[X] Close

1000 ஆண்டுகளில் முதல் முறையாக உலகிற்கு தெரிய வந்த தலைசிறந்த திபெத்திய படைப்புகள்


murals-tibet-paintins-thomas-laird

  • பால்நிலவன்
  • Posted: 07 May, 2018 16:08 pm
  • அ+ அ-

புத்தரின் வாழ்வையும் தியானத்தின் ரகசியங்களையும் எடுத்துக்காட்டுகின்றன பண்டைய திபெத்திய சுவரோவியங்கள். இவற்றில் பலவும் தொலைதூர மடங்களிலும் ஆலயங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அவற்றின் சுவர்கள் பலவும் உடைந்துபோயிருக்கின்றன.

காலத்தின் கோலத்தினால் நம் கண்ணிலிருந்து அவை மறையும் வரை உன்னத ஓவியங்களாக அவைகள் திகழ்ந்தன என்பதுதான் உண்மை. பௌத்த கலாச்சாரத்தின் மிகப் பெரிய பொக்கிஷங்களை பெற்றிருக்கிறார்கள் திபெத்தியர்கள் என்பதை உலகத்துக்கு உணர்த்தியிருப்பவர் அமெரிக்க புகைப்படக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் தாமஸ் லாய்ர்டு.

தாமஸ் லாய்ர்டு ஒரு பத்தாண்டுகளை மாடு மேய்ப்பவர்களுடன் இதற்காக செலவிட்டார். பாறைக் குகைகளில் உள்ள மிகச் சிறந்த ஓவியங்களைக் காண விவசாயிகள் மற்றும் பௌத்தத் துறவிகளுடன் சேர்ந்து திபெத்திய குன்றுகள் முழுவதையும் தேடிச் சென்றனர். அவற்றில் சிலவற்றையே காணவும் படம்பிடிக்கவும் முடிந்தது.

இதன் விளைவாக, திபெத்தின் சுவரோவியங்களில் 998 ஓவியங்கள், மிகப் பெரியவையாக பார்த்து எடுக்கப்பட்டன - 2 அடி நீளத்திற்கும் அதிகமாக அச்சடிக்கப்பட்டன. மொத்த நகல்களும் தலாய் லாமாவின் ஆசீர்வாதமும் கையொப்பமும் பெற்றவை. அவற்றில் சில சுவரோவியங்களில் புத்த மதத் தோற்றத்தின் முதல் பாடங்கள் வெளிப்பட்டுள்ளன. அவற்றை அவரால் படிக்க முடிந்தது. 

முதன்முதலாக லாய்ர்டு மூலம் முதல் தடவையாக பல ஓவியங்களை நாம் பார்க்கிறோம். இந்த ஓவியங்களை தனது காமிராவுக்குள் திரட்டும் முயற்சி என்பது அவ்வளவு எளிதானதல்ல. மலைப்பாறைகளிலும் பிரமாண்ட குகைகளின் உட்புறங்களிலும் வரையப்பட்ட பல ஓவியங்கள் கைக்கெட்டாத உயரங்களில் அண்ணாந்து பார்க்கும்விதமாக அமைந்திருந்தன. அதுமட்டுமல்ல, பரந்த ஓவியங்களின் துண்டுகளாகவே பல ஓவியங்களைப் பார்க்கமுடிந்தது. அவற்றைக் காண போதிய வெளிச்சங்களும் இல்லை. டார்ச் அடித்தோ பைனாக்குலரிலோதான் பார்க்கமுடியும்.

ஆன்மிகம், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த ஓவியங்களை வெளிப்படுத்த தீர்மானித்து, தைத்து இணைக்கும் 'ஸ்டிட்ச் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பத்தைக் கையாண்டு முதலில் ஒன்றை அச்சடித்தார். மலைக்குகையில் பார்த்த சுவரோவியங்களின் அடர்ந்த நுட்பங்கள் எதிர்பாரா வண்ணம் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டியதால் இத்தொழில்நுட்பம் பிரதிபலித்ததால் 300 சுவரோவியங்களையும் இதே வகையில் அச்சடித்தார்.

இதுகுறித்து லாய்ர்டு கூறுகையில், ”உலக பாரம்பரியத்தின் அறியப்படாத மற்றும் ஆவணப்படுத்தாத மிகப்பெரிய அத்தியாயம் அங்கே அமைந்திருந்தது. 1000 ஆண்டுகள் பழமைமிக்க இந்த ஓவியங்களை எதிர்காலத் தலைமுறையினர் இழக்கப்போவதை நினைத்து எனக்கு அச்சம் ஏற்படுகிறது. நீங்கள் திபெத்திற்கு செல்லநேர்ந்தால், பல சுவரோவியங்களை சுலபமாகக் காண இயலாது. பெரும்பாலும் பல இடங்களில் மிகப்பெரிய உயர தூண் ஒன்று இருக்கும் அவற்றுக்கு மேலே 10 அடி உயரத்தில்தான் ஓவியங்களே ஆரம்பிக்கும்.

நீங்கள் அவற்றிற்கு கீழே நிற்கும்போது, இருளில் ஒரு சிதைந்த கோணத்தையே காணமுடியும். ஆனால் முதன்முறையாக ஐரோப்பாவின் பெரிய சுவர் ஓவியங்களைக் கற்பனை செய்து பாருங்கள். நாம் என்ன செய்தோம். இது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு அற்புதமான தருணமாகும்.

இவை வெறும் புகைப்படங்கள் அல்ல. பல துண்டு துண்டான படங்களை இணைத்து புதிய சித்திரங்களையே நான் உருவாக்கி இருக்கிறேன். இவற்றை அங்கு போய் நீங்கள் தேடினால் நிச்சயம் கிடைக்காத படங்கள் இவை. கண்ணுக்குத் தெரியாத ஓவியங்களைக் கொண்டு தற்போது பார்க்கத் தகுந்த வகையில் இவற்றை உருவாக்கியுள்ளேன். தற்போது முதன்முறையாக, ஒவ்வொரு தனி சுவரோவியங்களையும் உங்களால் பார்க்க முடியும். அக்காலத்தில் இவற்றை வரைந்த உண்மையான ஓவியக் கலைஞர்களின் கைரேகைகளை பார்க்க முடியும்.

கோங்கர் சோயிடே மடத்தில் காணப்படும் ’வானவில் ஒளி சூழப்பட்ட புத்தர் ஞானம்பெற்றக் காட்சி’யை சித்தரிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களை இழந்துள்ளோம். சுவற்றிலிருந்து பெயர்ந்து தரையில் விழுந்து குவிந்து கிடக்கும் ஓவியத் துண்டுகளை இணைத்து வைத்து உங்களுக்கு அந்தக் காட்சியை என்னால் காட்ட முடியும். இந்த ஓவியத்தை 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கியென்ட்ஸ் சென்மோ எனும் அற்புதமான ஓவியக் கலைஞர் தீட்டியுள்ளார்.

அவருடைய கைகள் லியார்னாண்டோவைப் போல. உள்ளுக்குள் மறைந்திருக்கும் நுட்பங்களை வெளிப்படுத்துகிறது. நூற்றாண்டுகளைக் கடந்ததால் மழைநீரோ, பனித்துளிகளோ ஆண்டுக்கணக்கில் பட்டுபட்டு சரிந்து சுவரில் ஒட்டியிருந்த ஓவியங்கள் தனியே விழுந்து விட்டன. புத்தரின் முகம், கீழே விழுந்துகிடக்கும் ஒரு துண்டுப்பகுதியில் காணக்கிடைக்கிறது.''

இவ்வாறு லாய்ர்டு தெரிவித்தார்.

திபெத்திய பீடபூமி முழுவதும் ஆயிரக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருக்கின்றன. பல்வேறு நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ஓவியங்கள். ஆனால் அவை அனைத்தையும் பாதுகாப்பது நடைமுறை சாத்தியமில்லாதது. சுவரோவியங்களைப் புரிந்துகொள்வதற்காக ''the murals were a layer in the Dalai Lama's education, before he learned to read'' என்றே ஒரு புத்தகத்தை இந்த அமெரிக்க புகைப்படக்கலைஞரும் எழுத்தாளருமான தாமஸ் லாய்ர்டு எழுதியிருக்கிறார்.

இதில் உள்ள ஒருசொற்றொடர் மிகப்பெரிய சுவரோவியங்களின் மூலம் ஆற்றலைப் பெறமுடியும் என்பதை உணர்ந்தும் விதமாக இந்நூலில் ''தோங்ட்ரோல்'' எனும குறிப்பிட்ட சொற்றோடர் உள்ளது. இக்குறிப்பிட்ட சொற்றொடரை திபெத்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் பொருள் 'பார்ப்பது மூலம் விடுதலை'.

- நன்றி தி கார்டியன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close