[X] Close

புகழ்பெற்ற கதை: ராஜாவின் அதிசயப் புத்தாடை!


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 12:25 pm
  • அ+ அ-

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். எல்லா நாட்டையும் போலவே இந்த ராஜாவையும் மக்கள் போற்றிப் புகழ்ந்தாங்க. இந்த ராஜா கதை, மத்த ராஜா கதைகள்ல இருந்து கொஞ்சம் வித்தியாசமானது.

ஏன்னா, அந்த நாட்டுல ராஜா பங்கேற்குற ஊர்வலம் குறிப்பிட்ட கால இடைவெளில நடக்கும். ஒவ்வொரு ஊர்வலத்துலயும் ராஜா புதுசாவும் வித்தியாசமாவும் ஆடை அணிஞ்சு வருவார்.

இந்த ராஜா இருக்காரே, அவரு கொஞ்சமில்ல, ரொம்பவே வித்தியாசமானவரு. புதிய உடைகள், வித்தியமாசமான உடைகள், பகட்டான உடைகள் மேல இந்த ராஜாவுக்குக் கொள்ளை ஆசை. புதுப் புது இடங்களுக்குப் போறப்ப புதுசு புதுசா ஆடை உடுத்துறதும், அதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு இருக்கிறதும், பேசிக்கிட்டு இருக்கிறதும்னு ஆடைகளுக்காகவே பிறந்த ஆள் அந்த ராஜா.

இந்தக் கதைல வர்ற ராஜா நாட்டைப் பத்தியோ, நாட்டு மக்களைப் பத்தியோ, மக்களை மகிழ்ச்சியாவும் அறிவோடவும் வச்சிக்கிறதப் பத்தியெல்லாம் யோசிக்கவே இல்ல. எப்பப் பார்த்தாலும் ஆடை, புத்தாடை, புதுப்புது ஆடைன்னு ஊதாரித்தனமா ஆடைகளுக்காகவே செலவழிச்சுக்கிட்டிருந்தார்.

நாட்டுல ராஜாவா எல்லா வேலையையும் செய்யப் போறாரு? இன்னைக்கு இருக்கிறது மாதிரியே அன்னைக்கும் நிர்வாக வேலைகளை கவனிக்க ஒரு அமைச்சர், படையையும் போரையும் பார்த்துக்கிறதுக்கு ஒரு தளபதி, ஆலோசகர்கள், அறிஞர்கள்னு நிறைய பேரு அரசவையையும் அந்த நாட்டையும் வழிநடத்திக்கிட்டு இருந்தாங்க. அவங்கள்லாம் இருந்ததுனால, அந்த நாடும் பெரிய பிரச்சினையில்லாம இயங்கிக்கிட்டு இருந்துச்சு.

d1867f5d_P_216713_7_mr.jpg 

இந்த ராஜாவோட புத்தாடைக் காதல் சம்பந்தமா, ரெண்டு நெசவாளிகளுக்குத் தெரிஞ்சது. அவங்க அதைப் பயன்படுத்திக்க நெனைச்சாங்க. இதுவரைக்கும் இந்த உலகத்துல யாருமே கற்பனை செய்யாத, மிக அழகான ஆடையை நெய்து தர்றதா அந்த ராஜாகிட்ட சொன்னாங்க. அத்தோட அந்த புதிய ஆடை ரொம்ப விசித்திரமானதுன்னு ராஜாகிட்ட அவங்க சொன்னாங்க.

அது என்னன்னா, ஒரு வேலைக்கு உண்மையிலேயே தகுதியான ஆட்கள், அறிவாளிங்களோட கண்ணுக்கு மட்டும்தான் அந்த ஆடை தெரியுமாம். மத்தவங்க யாருக்கும் அந்த ஆடை தென்படாதுன்னு ராஜாகிட்ட சொன்னாங்க. ராஜாவுக்கும் அவங்க சொன்னது ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

அடுத்து நடக்க இருந்த பிரம்மாண்ட ஊர்வலத்துக்கு அந்த அதிசய ஆடையை ராஜா நெய்து தரச் சொன்னாரு. அரண்மணைல அவங்களுக்கு இடம் கொடுத்து, தங்கமும் வெள்ளியும் கொட்டிக் கொடுத்தாரு. அந்த ரெண்டு நெசவாளிகளும் புத்தாடையை நெய்யுறது மாதிரியே நடிச்சாங்க.

ஆனா, அவங்களோட திட்டமெல்லாம் வேற. ராஜாவோட புத்தாடை வெறியை அவங்க நல்லா பயன்படுத்திக்கத் திட்டம் போட்டாங்க. நாள் முழுக்க துணியை நெய்யுறது போலவும், துணியை வெட்டுறது போலவும், தைக்கிறது போலவும் நெசவாளர்கள் ரெண்டு பேரும் நடிச்சுக்கிட்டிருந்தாங்க.

ஊர்வலத்துக்கான நாளும் வந்துச்சு. யாரு கண்ணுக்குமே தெரியாத, அந்த அதிசய ஆடையை நெசவாளர்கள் ரெண்டு பேரும் ராஜாவுக்கு அணிவிச்சு விட்டாங்க. ராஜா ஊர்வலத்துக்குப் புறப்பட்டாரு.

அரண்மனைல அதைப் பார்த்தவங்க எல்லாரும், "என்ன ஓர் அழகு! அற்புதமான வேலைப்பாடு!"

"இது மாதிரி மிருதுவான, மெல்லிசான ஒரு துணிய நான் பாத்ததே இல்ல!"

"வார்த்தைகளால வர்ணிக்க முடியாது!"

"இது மாதிரியான ஒரு துணிய என் வாழ்க்கைல பாத்ததேயில்ல..."

-அப்படின்னு பாராட்டித் தள்ளினாங்க.

ஏன்னா, யாருக்காவது அந்த ஆடை தெரியலேன்னு சொன்னா, அவங்க முட்டாளாயிடுவாங்களே. ராஜாவும் அந்த ஆடையை அணிஞ்சிருக்கிற மாதிரியே நடிச்சாரு. அவருக்கும் அது கண்ணுக்குத் தெரியலேன்னு சொன்னா, அவரு முட்டாளாயிடுவாருல்ல. அரண்மனையை விட்டு ஊர்வலத்துக்கு ராஜா புறப்பட்டுப் போனதும் ரெண்டு நெசவாளர்களும் ரகசியமா தப்பிச்சுப் போயிட்டாங்க.

ராஜ ஊர்வலத்தைப் பார்க்க மக்கள் குவிஞ்சிருந்தாங்க. ராஜா ஆடை எதுவும் அணிஞ்சுக்காம வர்றதைப் பாத்து மனசுக்குள்ள மக்கள் அசிங்கமா நெனைச்சுக்கிட்டாலும், வெளில எதுவும் சொல்லல.

raja 3.jpg 

ராஜாவைப் பார்த்து எதுவும் சொல்ல முடியுமா? அப்படியே சொன்னாலும் அந்த ஆடை தங்களுக்குத் தெரியலேன்னு ஒத்துக்கிட்டா, அவங்க எல்லாம் முட்டாள் ஆயிடுவாங்களே. அதுனால எல்லாரும் சத்தம் காட்டாம ஊர்வலத்தப் பார்த்துக்கிட்டிருந்தாங்க.

அப்ப ஒரு சின்னப் பையன் "இங்க பாருங்க, ராஜா அம்மணமா இருக்காரு!"ன்னு சத்தம் போட்டான். அதைக் கேட்டு மக்களும் ராஜா அம்மணமாத்தான் இருக்காருன்னு சத்தம் போட ஆரம்பிச்சாங்க.

ஆனா அதைப் பத்தியெல்லாம் ராஜா கவலைப்படல. அந்த நாட்டுக்கு அவருதானே ராஜா, அவர் வெச்சதுதான் அங்க சட்டம். தான் ஆடை எதுவும் அணியலேங்கிறத ஒத்துக்கிட்டா, அதுவரைக்கும் அவரு செஞ்சது எல்லாமே முட்டாள்தனமாப் போயிடுமே. அதனால, அந்த ராஜா ஊர்வலத்துல தொடர்ந்து நடந்து போனாரு.

இதோட கதை முடிஞ்சிருச்சின்னு நெனைக்கிறீங்களா? இல்ல.

இன்னைக்கும் அதிசய ஆடையை நெய்த நெசவாளிகளைப் போன்ற ஆட்களும், அதிசய ஆடை அணிஞ்சிருக்கிறதா கற்பனையிலேயே உலாத்திக்கிட்டு இருக்கிற அம்மண ராஜாக்களும், அதைக் கண்டும் காணாம இருக்குற அரசவை அதிகாரிகளும், எல்லாத்தையும் சத்தம் காட்டாம அமைதியா பார்த்துக்கிட்டிருக்கிற மக்களும் பல நாடுகள்ல வாழ்றதா ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

-ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் சுருக்கமாகத் தமிழில்: ஆதி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close