[X] Close

இதுதான் இந்தத் தொகுதி: கிருஷ்ணகிரி


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 09:07 am
  • அ+ அ-

-எஸ்.கே.ரமேஷ்

பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், மைசூர் உடையார்கள் ஆகியோரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி.  கிருஷ்ணகிரியில், விஜயநகரப் பேரரசர்களால் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பர்கூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

பொருளாதாரத்தின் திசை: 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாங்கூழ் தொழிற்சாலை மூலம் பழச்சாறு தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு அந்நியச் செலாவணியாக ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் ரோஜா, ஜெர்பரா, ஆஸ்டல் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் ஓசூரில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட  சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் குண்டூசி முதல் விமானத்துக்கான உதிரிபாகங்கள் எனப் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், மலைகள் நிறைந்துள்ள இம்மாவட்டத்திலிருந்து கிரானைட் கற்கள் அதிகளவில் வெட்டியெடுக்கப்படுகிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கொண்டுவரப்பட்ட ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்றடையவில்லை. ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனப்பள்ளி உள்ளிட்ட சட்டமன்றத் தொதிகளில் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். ஜிஎஸ்டியால் ஓசூரில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

நீண்ட காலக் கோரிக்கைகள்: கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்துதான் ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மனு அளிக்க வரும் மக்கள், சுங்கக் கட்டணம் செலுத்தி வர வேண்டி நிலை உள்ளது. சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைப் பணிகள் அரசியல் காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் சூழ்ந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதால், சூளகிரியில் உயிர்காக்கும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை தொடங்கிட வேண்டும். காவேரிப்பட்டணத்தில் வாசனை திரவியத் தொழிற்சாலை, பர்கூரில் புதிய தொழிற்பேட்டை,  பர்கூரில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் ஆகியவை மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகள். ஓசூரிலிருந்து மலர் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பாக விமான சேவை தொடங்கிட வேண்டும்.  இன்னமும் ரயில் வசதி இல்லாத ஒரே மாவட்டத் தலைநகரம் கிருஷ்ணகிரி மட்டுமே.

ஒரு சுவாரஸ்யம்: கிருஷ்ணகிரி மாவட்டமானது மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே  ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும் 5 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் மாவட்டமாகத் திகழ்கிறது. காஷ்மீர், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில மக்களும் இம்மாவட்டத் தில் வசித்துவருவதால் இம்மாவட்டம் பன்மைக் கலாச்சார சமுதாயமாக விளங்குகிறது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். அடுத்தபடியாக வெள்ளாளக் கவுண்டர்களும், ஆதி திராவிடர்களும் உள்ளனர். இதேபோல ஒக்கலிக்க கவுடா, ரெட்டி, தெலுங்கு செட்டியார், நாயுடு சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் வன்னியர் சமூகத்தினர் அதிகப் பங்கு வகிக்கிறார்கள்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிக முறை வென்றது காங்கிரஸ்தான். இதுவரையில், காங்கிரஸ் கட்சி 8 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் சி.ஆர்.நரசிம்மன் 2 முறையும், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி தொடர்ச்சியாக 4 முறையும்  வெற்றி பெற்றனர். திமுகவைச் சேர்ந்த சுகவனம் 2 முறை வெற்றிபெற்றார்.

வாக்காளர்கள் யார்?

மொத்தம்15,10,085

ஆண்கள் 7,65,026

பெண்கள் 7,44,835

மூன்றாம் பாலினத்தவர்கள் 224

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 72.41 %

ஆண்கள் 79.65 %

பெண்கள் 64.86 %

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close