[X] Close

 புதுச்சேரியில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்:  9 அரசுத்துறைகளில் மட்டுமே புகார் குழு அமைப்பு 


workplace-abuse-women-abuse

  • kamadenu
  • Posted: 02 May, 2018 12:14 pm
  • அ+ அ-

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகார்களை ஆய்வு செய்வதற்கு குழுக்களை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், புதுச்சேரியில் மொத்தமே 9 அரசுத் துறைகளில் மட்டுமே உள்ளூர் புகார்கள் குழு என்ற பெயரில் இக்குழுக்கள் உள்ளன. 

பெண்களுக்கு பணியிடங்களில் நேரிடும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிக்க, மாவட்ட அளவிலான உள்ளூர் புகார்கள் குழு (District local complaints committee) என்ற தனி பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் அமைக்கப்பட்டது. 

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையை தடுக்கும் சட்டத்தின் கீழ் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் புகார் குழுவின் தலைவியான டாக்டர் வித்யா ராம்குமாரிடம் புகார்கள் வந்தன. 

குறிப்பாக உதவி கால்நடை மருத்துவர் ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் தந்ததைத் தொடர்ந்து கால்நடைத்துறையின் இயக்குநராக இருந்த பத்மநாபனை பணியிடைநீக்கம் செய்து ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

உள்ளூர் புகார்கள் குழுவுக்கு இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து வாய்மொழி புகார்கள் உட்பட 4 புகார்கள் வந்துள்ளன என்று குறிப்பிடுகின்றனர்.

 பணியிடத்தில் பாலியல் கொடுமை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த விசாகா வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் விதிமுறைகளை வகுத்து அச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

அதன் அடிப்படையில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் கொடுமை தொடர்பாக புகார் கொடுப்பதற்காக, அந்த நிறுவனங்களிலேயே புகார் குழுவை அமைக்க வேண்டும். ஆனால், சிறிய மாநிலமான புதுச்சேரியில் இந்த விதிமுறை கண்டு கொள்ளப்படவில்லை. 

ஆட்சியர் அலுவலகமே அலட்சியம் 

புதுச்சேரியிலுள்ள ஒரு மூத்த அதிகாரியிடம் இதுதொடர்பாக கேட்டதற்கு, "புதுச்சேரியில் 9 அரசு துறைகள் மட்டுமே பணியிட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் குழுக்களை அமைத்துள்ளன. 

உள்ளூர் புகார்கள் குழுவை அமைக்கலாம் என்று கூறிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட, தங்கள் அலுவலகத்தில் அத்தகைய குழுவை கூட அமைக்காத சூழலே நிலவுகிறது. 

முக்கியமாக கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை ஏனாம் பிராந்தியத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் மட்டுமே யூனியன் பிரதேசத்திலேயே இக்குழுவை அமைத்துள்ளது. இதர பிராந்தியங்களில் கல்வி நிறுவனங்கள் இன்னும் புகார் குழுவை உருவாக்கவில்லை. 

புகார் குழுவை அமைக்க அனைத்து துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டும் பலனில்லை" என்று குறிப்பிடுகிறார். 

பணியிடங்களில் ஒரு புகார் குழுவொன்றை அமைக்கும் போது தலைவராக பெண்ணைதான் நியமிக்க வேண்டும். அதன் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களைக் கொண்டிருக்க வேண்டும். 

அதிகாரி வேதனை

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஜூலை 31, 2015 அன்று அனைத்து அரசுத் துறையினருக்கும் கடிதங்கள் அனுப்பி வைத்தோம். ‘பெண் ஊழியர்களின் புகார்களைக் கேட்க ஒரு குழுவொன்றைக் கொண்டிருப்பது அவசியம்’ என்பதை தெரிவித்துள்ளோம்.

பல துறைகளில் பலமுறை நினைவூட்டல்கள் செய்த போதும் அக்குழுக்களை அமைக்கவில்லை. ஒரு சில துறைகள் புகார் குழுக்களை அமைத்தாலும் அவை வழிகாட்டுதல்படி சரியாக இல்லை. அதனால் அனைத்துத் துறை தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல்படி புகார் குழு அமைக்க வழிமுறை வழங்கினோம். எனினும் 9 துறைகளில் மட்டுமே புகார் குழு உள்ளது" என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

மகளிர் எழுப்பும் கேள்வி

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகரித்துள்ள சூழலில், புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் புகார் குழு அமைக்க ஆளுநரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எங்கள் பாதிப்பு அவர்களுக்கு தெரியவில்லையா? என்று உழைக்கும் மகளிர் தவிப்புடன் கேள்வி எழுப்புகின்றனர். 

- செ. ஞானபிரகாஷ் 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close