[X] Close

அறிவியல் மேஜிக்: சுற்றும் முட்டை, நகராத பேருந்து!


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 12:25 pm
  • அ+ அ-

-மிது கார்த்தி

பேருந்தில் போகும்போது ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டால் என்ன ஆகிறது? உங்கள் தலை முன்னோக்கிச் சென்றுவிடுகிறது அல்லவா? அதுக்கு என்ன காரணம்?

என்ன தேவை?

முட்டை

எப்படிச் செய்வது?

1. முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதைத் தரையில் வைத்து மெதுவாகச் சுற்றிவிடுங்கள்.

2. சுற்றிக்கொண்டிருக்கும் முட்டையை விரலால் தொட்டு நிறுத்தி, கையை எடுத்துவிடுங்கள். இப்போது என்ன நடக்கிறது?

3. நீங்கள் நிறுத்திய முட்டை, நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறதா? இது எப்படிச் சாத்தியம்?

காரணம்

சுற்றிக்கொண்டிருக்கும் முட்டையை விரலால் தொட்டு நிறுத்தினீர்கள் அல்லவா? நீங்கள் தொட்டு நிறுத்தியது முட்டையின் ஓட்டைதான். முட்டைக்குள் திரவ நிலையில் இருக்கும் கருவை அல்ல.

அந்தத்திரவம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் முட்டையை நிறுத்திய பிறகும், கரு இயங்குவதால் முட்டைச் சுற்றிக்கொண்டேஇருக்கிறது.

பயன்பாடு

பேருந்தில் திடீரென்று பிரேக் போடும்போது உங்கள் தலை முன்னோக்கிச் செல்கிறது அல்லவா? இதுக்கு நிலைமம்தான் (Inertia) காரணம். ஒரு பொருள் தன்னைத் தானே மாற்றிக்கொள்ள இயலாத தன்மையே நிலைமம். ஒருபொருள் ஓய்விலோ இயக்கத்திலோ இருக்கும்போது, அது அந்தத் தன்மையிலேயே தொடர்ந்து இருக்கும்.

பேருந்துக்கு பிரேக் போடும்போது பேருந்து மட்டுமே நிற்கிறது. பேருந்துக்குள் உள்ளவர்களின் கீழ் பகுதி உடல் பேருந்துடன் சேர்ந்து நிற்கும். ஆனால் மேல் உடல் இயக்கத்தில் இருப்பதால், பேருந்து நின்றவுடன் தலை முன்னோக்கிச் சென்றுவிடுகிறது.

சந்தேகம்

சுற்றிக்கொண்டிருந்த முட்டையை விரலால் தொட்டு நிறுத்திய பிறகும் முட்டை சுற்றியதுபோல, பேருந்தை நிறுத்திய பிறகு அது ஏன் நகரவில்லை? பேருந்துக்குள் இருக்கும் மனிதர்களைவிட பேருந்தின் எடை அதிகம். அதனால், பேருந்து நகரவில்லை. மனிதர்கள் மட்டுமே நகர்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close