[X] Close

எப்படியிருக்கிறது இந்தியா?- மத்திய இந்தியா


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 10:16 am
  • அ+ அ-

-வ.ரங்காசாரி

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அடங்கியது மத்திய இந்தியா. உத்தர பிரதேசமும் மத்திய பிரதேசமும் இந்தி பெரும்பான்மையாகப் பேசப்படும் மாநிலங்கள். உத்தராகண்ட்டும் சத்தீஸ்கரும் அவற்றிலிருந்து பிரிந்த கிளை மாநிலங்கள். நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 122 மக்களவைத் தொகுதிகள். 543 தொகுதிகளில் இது 22.46%. மொத்த மக்கள்தொகை 30,80,70,640. மொத்தப் பரப்பளவு 37,84,167 ச.கி.மீ. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் நான்கு மாநிலங்களும் சேர்ந்து 22.43%. உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகை மட்டுமே 16.50%.

மத்திய இந்தியா ஓர் அறிமுகம்

உத்தர பிரதேசம் நீண்ட காலமாக பிரிட்டிஷ் ஆட்சியில் ‘ஐக்கிய மாகாணம்’ என்ற பெயரில் நிர்வகிக்கப்பட்டது. மக்கள்தொகையில் 75% இந்துக்கள், 25% முஸ்லிம்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேசிய அளவில் மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாவதாக இருக்கிறது உத்தர பிரதேசம். ஆண்டுக்கு ரூ.14.89 லட்சம் கோடி அதன் மொத்த உற்பத்தி. இந்திய வருவாயில் 8.41%. நாட்டின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் உத்தர பிரதேசத்தின் பங்கு மட்டும் 19%. இந்தியாவின் கரும்பில் 70% உத்தர பிரதேசத்தில் விளைகிறது.

மத்திய பிரதேசத்தில் கனிமவளம் அதிகம். இந்தியாவிலேயே அதிக அளவுக்கு வைரம், தாமிரச் சுரங்கம் உள்ள பகுதி. மாநிலப் பரப்பில் 30%-க்கும் மேல் வனங்கள். மாநிலத்தின் மிகப் பெரிய நீராதாரம் நர்மதை ஆறு. மத்திய பிரதேசத்தைப் பத்து மண்டலங்களாவும், 52 மாவட்டங்களாகவும் நிர்வகிக்கின்றனர். ஆண்டுதோறும் சராசரியாக 1,371 மி.மீ. மழை பெய்கிறது. ஏராளமான வனங்களும் காப்புக்காடுகளும் சரணாலயங்களும் மாநிலத்தில் உள்ளன.

சத்தீஸ்கர் என்றால் ‘36 கோட்டை’ என்று பொருள். நாட்டின் மொத்த உருக்கில் 15% இங்குள்ள பிலாய் உருக்காலையில் உற்பத்தியாகிறது. ஐந்து டிவிஷன்கள், 27 மாவட்டங்களாக நிர்வகிக்கப்படுகிறது.

உத்தராகண்டில் இமயமலையையொட்டி பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட யாத்திரைத் தலங்களும் ஆலயங்களும் உள்ளன. கர்வால், குமான் என்று மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர். மொத்தம் 13 மாவட்டங்கள். தலைநகர் டேராடூனை அடுத்து பெரிய ஊர் நைனிதால். கங்கையும் யமுனையும் உற்பத்தியாகும் இடம். வனம் நிரம்பிய மாநிலம். உத்தராகண்டில் தொழில் வளம் குறைவு. மருந்து-மாத்திரை தயாரிப்பு ஆலைகள் மட்டுமே உள்ளன. கனரகத் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கேற்ற நிலப்பரப்பு அங்கு இல்லை.

எதிர்கொள்ளும் சவால்கள்

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் கடன் சுமை, கல்வி, சுகாதாரத்தில் பின்தங்கிய நிலை ஆகிய எல்லாமுமாகச் சேர்ந்து உத்தர பிரதேசத்தை அலைக்கழிக்கின்றன. கான்பூர் வட்டாரம் மட்டுமே எல்லாவிதமான தொழிற்சாலைகளுக்கும் இடம் தருகிறது. விவசாயத்தையே முக்கியமாகக் கொண்டுள்ள இம்மாநிலத்தில் இப்போதுதான் சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளைத் தொடங்குகின்றனர். பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி அமல் எல்லா மாநிலங்களையும்போல இம்மாநிலங்களையும் பாதித்துள்ளன. அலிகர் பூட்டு, கான்பூர் தோல் தொழிற்சாலைகள் இப்போது மூடுவிழாக்களைக் கண்டுவருகின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறைகளால் பால் மறத்த மாடுகளை இறைச்சிக்கூடங்களுக்கு அனுப்புவதில்லை. மாட்டுக்கறி உற்பத்திச் சரிவால் ஏராளமான இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு அதைச் சார்ந்திருந்த தோல் பதனிடும் தொழிலும் செருப்பு, சூட்கேஸ், பைகள், வார்கள் தயாரிப்பு ஆலைகளும் மூடப்பட்டுவிட்டன. ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரத்தையும் இவை பாதித்துள்ளன. அத்துடன் கரும்பு சாகுபடியாளர்களுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவைத் தொகை பெரிய பிரச்சினையாகிக்கொண்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு இன்னும் தொடர்கிறது.

அரசியல் நிலைமை என்ன?

அதிக மக்கள்தொகையையும் அதன் அடிப்படையில் அதிக மக்களவைத் தொகுதிகளையும் கொண்டிருப்பதால் மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பகுதியாக மத்திய இந்தியா விளங்குகிறது. உத்தர பிரதேசம் நேரு-இந்திரா குடும்பத்தின் நேரடி செல்வாக்கில் இருந்தது என்றாலும் அங்கு நிலையான ஆட்சியை காங்கிரஸால் அளிக்க முடியவில்லை. இதுவரை மொத்தம் 10 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமலாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உட்பூசலும் ஊழலும் நிர்வாகத் திறமையின்மையும் மாநிலத்தில் பின்தங்கிய நிலைமைக்கு முக்கியக் காரணம். இதற்கு மாற்றாக வந்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கு அல்ல. சரண்சிங் தலைமையிலான பாரதீய லோக் தளம் ஜாட்டுகளையும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி யாதவர்களையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பட்டியலினத்தவரையும் அடித்தளமாகக் கொண்டு வளர்ந்தன. பிற சமூகத்தவரின் ஆதரவு இல்லாததால் அவர்களுடைய ஆட்சியும் நிலையில்லாமல் கவிழ்ந்தது. இந்த நிலையில், அயோத்தி பிரச்சினையை மையமாக வைத்து வளர்ந்த பாஜக, தற்போது அம்மாநிலத்தின் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சிசெய்கின்றன. தற்போது பாஜக ஆள்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தது. வியாபம் ஊழல், பாசனத் திட்டங்களில் ஊழல், விவசாயிகள் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தியது, விவசாயிகளின் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றால் மக்களின் அதிருப்திக்கு ஆளான பாஜக, கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தது.

சத்தீஸ்கரில் விவசாயிகளின் கடன் சுமை, பணமதிப்புநீக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்பு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, ரமண்சிங் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஆகியவை, கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைப் படுதோல்வியடையச் செய்திருக்கிறது. காங்கிரஸ், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சத்தீஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. பொதுவில், பாஜக பெரும் நம்பிக்கையோடும் பலத்தோடும் இருக்கும் பிராந்தியம் இது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close