[X] Close

பத்திரிகைகள் செயல்பாடு சுதந்திரமாக இருக்கிறதா? அல்லது எல்லை மீறப்படுகிறதா?


world-press-freedom-day

மியான்மரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் யாவ் சோ

  • இந்து குணசேகர்
  • Posted: 03 May, 2018 15:20 pm
  • அ+ அ-

பத்திரிகைகளின் சுதந்திரத்தை பரப்பும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையால் 1993 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதியை பத்திரிகை சுதந்திர தினமாக பிரகனடப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பத்திரிக்கை சுதந்திரம் சார்ந்து இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று  பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுகிறதா? அல்லது பத்திரிகை சுதந்திரம் எல்லை மீறப்படுகிறதா?.  நன்கு சிந்தித்து பார்த்தீர்கள் என்றால் இவை இரண்டும் இன்று சமநிலையில் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் பத்திரிக்கைகளுக்கான கிடுக்கு பிடிகள் அதிகரித்து கொண்டிருக்க... மறுபுறம் தனி நபர் மீதான காழ்ப்புணர்ச்சிகள் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருவதைக் காணலாம்.

நான்காவது தூண் சுதந்திரமாக செயல்படுகிறதா?

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைத் துறை,  பல இடங்களில் சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பத்திரிகையாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். 

மியான்மரில் புதன்கிழமை கூடிய பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ய மியான்மர் அரசு பல தடைகளை விதிக்கிறது. வன்முறை தாக்குதலை நடத்துகிறது என்று சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதுமட்டுமில்லாது மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இன அழிப்பை பற்றி செய்தி வெளியிட்ட மியான்மர் பத்திரிகையாளர்கள் பலர் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அரசாங்கத்தால் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

 பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறைக்களுக்கு உதாரணமாக்கப்பட்டுள்ளார்கள் ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்களான வா லோன், யாவ் சோ ஆகிய இருவரும். ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தினர் செய்த கொடுமைகளை வெளியிட்ட இருவருக்கு மியான்மர் அரசு அளித்த பரிசு 10 ஆண்டு சிறைத்தண்டனை. 

மியான்மர் மட்டுமில்லாது மத்திய கிழக்கு  நாடுகள், வடகொரியா, ரஷ்யா, சீனா, போன்ற நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் கேள்விக்குரிய நிலையில்தான் உள்ளது. இந்தியாவில் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று கேட்கிறீர்கள்... இல்லவே இல்லை. அதுவும் சமீப ஆண்டுகளாக பத்திரிகையாளர்கள் மீதான வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. 

“ரூ.500 அளித்தால் ஆதார் விவரங்களை தரகர் மூலம் 10 நிமிடங்களில் பெற்றுவிடலாம்” என்று சண்டிகரில் இருந்து வெளியாகும் ‘தி டிரிபியூன்’ பத்திரிகை கடந்த ஜனவரி மாதம் செய்தி வெளியானது. 

இதைத் தொடர்ந்து ஆதார் ஆணையம் அளித்த புகாரின்பேரில் அந்த செய்தியை வெளியிட்ட  பத்திரிகையின் பெண் நிருபர் ரச்னா கைரா மீது டெல்லி போலீஸார் வழக்கு செய்தனர். இவ்வாறு தொடர்ந்து பத்திரிகை சுதந்திரத்து எதிராக அரசுகள் பிரம்பை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.


பத்திரிகை சுதந்திரம் எல்லை மீறப்படுகிறதா?

தார்மீக பொறுப்பற்று  எல்லை மீறும்  சில பத்திரிகைகளால்  நேர்மையாக இயங்கும் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

தனிப்பட்ட நபர்,  இயக்கம், கட்சி  சார்ந்து காழ்புணர்ச்சி காரணமாக அறம் தவறி அடிப்படை ஆதரமற்று செய்தி  வெளியிடும் பத்திரிகைகள் சமீபத்தில் பெருகி வருகின்றன.

அத்தகைய பத்திரிகைகள் முந்தித் தர வேண்டும் என்ற போட்டியில் செய்திகளை வெறும்  பொழுது போக்காக மட்டுமே  கையாளுப்படுகின்றன. இதன் காரணமாகவும், சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தாலும் ஒரு செய்தி அதன் முடிவு தெரியாமலேயே பல நேரங்களில் பார்வையாளர்களிடமிருந்து  கடந்து சென்று விடுகின்றது. அல்லது நம்பகத் தன்மையை இழந்து விடுகிறது.

எது செய்தி என்ற புரிதல், இங்கு பல பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களும் இல்லாத காரணத்தால்  பல நேரங்களில்  சமூக பொறுப்பு இல்லாமல் செய்திகள் எல்லை மீறப்பட்டு வாசகர்கள் தவறாக நடத்தப்படும் சூழழலும் உருவாகிறது.

 இதனை உணர்ந்து  பத்திரிகைகள்  செயல்பட வேண்டும். 

பத்திரிகை சுதந்திரம்தான்  மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுத்திருக்கிறது எனவே உண்மையான ஜனநாயகத்தை காகக் பத்திரிகை சுதந்திரத்தைக் காப்போம்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close