[X] Close

பாஜகவின் விவசாயக் கரிசனமெல்லாம் வெறும் தேர்தல் நேர அக்கறைதான்!- பி. ஆர்.பாண்டியன் பேட்டி


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:09 am
  • அ+ அ-

-கே.கே.மகேஷ்

“மத்தியில் ஆள்வோர் எங்களைச் சந்திக்கவே மறுக்கிறார்கள்” என்று டெல்லியே கிடுகிடுக்கும் அளவுக்குப் போராட்டம் நடத்திய விவசாயி அய்யாக்கண்ணு, அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார். பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளிலும் விவசாயிகள் நலன் தொடர்பாகப் பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதை எப்படிப் பார்க்கிறார்கள் விவசாயிகள்? அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் பேசலாம்.

அய்யாக்கண்ணுவின் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தவர் நீங்கள். அமித் ஷாவுட னான அவரது சந்திப்பு மகிழ்ச்சி தருகிறதா?

அய்யாக்கண்ணுவைத் தமிழக விவசாயிகளின் பிரதிநிதியாகக் கருதித்தான் டெல்லிக்கே போய் அவரது போராட்டத்தில் பங்கெடுத்தோம். அந்தப் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்திய ஆத்திரத்தில்தான் இந்தியா முழுவதும் உள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் டெல்லியை முற்றுகையிட்டார்கள். இவரது போராட்டத்துக்கு ஆதரவாக மத்திய பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானார்கள். அந்த நேரத்தில்கூட அய்யாக்கண்ணுவுடன் பிரதமர் அலுவலகம் பேச முன்வரவில்லை. மாறாக, போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்காக என்னையும், வேறு சில விவசாயச் சங்கத் தலைவர்களையும் சந்தித்துப் பேச அழைப்புவிடுத்தார் அமித் ஷா.

“நூறு நாட்களாக டெல்லியில் போராடும் எங்கள் விவசாயிகளைக் கண்டுகொள்ளாதவர்களை நாங்கள் சந்திக்க முடியாது” என்று மறுத்துவிட்டோம். இப்போது திடீரென அய்யாக்கண்ணு தன்னிச்சையாக முடிவெடுத்து இரவோடு இரவாக அமித் ஷாவைப் பார்த்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.

தங்களது ஆறு கோரிக்கைகளில் ஐந்தை பாஜக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியிருக்கிறாரே?

எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையை அமல்படுத்துவோம் என்று 2014-ல் வாக்குறுதி கொடுத்துத்தான் ஆட்சிக்கு வந்தது பாஜக. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50% இருக்கும் வகையில் விலை நிர்ணயம், 4% வட்டியில் விவசாயக் கடன், அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விவசாய நிலங்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவதைத் தடுத்தல், உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலங்கள், உபரி நிலங்கள், அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்குதல் போன்ற எந்தப் பரிந்துரைகளையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது, இது இந்த அரசின் கொள்கை முடிவு என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்து விவசாயிகள் தலையில் கல்லைப் போட்டுவிட்டார்கள். இப்படி எழுத்துபூர்வமாகக் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாதவர்களின் பேச்சை நம்பி, ஒரே சந்திப்பில் தன் கருத்தை அய்யாக்கண்ணு ஏன் மாற்றிக்கொண்டார் என்பது எங்களுக்கு விளங்கவில்லை.

பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன், ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளதே?

“இந்த அரசு ஒருபோதும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாது” என்று ஒன்றுக்கு நான்கு முறை நாடாளுமன்றத்திலேயே சொல்லிவிட்டார் அருண் ஜேட்லி. புயல், வெள்ளத்தால் விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட நேரமில்லாதவர் மோடி. இப்போது வந்திருப்பது வெறும் தேர்தல் நேர அக்கறை. சொன்னது எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். வர்தா, தானே, ஒக்கி, கஜா என்று நான்கு புயல்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஏற்பட்ட வறட்சி போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்க உடனடித் தேவை விவசாயக் கடன் ரத்து. அதுபற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை.

நதிநீர் இணைப்பு பற்றிய அறிவிப்பும் போலியானது. இந்தியாவில் நதிகளைத் தேசியமயமாக்காமல் இதைப் பற்றிப் பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை. காவிரி ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும், கர்நாடகத் தேர்தலுக்காக அதைத் தள்ளிப்போட்டவர் மோடி. மேகதாது அணை கட்டவும், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட ஆய்வு நடத்தவும் அனுமதி கொடுத்தது மத்திய அரசு. இப்படித்தான் இருக்கிறது இவர்களது அரசியல்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து?

விவசாயத்துக்குத் தனி பட்ஜெட், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தில் திருத்தம், வேளாண் திட்டம் மற்றும் மேம்பாட்டுக்கென தனி ஆணையம், விளைபொருட்களுக்கு உரிய விலை, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு இல்லை. பல கோடி கடன் பெற்ற தொழிலதிபர்களையெல்லாம் தப்பவிட்டுவிட்டு, விவசாயக் கடன் வாங்கியவர்களை ஆள் அனுப்பி அடித்துக்கொன்றவர்களை, தற்கொலைக்குத் தூண்டியவர்களை மறக்க முடியுமா?

விவசாயத்தை அரசு வேலையாக்குவோம் என்று சொல்லும் சீமான், கட்சி தொடக்க விழாவுக்கே உங்களை அழைத்து கௌரவித்த கமல்ஹாசன் இவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?

இது வெறுமனே நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, தங்களைத் தொடர்ந்து வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்குப் பாடம் புகட்டி, ஓரளவுக்கேனும் ஒளிமயமான எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய காலம். சீமான், கமல்ஹாசன் ஆகியோர் மீது ஓரளவுக்கு மரியாதை இருந்தாலும், வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலம் பாஜகவின் வெற்றிக்கே இக்கட்சிகள் உதவும். எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள்.

அரசு ஊழியர்கள்கூட ஒற்றுமையாக இருக்கிறார்கள். விவசாயிகளுக்குள் அப்படி எந்த ஒற்றுமையும் இல்லையே?

இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறோம். விவசாயிகளுக்குள் ஒற்றுமையில்லை. விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பதால் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவாவது விவசாயிகள் இம்முறை ஒரே அணியில் திரள்வார்கள் என்று நம்புகிறோம்.

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close