[X] Close

'வெள்ளைச் சர்க்கரை’ ஆபத்துகள்!


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 15:00 pm
  • அ+ அ-

ஜெமினி தனா

மகிழ்ச்சியான செய்தியை சம்பந்தப்பட்டவர்களிடம் பகிரும் போது ”எவ்ளோ சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்க... உன் வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போடணும்” என்பார்கள். என்போம். ஆனால், செய்தி, மகிழ்ச்சியாக இருந்தாலும், சர்க்கரை இப்போதெல்லாம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை!

உலக அளவில்  சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்கள் முதல் இடம் பிடித்திருக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை சொல்கிறது. சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பரம்பரை, மாறிவரும் உணவுப் பழக்கம் என்று காரணம் சொன்னாலும் அளவுக்கு மீறி சர்க்கரை சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது  என்பதே சொல்லப்படாத உண்மை.

அமிர்தமும் நஞ்சு:

 உணவின் மூலம் கிடைக்கும் புரதமும், கார்போ ஹைட்ரேட்டும் தான் நாம் செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை தருகின்றன. ஆனால் இன்றைய நமது உணவு பழக்க வழக்கங்களால்இவை அளவுக்கு மீறி உடலுக்கு கிடைத்து விடுகிறது. அதிலும் செயற்கை இனிப்பும் அதிக தேவையற்ற கலோரிகளும் இணைந்த சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது  கெட்ட கொழுப்பாக மாறி உடல் பருமனை ஏற்படுத்துவதோடு கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவையும் குறைக்கிறது. அதனால்  இரத்தத்தில் சர்க்கரைஅளவு அதிகரித்து நீரிழிவு நோயை உண்டாக்கிவிடும் முக்கிய காரணியாகவும் இருக்கிறது என்பதை மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.   

நீரிழிவைத் தொடர்ந்து, வலுவான எலும்பை உறுதியிழக்கச் செய்யும். குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோபொராசிஸ், உடல் பருமன், இதய நோய், கண் பார்வைக் குறைபாடு, கீல்வாதம், பற்கள் பாதிப்பு இப்படி அச்சுறுத் தும் நோய்கள் வரிசையாக நம்மை தாக்கத் தொடங்குகின்றன.  அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது நஞ்சுக்களின் கலவையால் உருவான சர்க்கரை, அதிக பாதிப்புகளைக் குறைந்த வயதிலேயே ஏற்படுத்தி விடுகிறது என்கிற கசப்பான உண்மையை உணரவேண்டிய தருணம் இது!

சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ கூட உடல் நலத்துக்கு நல்லதல்ல. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயமுண்டு என்கிறார்கள்.

   காலை காஃபியில் தொடங்கி,  உணவை இனிப்புடன் முடித்து  நடுவில் சாக்லெட், ஐஸ்க்ரீம், கேக், கண்களைக் கவரும் இன்னபிற இனிப்பு வகைகள், இரவு ஒரு டம்ளர் பால் குடிக்கும் வரை  ஒருவர்  30 முதல் 40 கிராம் வரை  சர்க்கரை இல்லாமல் அன்றைய தினத்தைக் கழிப்பதே இல்லை என்கிறது மருத்துவக் கணக்கு!

நல்ல சர்க்கரை என்றாலும் நாள் ஒன்றுக்கு  10 கிராம் சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது. பழங்களிலும் சர்க்கரை உண்டு. ஆனால் இனிப்பைத் தாண்டி இவற்றில் பல சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் சர்க்கரையில் சத்தில்லாத இனிப்பைத் தவிர வேறு  எதுவுமே இல்லை.

  ரஸகுல்லா, பால்கோவா, சோன்பப்டி என்று சர்க்கரை கலந்திருக்கும் அனைத்து ஸ்வீட் வகைகள்… சர்க்கரைக் கரைசல், செயற்கை சர்க்கரை வகைகளான சாக்கரின், அஸ்பார்ட்டேம் போன்றவையும் அதிக அளவில் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் குளிர்பானங்களையும் அளவில்லாமல் எடுத்துக்கொள்வதால்  பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகரித்துவருகிறது. இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல.. உலக சுகாதார அமைப்பு தன் ஆய்வின் மூலம் இதை உறுதி செய்திருக்கிறது.

   இனிப்போடு கலந்த உணவை, பண்டைய கால அரசர்கள் முதல் முன்னோர்கள் வரை  எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அவையெல்லாம் தேன், வெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை முதலானவற்றால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள். பாயசம் முதல் பாஸந்தி வரை அனைத்திலும்  தேன், வெல்லம் சேர்க்கப்பட்டு  ஆரோக்கியத்துடன் கூடிய சுவையை அதிகரித்துக் கொடுத்தன. வெள்ளைத் தங்கமாக வணிகத்தில் விடப்பட்டு ஆதிக்கம்  செலுத்தி வரும் சர்க்கரைதான் நாக்கை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.   இனிப்பு கலந்த மிட்டாய் என்றால் அது சர்க்கரையில் மட்டுமே செய்திருக்க வேண்டும் என்று குழந்தைகளும் விரும்பும்படியாக, பாரம்பரிய இனிப்புப் பண்டங்களையும் மறைத்து  கெடுத்து வைத்திருக்கிறோம்.

நஞ்சு சர்க்கரை:

  கரும்புச் சாறிலிருந்து வைரத்துகள்களாக பளபளக்கும் சர்க்கரையைக் கொண்டு வரும் சர்க்கரை ஆலைகள் கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுக்கும் வேலைகளைச் செய்கின்றன. இதைத்தான் அந்த நிறுவனங்கள் பாலீஷாக சொல்கின்றன.   கரும்பிலிருந்து மாசுக்களை அசுத்தங்களைச் சுத்திகரிக்கிறோம் என்று சொல்லி கரும்பிலிருக்கும் ஒட்டு மொத்த சத்துகளையும் அழித்து சக்கையாக்கி சர்க்கரையாகக் கொடுக்கிறது.

மூன்று முறை கொதிக்க வைக்கும் கரும்புச்சாறில் ஆவியாகும் சத்துக்கள் பல என்றால் மறுபுறம் அதில் இனிப்புச் சுவைக்காக  மட்டுமே  சத்தே இல்லாத 260 கலோரிகள் வரை சேர்க்கப்படுகின்றன. அழுக்கு நீங்க பாஸ்ஃபோரிக் ஆஸிட்.. மண், சக்கை நீக்க பாலி எலக்ட்ரோலைட், சல்ஃபர் டை ஆக்ஸைடு, சுண்ணாம்புக் கலவை, கார்பன் டை ஆக்ஸைடு இப்படி போகிறது  கெடுதல் தரும் வேதிப் பொருள்களின் பட்டியல். ஆனால் இவை மட்டுமே சர்க்கரையை வெள்ளையாக்குவதில்லை. மாடு, பன்றி எலும்புச் சாம்பல்கள்தான் சர்க்கரையின் பளபள வெள்ளை நிறத்துக்குக் காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வெள் ளைச்சர்க்கரை, பிரவுன் சர்க்கரை, சுகர்ஃப்ரீ எல்லாம் தாய்சேய் போல உறவுகள்தான்!  

   சர்க்கரை தயாரிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆறுமாத காலம் வரைதான் சாப்பிட ஏற்றவை என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட காலங்களில் சர்க்கரையில் சேர்க்கப்பட்டிருக்கும்  சல்பர்-டை-ஆக்ஸைடு வீரிய மிக்க நஞ்சாக மாறிவிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

   காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, கட்டச்சம்பா, மூங்கிலரிசி, குள்ளகார், குறுவை, கவுனி இப்படி கணக்கிலடங்கா அரிசி ரகங்கள் மறக்கப்பட்டு, மாறாக… பட்டை தீட்டி,  தவிட்டை நீக்கி சாப்பிடும் இன்றைய அரிசி ரகங்களே  சர்க்கரை நோய்க்கு  பிரதான காரணம். அதேபோல், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின்கள் நிறைந்த கரும்பிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுக்கிறேன் என்று சத்துக்கள் மொத்தத்தையும் ஒழித்து நஞ்சாக்கி  வெள்ளையாக்கித் தருவதுதான் இந்த வெள்ளை சர்க் கரை என்பதில் மாற்றமில்லை.

  கழிப்பறை பீங்கானின் கறையைப் போக்கும்  சிறந்த அமிலமாக செயற்கை குளிர்பானங்கள் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானது. தற்போது சட்டைக்காலரில் இருக்கும் கறைகளை நீக்கும் தூளாக வெள்ளை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அப்படி தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறது.

இயற்கையிலிருந்து எல்லாமே செயற்கையாக மாறிவரும் சூழ்நிலையில், மீண்டும் மக்கள் பாரம்பரிய உணவுகளை நாடி படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.  நாட்டுச் சர்க்கரையும், பனங்கற்கண்டும், பனை வெல்லமும், வெல்லமும் மவுசு கூடி வரும் வேளை இப்போது!

’வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்’ என்றொரு காமெடி உண்டு. ‘வெள்ளையா இருக்கிற சர்க்கரை நமக்கு நன்மை செய்வதில்லை’ என்பது வேதனை கலந்த உண்மை.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close