[X] Close

அறிவொளி ஐயா..! அறிவு... ஒளி... முடிவே இல்லை!


arivoli-ayya-died

  • வி.ராம்ஜி
  • Posted: 09 May, 2018 10:02 am
  • அ+ அ-

தமிழால் அடையாளம் காணப்பட்டவர்கள் பலர். தமிழின் அடையாளங்களாகவே சொல்லப்பட்டவர்கள் ஒரு சிலர். அந்த ஒரு சிலரில், அறிஞர் அறிவொளியும் ஒருவர்.

மலைக்கோட்டை நகரமான திருச்சியைச் சேர்ந்த அறிவொளி, தமிழிலும் தமிழின்பால் கொண்ட காதலிலும் மலைபோல் உயர்ந்திருந்தார். அவரின் தமிழைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரின் எழுத்துகளை வாசித்துக்கொண்டே இருக்கலாம்.

தமிழின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் கைதேர்ந்த தமிழாலும் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டார். எந்த ஜிகினாக்களும் கெக்கேபிக்கே சிரிப்புகளும் இல்லாமல், சொல்லவந்த கருத்தை, மிக அழகாகவும் தெளிவாகவும் உன்னதமாகவும் உயிர்ப்புடனும் நமக்குள் விதைத்ததுதான், பட்டிமன்றத்துக்கும் தமிழுக்கும் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் அவர் செய்த ஆகச்சிறந்த தொண்டு. சொல்லப்போனால், அவரின் தனித்துவமும் அதுவேதான்!

புராணங்களை இவர் எடுத்துக்கொண்டு, அந்தக் கதாபாத்திரத்தையும் அதன் காரண காரியத்தையும் சொல்லத் தொடங்கினால், மொத்தக்கூட்டமும் வேறு சிந்தனைகளின் பக்கம் போகாது. அப்படியொரு கடிவாளச் சிந்தனைக்காரர்.

டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். பாரம்பரிய மருத்துவமும் மகத்துவம் மிக்க புராணமும் இருகண்களாகவே உணர்ந்து வாழ்ந்து, தமிழின் கண்களாகவே பார்க்கப்படுகிறார் அறிவொளி, என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் தமிழறிஞர்கள்.

நம் தமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில், புற்றுநோய்க்கு மருந்து உண்டு என்பதைச் சொல்லி, வலியுறுத்தி வந்தார்.

பட்டிமன்றம் கொடிகட்டிப் பறந்து, மேடையேறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், 1986ம் வருடத்தில், வழக்காடு மன்றம் என்பதை அறிமுகப்படுத்தி, அதை எப்படி நடத்தவேண்டும் என்கிற ஒழுங்கையும் ஒழுக்கத்தையும், கடமையையும் கருத்தினையும் தந்தார் என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.

இவர் போகாத கோயில்களே இல்லை என்பார்கள். பல கோயில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றையெல்லாம் தொகுத்து எழுதி, நூலாக்கித் தந்திருக்கிறார். இதுவரை 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் அறிவொளி.

புராணங்களை ஓர் சரித்திரம் போல எளிமையாகவும் சரித்திரங்களை புராணங்களைப் போல் விவரணையாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக, நகைச்சுவை எனும் கோட்டிங்கை ஆங்காங்கே தூவித்தூவி, தடவித்தடவிப் பேசுவதில்தான் இருக்கிறது அறிவொளி ஸ்டைல்.

உடல் நலக்குறைபாடால், நேற்று 8.5.18 செவ்வாய்க்கிழமை இரவு காலமானார் பேராசிரியர், தமிழறிஞர், நகைச்சுவை வேந்தர் அறிவொளி ஐயா. அவருக்கு வயது 80.

எந்தச் சிக்கலுமின்றி சொல்ல வந்த கருத்தினை, நமக்குள் பதியனிட்டு, அறுவடை பார்த்த அறிவொளி ஐயாவுக்கு, நாகை மாவட்டம் சிக்கல்தான் பூர்வீகம். ஆனால் திருச்சியில்தான் வாழ்ந்து வந்தார். இவரின் செயல்களாலும் சிந்தனைகளாலும் நம் மனங்களிலும் நீக்கமற என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்... அறிவொளி ஐயா!

அறிவுக்கும் ஒளிக்கும் என்றுமே முடிவில்லை!

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close