[X] Close

எனக்காக ராகுல் வருகிறார்; நானோ மோடியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி


  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-கே.கே.மகேஷ்

தேனியில் ஒருபக்கம் ஓ.பி.எஸ். மகனும், இன்னொருபுறம் தங்க தமிழ்செல்வனும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்க, காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். ஆண்டிப் பட்டியில் போட்டியிட்டபோது ஜெயலலிதா தங்கிப் பிரச்சாரம் செய்த அதே தேனி சிங்கப்பூர் பங்களாவில் அவரைச் சந்தித்தேன். “உங்க வயிற்றைப் பார்த்தால் வேலைபாக்குற மாதிரித் தெரியலியே?” என்று கட்சிக்காரர்களைக் கலாய்த்துக்கொண்டிருந்தவர், நம் கேள்விகளையும் அதே பாணியில் எதிர்கொண்டார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தீர்களா?

பார்த்தேன். மீந்துபோன இட்லியில் உப்புமா கிண்டுவதுபோல பழைய 2014 தேர்தல் அறிக்கையை எடுத்து, புதுசு மாதிரி வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்கிற கொண்டை மட்டும் மறைக்க முடியாமல் மக்கள் கண்களுக்குத் தெரியத்தான் செய்கிறது.

காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி. அதை அழிப்பதே எங்கள் லட்சியம் என்று பாஜக சொல்கிறதே?

ஒரு கோடி ரூபாய் கோட்டு, அதைக் கூர்ந்து பார்த்தால் அவருடைய பெயர் எழுதியிருப்பது தெரியும், அவர் கையில் கட்டியிருக்கும் கடிகாரம் இத்தனை லட்சம், பேனா இத்தனை லட்சம், காலணிகள் இத்தனை ஆயிரம் என்று அவரது பகட்டை இந்தியா முழுக்கக் கேலி பேசுகிறார்கள். ஆனால் அவர் சொல்கிறார், ஏழைத்தாயின் மகன் என்று. அப்படிப்பட்டவரின் ஆட்கள் வேறு எப்படி இருப்பார்கள்? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த ஆட்சி எவ்வளவு ஊழல் மிகுந்த கட்சி என்பதை வெளிக்கொண்டுவருவோம்.

“காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவே முடியாது. அப்படியே நிறைவேறினாலும் அது நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறாரே?

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சமூகம், பொருளாதாரம், வங்கித் துறை என்று பல்துறை நிபுணர்களின் கருத்தைக் கேட்டு உருவாக்கப்பட்டது. அது வெறும் வாக்குறுதியல்ல. திட்டம். ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவது மட்டும்தான் பாக்கி. ஏழைகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்குவதன் மூலம், அடித்தட்டு மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரமே மேம்படும். பணக்காரர்களுக்குக் கோடி கோடியாக மானியம் கொடுப்பதற்காகவே ஆட்சி நடத்துவோருக்கு இந்தத் திட்டம் கசக்கத்தான் செய்யும்.

பெரியார் சிலை உடைப்பு பற்றி உங்கள் கருத்து?

சாதி, மதத்தின் பெயரால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும் முன்னேற்றுவதற்காக உழைத்தவர் பெரியார். அவரை வெறுமனே கடவுள் மறுப்பாளர் என்று நம்பவைப்பதும், அவரது சிலையை உடைப்பதும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல்.

திமுக முன்னாள் அமைச்சர் தொடங்கி காங்கிரஸ் முதல்வர் வீடு வரையில் வீடுகளிலிருந்து கோடி கோடியாகப் பணம் பிடிபடுகிறதே?

குடோன் குடோனாக, கண்டெய்னர் கண்டெய்னராகப் பணம் இருக்கும் இடங்களில் ஏன் சோதனைகள் நடக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்கள் அப்படிக் கேட்பது அதிமுகவினரின் வீடுகளைத்தான். பாவம், வருமான வரித் துறைக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் ஆளுங்கட்சியினரின் வீடு இருக்கும் இடம் தெரியவில்லைபோல. வருமான வரித் துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழலை அவை உருவாக்கிவிடக் கூடாது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

“நாங்கள் மாப்பிள்ளையைக் காட்டி பெண் கேட்கிறோம்; காங்கிரஸ் கூட்டணியோ பெண்ணைக் கொடுங்கள், எங்கள் 9 பேரில் யாராவது திருமணம் செய்துகொள்கிறோம் என்று ஓட்டு கேட்கிறார்கள்” என்ற செல்லூர் ராஜுவுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் எந்தத் தேர்தலிலும் இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது கிடையாது. பாஜக அவசரப்பட்டு, மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பது எங்களுக்கு ரொம்ப ரொம்ப சாதகமான விஷயம். “மறுபடியும் இவரா?” என்று மக்கள் பயந்துபோயிருக்கிறார்கள். 12-ம் தேதி என்னை ஆதரித்து ராகுல் பிரச்சாரம் செய்ய வருகிறார். அவரைப் பார்க்க, அவர் பேச்சைக் கேட்க மக்களும் இளைஞர்களும் அவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், நானோ 13-ம் தேதி தேனிக்கு வரும் மோடியைத்தான் ஆவலாக எதிர்பார்க்கிறேன். அவர் வந்துவிட்டுப் போய்விட்டால், நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று அர்த்தம்.

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close