியாவிலே மிகப் பெரிய தொலைநோக்குக் கருவியைக் கொண்டுள்ள வைனுபாப்பு கோள் ஆராய்ச்சி நிலையம், சிஎம்சி மருத்துவமனை, தங்கக் கோயில் உள்ளிட்டவை தொகுதியின் அடையாளங்கள். வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது வேலூர் மக்களவைத் தொகுதி.

பொருளாதாரத்தின்  திசை: பாலாற்றை நம்பி தென்னை, கரும்பு, வாழை, நெல், நிலக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. தீப்பெட்டி, பீடி தொழிலுடன் கணிசமான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் காலணி தயாரிப்புத் தொழிலும் வேலூர் தொகுதியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய தோல் ஏற்றுமதியில் வேலூர் தொகுதியின் பங்கு 20%. கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு கைத்தறி லுங்கி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி) தொகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைத்தல், வன விலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு உரிய நிவாரணம், யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுப்பது, சாலை வசதி, முறையான மருத்துவ வசதி உள்ளிட்டவை தீர்மானிக்கும் பிரச்சினைகள். குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படாததால் பல இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பாலாற்றின் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்படும். தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை வட தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். தோல் கழிவுகளால் மாசடைந்த நிலத்தைச் சீரமைத்து விவசாய பயன்பாடுக்கு வழங்க

வேண்டும். பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டித் தொழிலுக்கான வரிக் குறைப்பு, கைத்தறி லுங்கிக்கான ஜிஎஸ்டி வரி 5%-ஐ முற்றிலும் நீக்குதல் நீண்டகால கோரிக்கைகள்.

ஒரு சுவாரஸ்யம்: கடந்த 1951-ம் ஆண்டு முதல், தேர்தலை சந்தித்துவரும் வேலூர் தொகுதியிலிருந்து பாமக சார்பில் வெற்றிபெற்ற என்.டி.சண்முகம் மட்டுமே மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர்கள் 20%, முதலியார்கள் 14%, நாயுடு 7%, பட்டியலின மக்கள் 19% உள்ளனர்.  வன்னியர் வாக்குகளும், பட்டியலின மக்களின் வாக்குகளும் கட்சி ரீதியாகப் பிரிந்துகிடக்கின்றன. இந்த வாக்குகளுடன் சேர்ந்து, முஸ்லிம் வாக்கு வங்கி வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக உள்ளது.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: காங்கிரஸ், திமுக தலா 5 முறையும், அதிமுக, பாமக தலா 2 முறையும் இந்திரா காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக தலா  ஒருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

களம் காணும் வேட்பாளர்கள்: கதிர் ஆனந்த் – திமுக,  ஏ.சி.சண்முகம் – புதிய நீதிக்கட்சி, சுரேஷ் – மக்கள் நீதி மய்யம், பாண்டுரங்கன் - அமமுக.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,07,817

ஆண்கள் 6,90,154

பெண்கள் 7,17,581

மூன்றாம் பாலினத்தவர்கள் 82

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 70 %

முஸ்லிம்கள்: 21 %

கிறிஸ்தவர்கள்: 9 %

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 85.30 %

ஆண்கள் 88.22 %

பெண்கள் 82.38 %

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close