[X] Close

நெல்லை மாவட்டத்தில் மணல் கொள்ளையும், உயிர் பலிகளும்


sand-mafia-river-sand-smugglers

திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. (கோப்புப்படம்)

  • kamadenu
  • Posted: 09 May, 2018 11:37 am
  • அ+ அ-

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றுப்படுகையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான கொலை சம்பவங்களுக்கு மணல் கொள்ளையே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

மணல் கொள்ளையும், அது தொடர்பாக எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும், மோதல்களும், கொலை சம்பவங்களும் ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே நம்பியாற்று படுகையில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், முதல்நிலை காவலர் ஜெகதீஷ்துரை கொல்லப்பட்டார்.

13 குவாரிகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்புவரை 13 மணல் குவாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணலை அள்ளி அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். ஆற்றுமணலை அள்ள திசைக்கு ஒருவர் என்று அரசியல்வாதிகள் பங்குப்போட்டுக்கொள்ள அரசும் அனுமதி அளித்திருந்தது.

கேரளத்துக்கு விற்பனை

இதைத் தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாமல் திராணியற்று விவசாயிகளும், சாமானியர்களும் இருந்தார்கள். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட குவாரிகளை நடத்திய அரசியல்வாதிகள், அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி கேரளத்துக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். ஆற்றை பிரிந்துமேய் ந்து மணலை கொள்ளை அடித்ததால் ஆற்றுநீரோட்டம் திசை திருப்பட்டது.

தாமிரபரணி ஆற்றுப்படுகை மட்டுமின்றி சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனா நதி, வைப்பாறு ஆகிய சிற்றாறுகள், மாவட்டத்தில் ஆங்காங்கே இருக்கும் ஓடைகள், குளங்களிலும்கூட மணல் திருட்டு தொடர்கிறது. ஆங்காங்கே மோத ல்கள், கைதுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் நீடிக்கின்றன.

30-க்கும் மேற்பட்ட கொலைகள்

மணல் கொள்ளை தொடர்பாக, மணல் அள்ளும் போட்டி தொடர்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த முன்விரோதத்தில் இப்போதும் ஆங்காங்கே கொலைகள் நடந்து வருகின்றன. மணல் கொள்ளை இந்த இரு மாவட்டங்களிலும் ஜாதி மோதல்களுக்கும் வித்திட்டு வருகின்றன.

போலீஸார் போட்டி

மணல் கொள்ளைக்கும், அதன் தொடர்ச்சியாக நடைபெறும் மோதல்களுக்கும், போலீஸாரும், அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதுதான் பிரச்சினையை ஆண்டாண்டுகாலமாக நீடிக்கச் செய்கிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள காவல்நிலையங்களில் பணிவாய்ப்பை பெறுவதற்கு போலீஸாருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே இப்போதுவரை கடும் போட்டி நிலவிவருகிறது. 

அந்தவகையில், சீவலப்பேரி, பாளையங்கோட்டை தாலுகா, கங்கைகொண்டான், தாழையூத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரிய போலீஸாரிடையே கடும் போட்டி இருக்கிறது. இங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்தாலேயே சொத்து மதிப்பு பலகோடியாக உயர்ந்துவிடுவதால் இங்கு பணிபுரிய போலீஸார் போட்டியிடுகிறார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றுப்படுகையை ஒட்டியிருக்கும் பகுதி காவல் நிலையங்களில் மணல் கொள்ளை தொடர்பாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. புகார் தெரிவிப்பவர்களை மணல் மாபியாக்களிடம் காட்டிக்கொடுத்து அவர்களை பழிவாங்கும்போக்கு தொடர்வதால், மணல் கொள்ளை விவகாரத்தில் சாமானியர்கள், சமூக ஆர்வலர்கள் என்று அனைத்து தரப்பினரும் மவுனமாக இருந்துவிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீஸாரும் கொல்லப்பட்டு இருப்பது குறித்து சக போலீஸாரும்கூட கவலைப்படாமல் இருக் கிறார்கள்.

போலீஸ்காரர்கள் கொலை

இச்சூழ்நிலையில்தான் நம்பியாற்று படுகையில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்நிலை காவலர் ஜெகதீஷ்துரை கொல்லப்பட்டிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் தோன்றும் நம்பியாறு, கோட்டை கருங்குளம் வழியாக ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே கடலில் கலக்கிறது. 

இந்த ஆற்றுப்படுகையில் மணலை கொள்ளையிடும் விவகாரம் ஆண்டாண்டு காலமாக நீடிக்கிறது. இந்த மணல் கொள்ளையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தாக்குதல்கள், கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் திசையன்விளை தலைமை காவலர் திருநாவுக்கரசு, நம்பியாற்று பகுதியில் மர்மமாக இறந்துகிடந்தார். அது தொடர்பாக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக தற் போது மற்றொரு காவலர் கொல்லப்பட்டிருக்கிறார்.

நடவடிக்கை அவசியம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீடிக்கும் இந்த மணல் கொள்ளை மற்றும் அது தொடர்பான உயிர்பலிகளை தடுக்க, அரசும், காவல்துறையும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். 

திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் அ.பிரம்மா கூறும்போது, தாமிரபரணி மற்றும் பல்வேறு ஆற்றுப்படுகைகளை ஒட்டியிருக்கும் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு, கல்வியை அளிக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் மணல் கொள்ளையை தடுக்க ஓரளவுக்கு வழிகிடைக்கும். அரசும், காவல்துறையும் மனசு வைத்தால்தான் மணல் கொள்ளையை தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

-  அ.அருள்தாசன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close