[X] Close

இதுதான் இந்தத் தொகுதி: மயிலாடுதுறை


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 10:37 am
  • அ+ அ-

இடைக்கால சோழர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்த மயிலாடுதுறை,  பின்னர் விஜயநகரப் பேரரசு, தில்லி சுல்தான், தஞ்சாவூர் நாயக்கர்கள் ஆகியோரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்துவந்த மயிலாடுதுறை, 1991-ல் புதிதாக உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி இது.

பொருளாதாரத்தின் திசை: மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில் மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் விவசாயத்தையே முதன்மைத் தொழிலாக செய்துவருகிறார்கள். அரிசி, தேங்காய் பிரதான விளைபொருட்கள். காவிரியில் நீர்வரத்து இல்லாத காலங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: 2016- 17-ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டுத் தொகை இதுவரை விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. தேசிய மற்றும் தனியார் வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கிய பயிர்க் கடன்கள் அனைத்தையும் ரத்துசெய்ய வேண்டும்  என்று விவசாயிகள் கோரிவருகிறார்கள். சீர்காழி, தரங்கம்பாடி கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் பிரதான கோரிக்கை. மயிலாடுதுறை நகரத்தில் புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. நாள்தோறும் ஏதாவது இடத்தில் குழாயில் உடைப்பெடுத்து கழிவுநீர் வெளியாகி நகரமே துர்நாற்றம் அடிக்கிறது.

நீண்ட காலக் கோரிக்கைகள்: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ஆங்கிலேயர் காலத்திலிருந்து ரயில் போக்குவரத்து நடந்துவந்தது. கடந்த 1986-ல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளங்களையும் ரயில்வே நிர்வாகம் பெயர்த்து எடுத்துவிட்டது. மீண்டும் மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும். நீடாமங்கலம் - கும்பகோணம் - விருத்தாசலம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்க ஆய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியையும் விரைவில் தொடங்க வேண்டும். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழாவைத் தேசிய விழாக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தலைஞாயிறில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அரசு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும்.

ஒரு சுவாரஸ்யம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திமுக இத்தொகுதியிலிருந்து 2 முறை வெற்றிபெற்றிருந்தாலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் போட்டியிடுகிறது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். வெற்றியைத் தீர்மானிப்பதில் அவர்கள் பங்கு அதிகம். பட்டியலினத்தவரும் மீனவச் சமூகத்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுகவும் அதிமுகவும் தலா 2 முறை வெற்றிபெற்றுள்ளன.

-டி.செந்தில்குமார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close