[X] Close

இதுதான் இந்தத் தொகுதி: தேனி


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:28 am
  • அ+ அ-

-என்.கணேஷ்ராஜ்

தேனி தொகுதி ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள் நிறைந்த பகுதி. வைகை, முல்லைப் பெரியாறு, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட நீராதாரங்கள் இத்தொகுதியின் அடையாளம். குச்சனூர் சனீஸ்வரன், வீரபாண்டி கவுமாரியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன், சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உள்ளிட்ட பழமையான கோயில்களும் இங்கு அதிகம். கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி குளிர்ச்சிக்கும், இதமான பருவநிலைக்கும் பெயர் பெற்றது. இத்தொகுதியில் பெரியகுளம்(தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம், சோழவந்தான், உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

பொருளாதாரத்தின் திசை: விவசாயமே இங்கு பிரதான தொழில். சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், விவசாயம் தொடர்பான தொழில்கள் அடுத்தபடியாக அதிகளவில் உள்ளன.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: ஆண்டின் பல மாதங்கள் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் தொடர்ந்து குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. சோத்துப்பாறை, வைகை அணை ஆகியவற்றைத் தூர்வாருதல், விவசாய மற்றும் சுற்றுலாத் தல மேம்பாடு, வேலைவாய்ப்பு இல்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்குத் தீர்வு, புறவழிச்சாலை, புதைசாக்கடை உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் சிறுதொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நியூட்ரினோ திட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

நீண்ட காலக் கோரிக்கைகள்: பெரியாறு அணையில் 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். வைகை அணையைத் தூர்வாரி தண்ணீர் இருப்பை அதிகரிக்க வேண்டும். முல்லை, வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாப்பது, திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் ஆகியவை நீண்டகால கனவுகள். திராட்சை, மாம்பழம் இருப்பு வைக்கவும், மதிப்புக்

கூட்டுப் பொருட்களாக மாற்றவும் குளிர்பதன கிட்டங்கிகளும் தொழிற் சாலைகளும் அமைக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.

ஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி எம்ஜிஆர், ஜெயலலிதா என்று இரண்டு முதல்வர்களைத் தந்துள்ளது. 1984-ல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆரை வெற்றிபெற வைத்த தொகுதி ஆண்டிபட்டி. அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் போடி தொகுதியில் வெற்றிபெற்று முதல்வர் நிலைக்கு உயர்ந்தார். நடிகர் எஸ்எஸ்ஆர், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரும் இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இங்கு முக்குலத்தோர் அதிகம். அடுத்து சிறுபான்மையினர், நாயக்கர், நாடார், கவுண்டர் உள்ளிட்ட சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர். அதிமுகவின் தொகுதி என்று சொல்லக்கூடிய அளவிற்கு முந்தைய தேர்தல் முடிவுகள் இருந்துள்ளன. தற்போது அதிமுக. இரண்டாகப் பிரிந்து கிடப்பது, திமுக - காங்கிரஸ் கூட்டணி, ஆட்சி மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றால் போட்டி கடுமையாக உள்ளது.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இத்தொகுதியில் 1952-ல் சக்திவேல் கவுண்டர், 1957-ல் நாராயணசாமி, 1962-ல் மலைச்சாமி தேவர் என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். 1967-ல் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த அஜ்மல்கான், 1971-ல் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த முகம்மது செரிப் ஆகியோர் வென்றுள்ளனர். பின்பு 1977-ல் ராமசாமி (அதிமுக), 1980-ல்

கம்பம் நடராஜன் (திமுக) என்று திராவிடக் கட்சிகளின் பிடியிலேயே இத்தொகுதி இருந்துள்ளது. அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும் இத்தொகுதியில் வென்றுள்ளன.

களம் காணும் வேட்பாளர்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் – காங்கிரஸ், ரவீந்திரநாத் குமார் – அதிமுக, தங்க. தமிழ்ச்செல்வன் – அமமுக, ராதாகிருஷ்ணன் – மக்கள் நீதி மய்யம்.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 15,32,240

ஆண்கள் 7,58,557

பெண்கள் 7,73,506

மூன்றாம் பாலினத்தவர்கள் 177

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 91.45 %

முஸ்லிம்கள்: 4.64 %

கிறிஸ்தவர்கள்: 3.90 %

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 80 %

ஆண்கள் 86.04 %

பெண்கள் 72.74 %

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close