[X] Close

ஈரோட்டுக்குத் தண்ணீர் தராத காங்கிரஸ்; கணேச மூர்த்தி உதயசூரியனில் போட்டியிடுவது ஏன்?- ஈரோடு அதிமுக வேட்பாளர் மணிமாறன் பேட்டி


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 16:20 pm
  • அ+ அ-

-க.சே.ரமணி பிரபா தேவி

ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் காங்கயம் அதிமுக நகரச் செயலாளரான வெங்கு மணிமாறன் போட்டியிடுகிறார். தீவிரப் பிரச்சாரம், கூட்டணி பலம் போன்றவை இவரின் பலம். தொகுதி வாக்காளர்களுக்கு அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது பலவீனமாகக் கூறப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிப்பு, குடிநீர் திட்டங்கள், நிலத்தடி மின்கம்பிகள் திட்டம் ஆகியவற்றைச் சொல்லித் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் மணிமாறனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் பேசினேன்.

ஆளும் கட்சியின் மீது அதிருப்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில் மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பிரச்சாரம் தெளிவாக போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். செல்லும் இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக எந்த அலையும் இல்லை. தொய்வில்லாமல் சீராகச் சென்றுகொண்டிருக்கிறோம்.

தொகுதியில் இருக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்ன? அவற்றைத் தீர்க்க என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

சாயக்கழிவுதான் பிரதான பிரச்சினையாக உள்ளது. அதற்காக முதல்வர் தலைமையில் திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைமையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்தபடியாக சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதைக் குறைக்க மேம்பாலம் கட்டித்தரப் பாடுபடுவேன்.

ஈரோட்டின் 6 சட்டப்பேரவை தொகுதிகளின் குடிநீர்த் தேவையை காவிரிதான் பூர்த்தி செய்கிறது. ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் மத்திய அரசின் உதவியுடன் காவிரி - கோதாவரி ஆற்றை இணைக்க முதல்வர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்மூலம் வருடம் முழுவதும் காவிரியில் தேவைக்கதிகமாக தண்ணீர் கிடைக்கும்; தமிழ்நாட்டின் 70% குடிநீர் பிரச்சினை தீரும். ஈரோடு மாநராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொலைநோக்குத் திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறோம்.

பாதாள சாக்கடைப் பணியில் தொய்வு, துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறதே?

பாதாள சாக்கடைப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நான் சென்ற பகுதிகளில் யாரும் இதுவரை பாதாள சாக்கடை தொடர்பாக புகார் சொல்லவில்லை. ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டப் பணிகளுக்காக சில பகுதிகளில் பைப்லைன் பதித்துக்கொண்டிருக்கிறோம். அதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. சேதமான சாலையைச் சரிசெய்யவும் முதல்வர் ரூ.40 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 2 அல்லது 3 மாதங்களில்  ஈரோடு மாநகராட்சி முழுவதும் குடிநீர் வழங்கப்படும். 30 ஆண்டு காலத்துக்குத் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படாது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதல்வர் எளிமையான மனிதர்; அவரை அனைவரும் எளிதில் சந்திக்க முடியும். ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள் என பலதரப்பட்ட மக்களும் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனனர். அவர்களின் கோரிக்கைகளை அவர் உடனடியாக நிறைவேற்றியுள்ளார். இதனால் முதல்வருக்கு ஈரோட்டில் தனி செல்வாக்கு உள்ளது. ஏற்கெனவே அவர் எம்.பி.யாக இருந்ததால் அவருக்கு மக்களின் பிரச்சினைகள்  குறித்துத் தெரியும்.

திராவிடக் கட்சிகள் சூழ் தமிழகத்தில் பாஜக கூட்டணி உங்களுக்கு பலமா, பலவீனமா?

ஏற்கெனவே பாஜகவுடன்  நாடாளுமன்றத்தில் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறோம். பாஜகவை மதவாதக் கட்சி என்று விமர்சிக்கும் திமுகவே 1999-ல் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தது. மத்திய அமைச்சரவையிலும் அங்கம் பெற்றது.

பாஜக கூட்டணியால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. அக்கட்சிக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி உள்ளது. பாமக, தேமுதிக, தமாகா என கூட்டணிகளுடன் வலுவாக உள்ளோம்.

பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதே?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பில், அதிமுக கூட்டணிக்கு 7 முதல் 10 இடங்களே கிடைக்கும் என்று கூறினர். ஆனால் 37 இடங்களைக் கைப்பற்றினோம். கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் அவர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். மக்கள் வேறு கண்ணோட்டத்தில் இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் சந்திக்காத மனிதர்களும் நிஜத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், தினகரன் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என்று கூறப்படுகிறதே?

ஈரோடு அதிமுக பெல்ட். 'அம்மா' இருந்தபோது அதிமுக உடைந்த நிலையில், ஈரோட்டின் 12 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றினோம். தமிழகம் முழுவதும் 39 இடங்கள் கிடைத்தபோது ஈரோட்டில் இருந்து மட்டும் 11 இடங்கள் கிடைத்தன. இங்குள்ளவர்கள் அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள்.

கருத்துக் கணிப்புகளில் அமமுகவினர் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதிமுக உடைந்துவிடும் என்று கருதும் அமமுக தொண்டர்கள் தேர்தலுக்கு முன்பாகவே எங்களிடம் வந்துவிடுவர். அமமுகவுக்குப் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் என்று நினைக்கும் அவர்கள், இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவர். கட்சி நிர்வாகிகள் இருப்பார்களே தவிர, வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வந்துவிடுவார்கள்.

Vengu.jpg

திமுக கூட்டணியில் போட்டியிடும் கணேசமூர்த்தி அனைவராலும் அறியப்பட்டவர். ஆனால் உங்களைப் பற்றி தொகுதி மக்களுக்குத் தெரியாது; அறிமுகம் இல்லாத வேட்பாளர் நீங்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?

இந்த வெங்கு மணிமாறனுக்கு அடையாளமோ, அறிமுகமோ தேவையில்லை. அதிமுக வேட்பாளர் என்பதே பெரிய அறிமுகம்தான். அவர் 40 ஆண்டுகால அரசியலில் இருந்தவர் என்றால் நான் 30 ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.

கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்திருக்கிறேன். கட்சியே என்னை அடையாளப்படுத்தும். இப்போது யாரும் தனிமனிதர்களுக்காக ஓட்டு போடுவதில்லை. அப்படி இருந்தால் கணேசமூர்த்தி ஏன் சுயேட்சையாக நிற்காமல் உதயசூரியனில் நிற்கிறார்? அவர் ஏன் பின்வாங்குகிறார், பயம்தானே காரணம்? தனிமனிதராக கணேசமூர்த்திக்கு செல்வாக்கு உள்ளதென்றால், அவர் ஏன் திமுக கூட்டணியில், அக்கட்சி உறுப்பினராகி உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார்?

திமுக - காங்கிரஸ் கூட்டணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது ஒரு கொள்கையற்ற கூட்டணி. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது காவிரியில் தண்ணீர் விடவில்லை. இப்போது காங்கிரஸ் துணையுடன் கர்நாடக ஆட்சி நடக்கிறது. ஆனால் இன்றும் காவிரி நீரைத் தர மறுக்கிறார்கள்.

ஈரோடு தொகுதியின் 99% குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வது காவிரிதான். ஆனால் தண்ணீர் விட காங்கிரஸ் மறுக்கிறது. அக்கட்சியுடன்தான் திமுக கூட்டணி வகிக்கிறது. இது மக்களுக்குத் தெரியும். காங்கிரஸ்காரர்கள்தான் தண்ணீர் விட மறுக்கிறார்கள்; அந்தக்கூட்டணியில்தான் கணேசமூர்த்தி நிற்கிறார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இது வாக்கு எண்ணிக்கையில் நிச்சயமாக எதிரொலிக்கும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச் சாலை ஆகியவற்றால் எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகச் சொல்கிறார்களே?

முதல்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடவில்லை; கள அதிகாரிகள்தான் முடிவெடுத்தனர். இதை அங்கிருக்கும் மக்களே உணர்ந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை முதல்வர் உடனடியாக வழங்கினார். அந்த ஆலையை நிரந்தரமாகத் திறக்க முடியாமல் செய்ததும் அவர்தான்.

எட்டுவழிச் சாலை திட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக அவர் செயல்பட்டார். சிலர் விளம்பரத்துக்காக விவசாயிகளைத் தூண்டி விடுகின்றனர். ஆட்சியில் இல்லாமல் இருப்பதால் அப்படிச் செய்கிறார்கள். எப்போதும் மக்களுக்கு ஆதரவாகவே எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். விவசாயிகளே விரும்பி நிலத்தைக் கொடுப்பர். நீங்கள் நினைப்பது போல எந்த எதிர்ப்பலையும் எங்களுக்கு இல்லை.

வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளீர்களா?

கண்டிப்பாக. கடந்த தேர்தலில் எங்கள் கட்சி எம்.பி. செல்வகுமர சின்னையா 2.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று நம்பிக்கை உள்ளது'' என்றார் மணிமாறன்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close