[X] Close

எடப்பாடி பழனிசாமி ஆகிய நான்…


edappadi-people-interview

  • kamadenu
  • Posted: 02 May, 2018 10:41 am
  • அ+ அ-

எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. “ஆண்டுதான் நிறைவு! ஆட்சி நிறைவா” என்ற நம் ‘மைண்ட் வாய்ஸ்’தான் எல்லாருடைய ‘வாய்ஸாக’வும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவரது ஆட்சியின் ‘ஆண்டு விழா’வை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியை, மன்னிக்கவும், எடப்பாடி பழனிசாமிகளைப் பேட்டியெடுக்க எடப்பாடிக்கே புறப்பட்டோம்!

கொங்கு மண்டல கிராமங்களில் பழனிசாமிகளுக்கு பஞ்சமே கிடையாது. அவங்க எல்லாம் என்ன செய்றாங்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு கேட்டுத்தான் பார்ப்போமே.

“அவரோட ஊரு இதுல்லங்கண்ணா. நெடுங்குளம் பக்கத்துல இருக்கிற சிலுவம்பாளையம். இங்கிருந்து எட்டு மைல் தூரம். எடப்பாடி தொகுதியிலயே அடுத்தடுத்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏவானதால அவர் பேரு எடப்பாடி பழனிசாமி ஆகிப்போச்சு!” என்றார்கள். “இல்லிங்க, நான் அவரைப் பார்க்க வர்லிங்க” என்று விஷயத்தைச் சொன்னதும், “எடப்பாடியில பழனிசாமிகளுக்கா பஞ்சம்? வாங்க!” என கூட்டிப்போனார் ஓர் இளைஞர்.

நாம் சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பேருந்து நிலையத்தை ஒட்டித் தெருவோர உணவகம் நடத்துபவர். கும்மென புகை கிளம்ப, தோசை சுட்டுக்கொண்டிருந்தவரை கேமராவும் கையுமாக நெருங்கி, “எடப்பாடி பழனிசாமி நீங்கதானுங்க?!” என்றதும், “ஐயோ, அது நானில்லைங்க. நான் வெறும் சப்ளையர் பழனிசாமிங்க!” என்றார்.

முதல் அமைச்சரைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதும், “நம்ம சி.எம்மை ரொம்ப நாளா தெரியும்ங்க. நம்ம பேருக்காரர், நம்ம ஊருக்காரர் வேற. அவர் எம்.எல்.ஏவா ஜெயிச்சப்பவே போய்ப் பார்த்து எலுமிச்சம் பழம் எல்லாம் கொடுத்திருக்கேனுங்க” என்றவர் ஆட்சியைப் பற்றி மூச்சுவிட மறுத்துவிட்டார்.

அடுத்த பழனிசாமியை, அதே எடப்பாடி தொகுதியின் ஆவணி பேரூர் விசைத்தறிக் கூடத்தில் சந்தித்தோம். பேட்டி என்றதும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டார். “நீங்க எழுதி புதுசா எதுவும் வம்பு கிம்பு வந்துடாதில்ல? ஏன்னா எங்க பெரியம்மா அதிமுக மகளிர் அணியில் இருக்காங்க” என்று உஷாராக ஆரம்பித்தவர், முதல்வரை வானளாவப் புகழ ஆரம்பித்துவிட்டார்.

அடுத்து, சலவைப்பட்டறை பழனிசாமி வீட்டைக் கைகாட்டினார்கள். சலவை செய்து நூல்களை, துணிகளை அடுக்கிக்கொண்டிருந்தவர், வியர்வையை துடைத்துக்கொண்டு வந்தார். “ஏனுங்... யார் நீங்க? சி.எம். பத்தி நான் எதுக்கு பேட்டி கொடுக்கோணும்? நான் நிம்மதியா தொழில் செஞ்சிட்டிருக்கிறது பிடிக்கலையா?” என்று விரட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஆலச்சம்பாளையத்தில் கணக்கு வழக்கில்லாமல் பழனிசாமிகள் இருந்தனர். பேட்டி, போட்டோ என்றதும் அத்தனை பேரும் தெறித்து ஓடியேவிட்டார்கள். டெய்லர் பழனிசாமி மட்டும் துணிந்து பேசினார். “எங்க வார்டுல மட்டும் பழனிசாமிங்கிற பேர்ல அம்பது பேருக்கும் குறையாம இருக்காங்க. அதுல நான் உட்பட நாற்பது பேரு அதிமுகதான்” என்றவர் முதல்வருடன் தன் மகன் எடுத்த போட்டோக்களை எல்லாம் காட்டத் தொடங்கிவிட்டார்.

அதே ஊரில் வசிக்கும் மூத்த காங்கிரஸ் தொண்டரான எம். பழனிசாமி வீட்டுக்குப் போனோம். தண்ணி கொடுத்து உபசரித்துவிட்டு, ஆற அமர பேசினார். “சின்னப்பையனா இருக்கும் போதிருந்தே பழனிசாமிய பார்க்கிறேன். என் வீட்டுக்கே பல தடவை ஓட்டுக் கேட்டு வந்திருக்கார். நட்பு முறையில கட்சியைத் தாண்டி நானும் ரெண்டு மூணு தடவை அவருக்கு ஓட்டுப் போட்டிருக்கேன்.

இப்ப அவர்தான் முதலமைச்சர்ங்கிறாங்க. எனக்கு அப்படித் தோணலை. ஏன்னா இதுவரைக்கும் முதலமைச்சரா இருந்தயாரும் காஞ்சிபுரம் அண்ணாதுரை,திருக்குவளை கருணாநிதி, விருதுநகர் காமராஜர்ன்னு சொன்னதில்ல. ஒரு முதலமைச்சர்ன்னா ஊர்ப் பேரை சேர்த்துல்லாத அளவுக்குபுகழோடு இருக்கணும் இல்லீங்களா?” என்றார் வித்தியாசமாக.

கடைசியாக பூலாம்பட்டி நகர திமுக செயலாளர் சி.ஆர்.பழனிசாமி சிக்கினார். “முதல்வரை எனக்கு சக்கரை வியாபாரம் செய்யற காலத்திலயே தெரியும். முதல்வர், எம்.எல்.ஏவாக பலமுறை இருந்தப்ப செய்ய முடியாத வேலை எத்தனையோ தொகுதியில இருக்கு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியே இல்லை.

எங்க பேரூராட்சியில தெரு லைட் போடக்கூட காசில்ல, ஊழியர்களுக்கும் சம்பளம் போட முடியல. கிராமத்து விவசாயிகளோட பிரச்சினை அத்தனையும் முதலமைச்சருக்கு அத்துபடி. ஆனா பாருங்க இன்னெய்க்கும் தடையில்லாச் சான்று கிடைக்காததால மின் இணைப்பு இல்லாம ஆயில் இஞ்சினை வச்சு ஓட்டற விவசாயிக பெருகிப் போயிட்டாங்க.

அவங்க துயரை துடைக்கிறதுக்கு விதிமுறைகளில் ஒரு சின்ன திருத்தம் செஞ்சா போதும். அதைக்கூட செய்யாம இருக்கிறார். ஆட்சியை தக்க வைக்கறதுக்கும், சக மந்திரி, எம்.எல்.ஏக்கள சரிப்படுத்தி சமாதானமா வைக்கிறக்குமே அவருக்கு நேரம் சரியா இருக்குது போல” என்று கிண்டல் ததும்ப பேசிக்கொண்டே இருந்தார். போதும் என்று சொன்னாலும் விடவில்லை. எப்படியோ தப்பி ஊருக்கு புறப்பட்டேன்.

யாராச்சும் சிக்கினா ‘கம்பராமாயணத்தை எழுதுனது யாருங்கோ’னு கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா அதுக்கான ஆளு யாரும் என்கிட்ட வசமா சிக்கல. உச்...

-கா.சு.வேலாயுதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close